0 1 min 1 mth

மலையில் எலியாவின் பலி, ஜெபம்:

பைபிளில் கர்த்தருக்காக வைராக்கியமாக நின்றவர்களில் ஒருவரான தீர்க்கத்தரிசி எலியாவின் வாழ்க்கையிலும் மலை ஒரு முக்கிய இடத்தை பெறுகிறது. 1 இராஜாக்கள்:17-வது அதிகாரத்தில் திடீரென வரும் எலியா, தேவனுடைய நியாயத் தீர்ப்பை அறிவித்துவிட்டு, தேவனுடைய வார்த்தையின்படி தலைமறைவாகி விடுகிறார்.

அப்போது எலியாவின் வார்த்தையை பெரியதாக எடுத்து கொள்ளாமல் விட்ட இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப்பிற்கு 3 ஆண்டுகளில் தேசத்தில் ஏற்பட்ட பஞ்சத்திற்கு பிறகு தான் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் மேன்மை என்ன என்பது புரிந்தது. இதுபோல இன்று பலருக்கும் தேவனுடைய நியாயத்தீர்ப்பு, சிட்சை, தண்டனை ஆகியவை குறித்து கூறினால், பெரிய விஷயமாக தெரிவதில்லை.

ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டால், தேவன் மன்னிப்பதற்கு தயை கொண்டவர் என்று சிலர் தைரியமாக கூட கூறுகிறார்கள். உண்மையில் நம் தேவன் கிருபையுள்ளவர், இரக்கமுள்ளவர் என்று நாம் அறிவது போல, அவர் பட்சிக்கிற அக்னியுமாக இருக்கிறார் என்பதை நாம் மறந்துவிட கூடாது.

தேவனுடைய நியாயத்தீர்ப்பிற்கு பிறகு சோர்ந்து போன ராஜாவாகிய ஆகாப், தேவனிடம் மன்னிப்பு கேட்க மனதில்லாமல், ஒரு குழப்பமான மனநிலையோடு அலைந்து திரிகிறார். அதாவது நாட்டில் நிலவும் பஞ்சத்திற்கான முழு காரணம் எலியா தான். எனவே எலியாவை பிடித்தால் தான் அதற்கு தீர்வு காண முடியும் என்று எண்ணம் கொள்கிறார். இதை எலியாவை சந்திக்கும் ஆகாப்பின் பேச்சில் இருந்து (1இராஜாக்கள்:18.17) அறியலாம்.

மேற்கூறிய குழப்பம் இஸ்ரவேல் மக்கள் இடையேயும் நிலவுகிறது. யார் உண்மையில் தேவன் என்று தீர்மானிக்க முடியாத அளவிற்கு, அவர்களின் விசுவாசம் தகர்ந்து போன நிலையில் இருந்தது. இதையறிந்த எலியா, இஸ்ரவேல் மக்களையும், அவர்களின் குழப்பத்திற்கு காரணமான ஆகாப் ராஜாவையும், அவருக்கு குழப்பத்தை ஏற்படுத்திய பாகாலின் 450 ஆசாரியர்களையும், கர்மேல் மலையில் வரவழைக்கிறார்.

இஸ்ரவேலின் தேவனை குறித்து அங்கே பிரசங்கம் செய்வதாலோ, நியாயப் பிரமாணத்தை விளக்கி கூறுவதாலோ எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்த எலியா, தேவனிடம் இருந்து ஒரு அற்புதம் வெளிப்பட்டால் தான், இஸ்ரவேல் மக்களின் இருதயத்தை தேவனிடம் திருப்ப முடியும் என்பதை உணர்கிறார்.

இன்று நம்மில் பலருக்கும் பிரசங்கம் செய்ய தெரிகிறது. தேவன் நல்லவர், நன்மை செய்கிறவர்கள், பாவத்தில் இருந்து விடுவிக்கிறவர் என்று கூற தெரிகிறது. ஆனால் அதை நம் வாழ்க்கையில் வாழ்ந்து காட்ட தெரிகிறதா என்றால், இல்லை என்பது தான் பதில். நம் தேவன் வியாதியில் இருந்து விடுக்கிற தேவன் என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு பிரசங்கம் செய்துவிட்டு, நாமே வியாதி படுக்கையில் படுத்தால் எப்படி இருக்கும்?

நம் தேவன் நீதிபரர், பொய்யுரையாத தேவன் என்று நாம் வசிக்கும் பகுதியில் கூறிவிட்டு, நாமே அநீதியான காரியங்களில் ஈடுபட்டு, பொய் பேசினால், நம்மில் இன்னும் தேவன் முழுமையாக வரவில்லை அல்லது தேவ கிரியை நம்மில் முழுமையாக நடைபெறவில்லை என்று தானே அர்த்தம்.

இந்த வகையில், நம் குடும்பத்தில், நாம் இருக்கும் தெருவில், வேலை செய்யும் இடத்தில் என்று நாம் உள்ள பல இடங்களில் உள்ளவர்கள் இரட்சிக்கப்பட நாமே சில நேரங்களில் தடைக்கற்களாக மாறி விடுகிறோம்.

ஜெபத்தை கேட்கிற தேவனே மெய்யான தேவன் என்று ஒரு நாட்டின் மக்கள் அனைவரின் முன்பாக சவால் விட வேண்டுமானால், எலியாவிற்குள் எந்தளவிற்கு விசுவாசம் இருந்திருக்க வேண்டும் என்று யோசித்து பாருங்கள். சூரிய கடவுள் என்று அறியப்படும் பாகாலிடம் தீயை அனுப்புமாறு கூறி வேண்டுதல் செய்ய, அதன் தீர்க்கத்தரிசிகளுக்கே சவால் விடுகிறார் எலியா. போதாக்குறைக்கு பாகாலை கிண்டலும் செய்கிறார்.

இன்று பலரும், தங்களின் ஊழியம் எலியாவின் ஊழியம், தங்களுக்கு இருப்பது எலியாவின் அபிஷேகம் என்றெல்லாம் கூறுகிறார்கள். மேற்கூறிய காரியங்களை சிந்தித்து பார்த்தாலே, அது உண்மையா என்பது எளிதில் விளங்கிவிடும். எலியாவின் ஊழியம் என்பது ஏதோ கர்மேல் மலையில் தீ இறங்க செய்தது என்று சாதாரணமாக நினைக்க முடியாது.

தேவனுக்காக வைராக்கியமாக நின்றதால், அவரிடம் இருந்து கணத்தை பெற்ற ஊழியம். இன்றும் இதுபோல கர்த்தருக்காக வைராக்கியத்தோடு ஊழியம் செய்ய யாரால் முடிகிறதோ, அவர்களை தேவனும் நிச்சயம் கணப்படுத்துகிறார்.

மலையில் அக்னி இறங்கிய போது, இஸ்ரவேல் மக்களிடையே ஒரு பெரிய மனமாற்றத்தை காண முடிகிறது. இதை கண்ட எலியா, உடனே பாகாலின் தீர்க்கத்தரிசிகளை வெட்டி கொன்று போடும்படி மக்களுக்கு கட்டளையிடுகிறார்.

இதேபோல நம் வாழ்க்கையில் ஒரு குழப்பமான சூழ்நிலையில் இருந்தால், தேவன் மீதான நம்பிக்கையை வைத்து ஜெபித்து அதில் தேவனுடைய சித்தத்தை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் தேவ சித்தம் என்ன என்பதை தெளிவாக தெரிந்த பிறகு, உடனடியாக சந்தேகத்தை ஏற்படுத்திய காரியங்களை மனதில் இருந்து நீக்கிவிட வேண்டும். அது வேறு நபரிடம் இருந்து நமக்கு அளிக்கப்பட்டிருந்தால், அது குறித்து மேற்கொண்டு பேச அவரை அனுமதிக்காமல் இருப்பது தான் ஆவிக்குரிய புத்திசாலித்தனம்.

ஆகாப்பின் நாட்களில் இருந்த இஸ்ரவேல் மக்களை போல, இன்றைய கிறிஸ்துவ உலகிலும், உண்மையான தேவன் யார் என்பதை அறியாமல் இருக்கும் மக்கள் இருக்கவே செய்கிறார்கள்.

எந்த கோயிலை பார்த்தாலும், அதை வணங்கும் கிறிஸ்தவர்கள் கூட இருக்கிறார்கள். இது போன்றவர்களை தேவனிடத்திற்கு திருப்ப, கர்மேல் மலையில் (ஜெபத்தில்) நிற்கும் வைராக்கியம் மிகுந்த (எழுப்புதல்) எலியாக்களை தான் தேவன் தேடுகிறார். தேவனுடைய அழைப்பை ஏற்று, அவருக்காக வைராக்கியமாக நிற்கும் ஆட்களை, அந்த எலியாவை போல பிரகாசிக்க செய்கிறார்.

எலியாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட மற்றொரு மலை அனுபவத்தை குறித்து, நாம் ஏற்கனவே ஒரு தினத்தியானத்தில் (1 இராஜாக்கள்:18.43) சுருக்கமாக தியானித்தோம். மலையில் ஜெபிக்கும் எலியாவிற்குள் 3 காரியங்கள் இருந்தன. தனிஜெபம், தாழ்மை, பூரண விசுவாசம் ஆகியவை இருந்ததால், எலியாவிற்கு எதிராக வந்த அவிசுவாசத்தை ஜெயித்து, 3 ஆண்டுகளுக்கு பிறகு தேசத்தில் மழை பெய்தது.

எனவே தேவனை அறியாமல் பாவ இருளில் சிக்கி தவிக்கும் மக்களை, கிறிஸ்துவின் பிரகாசத்திற்கு அழைத்து வரும் வகையில், நாம் கிறிஸ்துவின் மாதிரிகளாக மாறுவோம். நம்மை காண்பவர்கள், இயேசுவை நம்மில் காண்பார்களாக. மேலும் நம் வாழ்க்கையில் தனி ஜெபத்தை, தாழ்மையுடனும், பூரண விசுவாசத்துடனும் செய்து, தேவனிடம் இருந்து அதிசயங்களையும், அற்புதங்களையும் பெறுவோமாக. இன்றைய உலகின் எலியாவாக பிரகாசிப்போமாக.

(பாகம் – 8 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *