0 1 min 1 yr

உலகில் நாம் அனுபவிக்கும் கஷ்டங்கள், பாடுகள், தேவைகள் ஆகியவை குறித்து தேவனுக்கு தெரியுமா? என்ற சந்தேகம் எல்லோருக்கும் ஏற்படுகிறது. சில நேரங்களில் நம் ஜெபத்தில் கூட அவற்றை, தேவனிடமே கேட்டும் விடுகிறோம். ஜெபத்திற்கான பதில் சற்று தாமதித்தால், தேவனை திட்டுகிறவர்களும் இருக்கிறார்கள்.

கேட்டது:

இந்நிலையில் எனக்கு அறிமுகமான ஒரு நண்பரிடம் இன்றைய வாகனங்களின் பெருக்கம் மற்றும் உருவாக்கம் குறித்த காரியங்களை பேசிக் கொண்டிருந்தேன். இதனிடையே நண்பர் கூறிய ஒரு கார் தயாரிப்பாளரின் நிஜ வாழ்க்கை சம்பவம், என் மனதில் அப்படியே பதிந்துவிட்டது. அதை நினைக்கும் போதெல்லாம், தேவ அன்பினால் என மனம் நிரம்புகிறது. அதை உங்களுக்கும் கூறுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

அந்த சம்பவத்தை நண்பர் இப்படி தான் கூற ஆரம்பித்தார்… பல ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில், ஒருவர் காரில் சென்றுக் கொண்டிருந்தார். அது ஒரு அதிக விலையுள்ள காராக இருந்ததால், பல சவுகரியங்களுடன் காரை செலுத்துவதில், ஓட்டுநருக்கு கொஞ்சம் பெருமையும் இருந்தது.

ஆனால் நெடுஞ்சாலையின் ஆள்நடமாட்டம் குறைந்த ஒரு இடத்தில் வேகமாக சென்று கொண்டிருந்த அந்த கார் திடீரென ஆஃப் ஆனது. காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு, பெட்ரோல் அளவு, பேட்டரி சார்ஜ், ரேடியேட்டரில் தண்ணீர் என எல்லாவற்றை சரி பார்த்தார் ஓட்டுநர். எல்லாமே சரியாக இருந்தது.

தனிமையில் நீண்ட பயணத்தை மேற்கொண்டு மகிழ விரும்பியவருக்கு, இப்போது கடும் கோபம் வந்தது. எவ்வளவு முயன்றும் கார் ஸ்டார்ட் ஆகவில்லை. முடிவில் தனது தலையெழுத்து என்று நினைத்துக் கொண்டு, சாலையில் செல்லும் மற்ற கார்களிடம் உதவி கேட்கும் முயற்சியில் இறங்கினார்.

அந்த வழியாக சென்ற பல கார்களும், நிறுத்தாமல் சென்றன. ஒரு பழைய காரில் வந்த முதியவர் மட்டும் காரை நிறுத்தி இறங்கினார். உதவி கேட்டவரிடம் என்ன பிரச்சனை என்று கேட்டு அறிந்தார். இதில் இரக்கப்பட்ட அந்த முதியவர், நான் ஒரு முறை உங்கள் காரை சோதித்து பார்க்கட்டுமா? என்றார்.

ஏற்கனவே மனம் நொந்த நிலையில் இருந்த உதவி கேட்டவர், முதியவரின் ஆசையை ஏன் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒத்துக் கொண்டார். நின்று போன காரின் முன் பாகத்தை திறந்த முதியவர், 5 நிமிடங்களுக்கு என்னத்தையோ நோண்டினார். பிறகு இப்போது ஸ்டார்ட் செய்து பாருங்க என்றார்.

எப்படியும் ஸ்டார்ட் ஆக போவதில்லை என்ற நம்பிக்கையில், மனதில்லாமல் காரை ஸ்டார்ட் செய்த ஓட்டுநருக்கு ஒரே ஆச்சரியம். அத்தனை நேரம் பாடுபடுத்திய தனது கார், உடனே ஸ்டார்ட் ஆனது.

முதியவருக்கு நன்றி கூறிவிட்டு, உங்களுக்கு எப்படி இந்த காரில் இருந்த பிரச்சனை  தெரிந்தது என்று கேட்டார். அதற்கு அவர், “என் பெயர் தான் கார்ல் பென்ஸ். நான் தான் நீங்கள் வைத்துள்ள இந்த கார் நிறுவனத்தின் நிறுவுனர் மற்றும் உரிமையாளர்.

மேலும் இந்த காரை வடிவமைத்ததும் நான் தான். இந்த காரில் எங்கே என்ன பிரச்சனை ஏற்படும் என்பது எனக்கு நன்றாக தெரியும் என்று கூறி ஒரு குட்டி “பை” கூறிவிட்டு முதியவர் இடத்தை காலி செய்தார். மேற்கொண்டு கூற வார்த்தைகள் எதுவும் இல்லாமல் வியப்புடன் நின்றார் அந்த மனிதர் என்று அந்த சம்பவத்தை முடித்தார் நண்பர்.

சிந்தித்தது:

இந்த சம்பவத்தை நண்பர் சாதாரணமாக கூறினாலும், அது எனக்கு ஒரு ஆவிக்குரிய சிந்தனையை ஏற்படுத்தியது. ஒரு காரை உருவாக்கியவருக்கு அதில் ஏற்பட்ட பிரச்சனையை அறிய முடியும் போது, நம்மை படைத்த தேவனுக்கு நமது தேவைகள் தெரியாதா?

நம்மை படைத்த தேவனால் நம் மனதில் இருக்கும் துக்கங்களையும், நாம் கடந்து செல்லும் பிரச்சனைகளையும் தீர்க்க அவரால் முடியாதா? கண்டிப்பாக முடியும் என்பதில் எந்த சந்தேகமே இல்லை. ஆமென்.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *