0 1 min 7 mths

ஏசாவின் சோதனை:

ஈசாக்கின் மகனான ஏசா சேஷ்ட புத்திர பாகத்தை பெற தகுதி இருந்தது. ஆனால் அதற்கு ஏற்ற வாழ்க்கை முறை அவனுக்குள் இருக்கவில்லை. இத்தகைய ஏசாவிற்கு வந்த சாப்பாட்டு சோதனையில் தோல்வியை தழுவினான். அது ஒரு சோதனை என்றே அவனுக்கு தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆதியாகமம்.25:29-34 ல் ஏசாவின் சோதனையை காணலாம்.

சாப்பிடுவது ஒரு குற்றமா? அது சோதனையா? என்று உங்களுக்கு தோன்றலாம். முதலில் ஏசாவிற்கு கிடைக்க இருந்த சேஷ்ட புத்திர பாகத்தை குறித்து பார்ப்போம்.

சேஷ்ட புத்திர பாகத்தை பெறும் ஒருவன், தந்தைக்கு பிறகு குடும்பத்திற்கு தலைவனாக நியமிக்கப்பட தகுதி பெறுகிறான். மற்ற எல்லா பிள்ளைகளும் இவனுக்கு கீழே இருப்பது மட்டுமின்றி, அவர்களை விட பல மடங்கு சொத்துகளும் அதிகமாக கிடைக்கும். இதை தவிர பாரம்பரியமாக வரும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களும் கிடைக்கும். இதை ஆதியாகமம்.27:28-29 வசனங்களில் காணலாம்.

ஆனால் காட்டில் அலைந்து திரிந்து வேட்டையாடிய ஏசாவிற்கு ஏற்பட்ட பசியில், மேற்கண்ட ஆசீர்வாதங்கள் நினைவுக்கு வரவில்லை. அந்த நேரத்தில் பசியை தீர்க்கும் யாக்கோபின் சிகப்பு நிற கூழ், ஏசாவிற்கு பெரிய ஆசீர்வாதமாக தெரிந்தது. இன்றும் நம்மில் பலருக்கும் இந்த சோதனை வருகிறது.

இன்று எத்தனையோ விசுவாசிகள் நேரம் கிடைத்தால் கூட சபையில் நடக்கும் உபவாசக் கூட்டத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார்கள். இது குறித்து கேட்டால், எனக்கு உடம்பு ஒத்துக் கொள்ளாது என்று உதவாத சாக்குகளை சொல்லுகிறார்கள்.

இந்த உலகில் இயேசு தன் ஊழியத்தை துவங்குவதற்கு முன் 40 நாட்கள் உபவாசம் இருந்து ஜெபித்தார் என்று மத்தேயு.4:2-ல் வாசிக்கிறோம். இயேசுவை போல மாற விரும்பும் நமக்குள் உபவாசித்து ஜெபிக்கும் ஆவி இருக்கிறதா?

உபவாசித்து தளர்ந்து போயிருந்த இயேசுவிடம், பிசாசு கேட்கும் முதல் கேள்வியே, சாப்பாட்டை பற்றியது தான். இயேசுவின் ஆவிக்குரிய வாழ்க்கையை கெடுக்கும் எந்த செயலையும் செய்யுமாறு பிசாசு சொல்லவில்லை. ஆனால் அவர் அவனுக்கு கீழ்படிந்து இருந்தால், கர்த்தருக்கு கீழ்படியாமை காட்டியவராக மாறி இருப்பார். இதனால் இயேசு அப்படி செய்யவில்லை.

உபவாசம் எடுத்து ஜெபிப்பதால், நமக்கு எவ்வளவோ நன்மைகளை பெற முடிகிறது. ஆனால் பிசாசு அதை மறைத்து ருசியான சாப்பாட்டை நமக்கு காட்டி மயக்குகிறான்.

இயேசுவின் ஊழிய நாட்களில், 5,000 பேருக்கு உணவு அளித்தார். பல இடங்களில் விருந்துகளில் பங்கேற்றார் என்று வாசிக்கிறோம். எனவே ருசியாக சாப்பிடுவது ஒரு குற்றமல்ல. ஆனால் சாப்பாடு நம்மை தேவனை விட்டு தூரப்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும்.

தானியேல்.1.8ல் “தானியேலின் ஒரு தீர்மானத்தை குறித்து காண முடிகிறது. ராஜா அளிக்கும் போஜனம் என்பது மிகப் பெரிய ஆசீர்வாதம் தானே. ஏன் அதை தானியேல் தள்ளி விடுகிறார்? அது பரிசுத்தத்திற்கு விரோதமானது என்பதை அறிந்து தானியேல் ஒதுக்கிவிட்டார். இதனால் மற்ற சிறுவர்களுக்கு இடையே, தானியேலும் அவரது நண்பர்களும் தனித்தன்மையுடன் இருந்தனர் என தானியேல்.1.19-20ல் காண்கிறோம்.

எனவே பரிசுத்தத்திற்கும், தேவனிடமிருந்தும் நம்மை தூரப்படுத்தும் எவ்வளவு பெரிய விருந்தாக இருந்தாலும், அதை தானியேலை போல ஒதுக்கிவிடுவது நல்லது. அப்போது தானியேலை ஆசீர்வதித்த தேவன், நம்மையும் ஆசீர்வதிப்பார்.

அதேபோல இன்றைய கிறிஸ்துவர்களிடையே ஜெபித்துவிட்டு சாப்பிடும் பழக்கம் குறைந்து வருகிறது. வீடுகளில் கூட ஜெபித்துவிட்டு சாப்பிடுவார்கள். ஆனால் விருந்துகளில் ருசியான சாப்பாடு வரும் போது, தேவனை மறந்து விடுகிற பல விசுவாசிகள் உண்டு. கர்த்தராகிய இயேசு சாப்பிடுவதற்கு முன் ஸ்தோத்திரம் பண்ணி, சாப்பிட்டுள்ளார் என்பதை வேதத்தில் பல இடங்களில் காண்கிறோம். அவரை பின்பற்றும் நாம் அப்படி செய்கிறோமா?

சாப்பிடும் முன் நாம் ஜெபிக்கும் போது, பல கரங்களை கடந்து சாபங்களை தாங்கி வரும் சாப்பாட்டை, தேவன் ஆசீர்வாதமாக மாற்றுகிறார். மேலும் சாப்பாட்டில் உள்ள கெடுதல் விளைவிக்கும் எல்லாவற்றையும் தேவன் நீக்குகிறார். அதேபோல உலகில் பலருக்கும் இல்லாத உணவை நமக்கு தந்த தேவனை துதிக்க ஒரு தருணம் கிடைக்கிறது.

எனவே சாப்பாட்டினால் ஏற்படும் பிசாசின் சோதனைகளை அறிந்து, ஏசாவை போல அதில் தோல்வி அடையாமல், இயேசுவை போல ஜெயமெடுத்து உண்மைான ஆசீர்வாதங்களை பெறுவோமாக.

(பாகம் 3 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *