0 1 min 6 mths

லோத்தின் சோதனை:

லோத்திற்கு ஏற்பட்ட முதல் சோதனையை குறித்து ஆதியாகமம்.13ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். ஆபிரகாம் உடன் பயணித்த லோத்து பிரிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைத்த லோத், செழிப்பான இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்.

லோத்து தேர்ந்தெடுத்த சோதோம், தேவனுடைய தோட்டத்தைப் போல அழகாக தெரிந்தாலும், ஆதியாகமம்.13:13ல் சோதோமின் மனிதர் பொல்லாதவர்களாக இருந்தார்கள் என்று வாசிக்கிறோம்.

லோத்தின் தேர்ந்தெடுப்பு முதலில் ஆசீர்வாதமாக தெரிந்தாலும், பின்நாட்களில் அவன் பல இன்னல்களையும், சாபங்களையும் பெற்றதுதான் மிச்சம். இதற்கு முக்கிய காரணம், மாம்சீகமான தேர்ந்தெடுப்பு, பேராசை, சுயஆசை, பொருளாசை ஆகியவை. இது லோத்தின் சந்ததியினரையும் பாதித்தது.

நம் வாழ்க்கையில் லோத்தை போல தவறான தேர்ந்தெடுப்பாக இருக்க கூடாது. மேலோட்டமாக அது ஆசீர்வாதமாக தெரியலாம். ஆனால் அது ஒரு சோதனை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நாம் வேலை செய்யும் கம்பெனியில், காசு ஆசை காட்டி, கர்த்தரை விட வைக்கும் சோதனையை கூட கண்டறிவது முக்கியம்.

ஆபிரகாமோடு இருந்த லோத்தின் கூட்டணி என்பது சகோதர ஐக்கியத்தை குறிக்கிறது. நன்றாக ஜெபிக்கும், கர்த்தருக்காக பாடுபடும் சகோதரர்களின் ஐக்கியத்தை நாம் விட்டுவிட கூடாது. லோத், ஆபிரகாமோடு இருந்த வரை ஆசீர்வாதமாக இருந்தான். ஆனால் ஆபிரகாமை பிரிந்தது முதல் அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்தன. எனவே சகோதர ஐக்கியத்தை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

லோத்திற்குள் இருந்த மற்றொரு சுபாவம் பேராசை. ஆதியாகமம்.19ல் சோதோமை அழிக்க இரவில் முடிவு செய்யும் தேவ தூதர், அடுத்த நாள் விடியகாலை வரை லோத்தோடு போராட நேர்ந்தது. ஆதியாகமம்:19.16ல் லோத்தையும் அவன் குடும்பத்தினரையும் கையை பிடித்து இழுத்துக் கொண்டு போய் ஊருக்கு வெளியே விடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் லோத் குடும்பத்திற்கு இருந்த போராசை மற்றும் பொருளாசை.

போராசையில் தவித்த லோத்திற்கு தன் உயிர் கூட பெரிதாக தெரியவில்லை. ஆசை என்பது எல்லா மனிதனுக்கும் இருக்கும். அது கிடைத்தால் திருப்தியடையும். ஆனால் நமக்கு இருப்பதில் திருப்தி அடைய முடியாத நிலை தான் பேராசை என்பது.

எபிரேயர்.13.5ல் வாசிக்கும் போது, “உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்” என்று காண்கிறோம். சில நேரங்களில் தேவன் அனுமதித்த காரியங்களைக் காட்டிலும் அதிகமாக ஆசைப்பட்டு, அதை லோத்தை போல சாபத்தோடு பெற்றுக் கொள்கிறோம்.

மேலோட்டமாக ஆசீர்வாதமாக தெரியும் சில காரியங்கள் நம் பேராசையை கிளப்பி, பிசாசின் சோதனையில் விழச் செய்யும். எனவே இன்று நமக்குள் பேராசை என்ற அரக்கன் இருந்தால், அவனை உடனே இயேசுவின் நாமத்தில் வெளியேற்றுங்கள்.

ஆதியாகமம்.19:26ல் கீழ்படியாமை காட்டிய லோத்தின் மனைவி உப்புத் தூணாக மாறி போகிறாள். இதற்கு காரணமும் பொருளாசை. லோத்தின் மனைவி விட்டு வந்த பல பொருட்களையும், பணத்தையும் எண்ணி பார்த்தாரே தவிர, தேவனுடைய வார்த்தையை நினைவில் கொள்ள மறந்தாள். இதனால் உப்புத் தூணாக போனாள்.

இன்று இளைய தலைமுறையை தாக்கும் பிசாசின் முக்கிய ஆயுதங்களில் ஒன்று பொருளாசை. பணம் இருந்தால் எல்லாமே நடக்கும் என்ற மந்திரத்தை இளம் மனதில் பிசாசு பதித்துக் கொண்டிருக்கிறான். தேவனை தேடி, அவரது வார்த்தைகளுக்கு கீழ்படிந்தால் பணம் கிடைக்குமா?

வேலைக்கு போனால் பணம் சம்பாதித்து குவிக்கலாம் என்று திட்டமிடுகிறார்கள். ஆனால் தூக்கத்தையும் ஆரோக்கியமான உணவையும் கூட தியாகம் செய்து சம்பாதிப்பதை, அவர்கள் அனுபவிக்க முடியாமல், டாக்டர்களும், மருந்துவமனைகளும் தான் அனுபவிக்கிறார்கள்.

தேவனை தேட வேண்டிய நேரத்தில் தேடாமல் விட்டுவிட்டு, சாகப் போகும் நேரத்தில் மன்னிப்பை கேட்டால் பரலோகம் போய்விடலாம் என்ற தவறான கணக்கில் வாழ்கிறார்கள்.

1 தீமோத்தேயு.6:10ல் “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது” என்று வாசிக்கிறோம். எனவே பண ஆசையை நம் மனதிலிருந்து நீக்கி, தேவ அன்பினால் மனதை நிரப்புவோம்.

லோத்திடம் இருந்த அதே பழக்கங்கள் அவனுடைய பின் சந்ததிக்கும் பரவியது. அதேபோல நாம் வாழ்ந்து காட்டும், வாழ்க்கை நம் பின்வரும் சந்ததிக்கும் மாதிரியாக இருக்க போகிறது. எனவே தேவனையும், அவரது வசனத்தையும் முன்னிறுத்தி நடப்போம்.

லோத்தை போல பிசாசின் ஆசீர்வாதமாக காட்டும் மறைமுகமான சோதனைகளை அறியாமல் தோல்வி அடைய வேண்டாம். ஆபிரகாமை போல ஜெயமெடுத்து விசுவாச வீரர்கள் மாறுவோம்.

(தொடரும் – 4 பாகம்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *