
யோசேப்பின் சோதனை:
இன்றைய இளம் தலைமுறையினர் சந்திக்கும் முக்கியமான சோதனைகளில் ஒன்றை தான் யோசேப்பு சந்தித்தார். ஆனால் அவர் வெற்றி பெற்றார். அடிமையாக எகிப்திற்கு கொண்டு செல்லப்பட்ட யோசேப்பிற்கு, போத்திபாரின் வீட்டில் சோதனை வந்தது. இதை ஆதியாகமம்.39:7-20 வசனங்களில் அந்த சம்பவத்தை காணலாம்.
இந்த காலத்தில் யோசேப்பின் சம்பவம் நடந்திருந்தால், எல்லாரும் அவனை பிழைக்க தெரியாதவன் என்று திட்டி இருப்பார்கள். அவனுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, போத்திபாரின் மனைவியின் எண்ணத்திற்கு ஒத்துப் போயிருந்தால், அடிமையாக சென்ற அவன் எந்த பிரச்சனையுமின்றி, செல்வச் செழிப்பாக வாழ்ந்திருக்கலாம். சிறைச்சாலைக்கு செல்ல வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்காது.
இதெல்லாம் ஆசீர்வாதமாக வெளியே தெரிந்தாலும், தேவன் அவனை விட்டு விலகி இருப்பார். மேலும் யோசேப்பின் ஆசீர்வாதமான நாட்கள் சில வருடங்களுக்கு பிறகு, எகிப்தின் பஞ்சத்தோடு முடிவடைந்திருக்கும். ஆனால் கர்த்தருக்கு பயந்த யோசேப்பு, தீமையை விட்டு விலகினான். இதனால் ஆதியாகமம்.39:21ல் “கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன் மேல் கிருபை வைத்து…” என்று வாசிக்கிறோம்.
யோசேப்புடன் போராடிய பிசாசு, இன்றைய இளம் வயதினருடன் போராடி வருகிறான். இதில் பலரும் அவனுக்கு இரையாகிவிடுவது ஒரு வருந்தத்தக்க செய்தி. பள்ளிகளில், கல்லூரிகளில், அலுவலகங்களில், வீட்டிற்கு அருகில் என பல சந்தர்ப்பங்களில், தம்மை அன்புள்ளவர்களாக காட்டிக் கொண்டு வரும் நபர்களின் மூலம் பிசாசு போராடுகிறான். மேற்புறத்தில் மனிதர்களாக உள்ள இவர்கள், பிசாசின் சேனையில் சேர்ந்தவர்களாக கூட இருக்கலாம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
மேலே ஜெயமெடுத்தவராக நாம் கண்ட யோசேப்பு, திருமணம் செய்து கொண்டு குழந்தைகளோடு வாழ்ந்தவர் தான். ஆனால் தகுந்த காலத்தில் தேவன் அனுமதித்த மனைவியோடு வாழ்ந்தார். கணவன் – மனைவி என்று ஆன பிறகு நேசிப்பதில் தவறில்லை.
ஆனால் தேவன் நமக்காக குறித்த நபர் யார் என்றே தெரியாமல், அவரை நேசித்து விடுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். சில இளம் விசுவாசிகள், தேவனை அறியாத நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, படும் அவஸ்தை சொல்லி தீராது.
யோசேப்பின் தந்தையான யாக்கோபு காதலித்து திருமணம் செய்து கொண்டவர். ராகேலை உயிருக்கும் மேலாக நேசித்து, அவளுக்காக பல வருடங்கள் அடிமையை போல வேலை செய்தார். ஆனால் கடைசி வரை அவளுடன் சந்தோஷமாக வாழ முடியவில்லை.
மேலும் பல சந்தர்ப்பங்களில் யாக்கோபை ராகேல் பின்மாற்றத்திற்கு இழக்க பார்த்தாள் என்பதை வேதத்தில் காணலாம். யாக்கோபு ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டாலும், அவரது கடைசி வார்த்தைகள் சோகமாகவே இருந்தன என்பதை ஆதியாகமம்.47:9 ல் காணலாம்.
நமது இணையதளத்திற்கு தன் திருமணத்தை குறித்து ஒரு சகோதரன் அனுப்பிய சாட்சியை படித்து உண்மையில் தேவனை மகிமைப்படுத்தினோம். சாட்சிகள் பகுதியில் “திருமணத்தில் தேவ சித்தம்” என்ற தலைப்பில் அது இடம் பெற்றுள்ளது.
போத்திபாரின் வீட்டில் ஏற்பட்ட சோதனையை ஜெயித்த யோசேப்பிற்கு கிடைத்த பரிசு சிறைத் தண்டனை. தான் செய்யாத குற்றத்திற்காக பல ஆண்டுகள் சிறையில் கிடைந்தாலும், யோசேப்பு தேவனை விட்டு விலகவில்லை. இதனால் சிறைச் சாலையில் இருந்து அவன் சென்ற இடம், ராஜ சிங்காசனம். பிசாசின் சோதனைகளில் நாம் ஜெயமெடுத்தால், தேவன் உயர்த்துவதை யாராலும் தடை செய்ய முடியாது.
நம் வாழ்க்கையிலும் தேவன் யோசோப்பு பெற்றது போன்ற ஜெயத்தை தான் எதிர்பார்க்கிறார். யோசேப்பை போல எப்போதும் கர்த்தருக்காக காத்திருக்கும் போது, ஆசீர்வாதமான வாழ்க்கையை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் ஆசீர்வாதங்களை தேடி ஓடும் போது, இடறி விழுவோம்.
எனவே நம் மீது வைத்த நேசத்தால், தன் ஜீவனையே அளித்து சென்ற இயேசுவை, எல்லாரை காட்டிலும் அதிகமாக நேசிப்போம். அப்போது யோசேப்பை போல, சோதனைகளில் ஜெயமெடுத்து உண்மையான ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்வோம்.
(தொடரும் – பாகம் 5)