0 1 min 7 mths

இயேசுவின் சோதனை:

உலகின் பாவங்களை சுமந்து தீர்க்க வேண்டும் என்ற கட்டளையுடன் மனிதனாக வந்த தேவ குமாரன் இயேசுவிற்கே பிசாசு ஆசீர்வாத போர்வையில் வரும் சோதனையை அளித்து பார்த்தான். ஆனால் அவனுக்கு தோல்வியே கிடைத்தது. இதை மத்தேயு.4:8,9 வசனங்களில் காண்கிறோம்.

பாவத்தில் உழன்று திரியும் மக்களை மீட்டு, பரிசுத்தவான்களாக மாற்றி, அவர்களை கொண்டு பரம ராஜ்ஜியத்தை அமைத்து ராஜாவாக ஆட்சி செய்ய வேண்டும் என்பது இயேசு கிறிஸ்துவை குறித்த தேவனுடைய திட்டம். ஆனால் அதற்கு இயேசு உலகில் மனிதனாக பிறந்து, வளர்ந்து, ஊழியம் செய்து, சிலுவையில் ஒரு பாவியை போல மரிக்க வேண்டும்.

அதை அறிந்த பிசாசு, உலகின் சகல ராஜ்ஜியங்களையும், அவைகளின் மகிமைகளை இயேசுவிற்கு காட்டிவிட்டு, “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்து கொண்டால், இவைகளையெல்லாம் உமக்கு தருவேன் என்று சொன்னான்”. இந்த ஆலோசனைக்கு இயேசு ஒப்புக் கொண்டிருந்தால், பெயர், புகழ், மதிப்பு, பணம் ஆகியவை கிடைத்திருக்கும்.

மேலும் அவர் அநீதியான முறையில் சாகாமல், அன்று வாழ்ந்த ஒரு புகழ்பெற்ற ராஜாவாக இருந்திருக்கலாம். ஆனால் அதற்கு பரிசுத்த தேவனை விட்டுவிட்டு, பிசாசை வணங்க வேண்டும் என்பது நிபந்தனை.

இது ஒரு வகையில் இயேசுவின் லட்சியத்தை அடைய குறுக்கு வழி போல தெரியலாம். ஆனால் இதற்கு ஒப்புக் கொண்டிருந்தால், மனிதனை பாவத்திலிருந்து இரட்சிப்பது குறித்த தேவனின் திட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கும். பிசாசின் தந்திர ஆலோசனையை அறிந்து கொண்ட இயேசு, அதை வேத வசனத்தால் ஜெயித்து தேவ சித்தத்தை நிறைவேற்றினார்.

பரிசுத்தத்தை நோக்கி பயணிக்கும் தேவனுடைய பிள்ளைகளுக்கு எதிராகவும், பிசாசு இந்த ஆசீர்வாத சோதனையை இன்று கொண்டு வருகிறான். உலகில் பெயர், பணம், மதிப்பு ஆகியவை வேண்டுமா? என்னை வணங்கு என்று மறைமுகமாக நம்மை சுற்றிலும் உள்ளவர்களின் மூலம் நமக்கு அழைப்பு விடுகிறான் பிசாசு.

இயேசுவை கும்பிட்டு உனக்கு என்ன கிடைச்சது? வாழ்க்கையை அனுபவி என்று பிசாசின் தூதர்களாக வரும் மனிதர்கள் ஆலோசனைகளை தருகிறார்கள். அந்த யோசனைகளுக்கு ஜாக்கிரத்தையாக இருக்க வேண்டும்.

தேவனை விட்டு பிரிந்து செல்வதன் மூலம் கிடைக்கும் எந்த காரியமும் நிரந்தரமல்ல. அது ஆசீர்வாதமும் அல்ல என்பதை நாம் என்றும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆசீர்வாதம் என்ற போர்வையில் வரும் பிசாசின் சோதனையை மேற்கொள்ள வேத வசனத்தின் பலம் தேவை.

இயேசு பிசாசின் சதி ஆலோசனையை, வேத வசனத்தின் மூலமே ஜெயிக்கிறார். அதேபோல நாமும் பிசாசின் தந்திரங்களை பகுத்தறிந்து ஜெயமெடுக்க வேண்டும். ஆனால் இன்று வேதம் வாசித்து அதிலிருந்து கிடைக்கும் ஆவிக்குரிய பலத்தை பலரும் பெற்று கொள்வதில்லை. இதனால் பிசாசின் தந்திரமான இது போன்ற ஆலோசனைகளில் விழுந்து, தேவனை விட்டு பின்மாறி போய் விடுகிறார்.

எனவே நாம் பெறும் ஆசீர்வாதங்கள் அனைத்தும் தேவனிடமிருந்து மட்டுமே வருகின்றன என்ற தவறான எண்ணத்தை மாற்றுவோம். இன்று ஆசீர்வாதம் என்ற போர்வையில் பிசாசு, தேவனுடைய பிள்ளைகளை சோதனையில் விழ செய்து, தேவனுக்கு விரோதமாக மாற்றி விடுகிறான்.

ஏசா, லோத் ஆகியோரை போல, தற்காலிகமாக தெரிந்த ஆசீர்வாதங்களை நோக்கி ஓடினால் நமது ஆவிக்குரிய வாழ்க்கையை இழந்து விடுவோம். ஏனெனில் அவை பிசாசிடமிருந்து வருவதால், தற்காலிகமானவை. ஆனால் யோசேப்பை போல, கர்த்தருக்காக காத்திருந்து இடையிடையே வந்த ஆசீர்வாதம் போன்ற சோதனைகளை ஜெயமெடுத்தால், உண்மையான தேவ ஆசீர்வாதம் நம்மை சூழ்ந்து கொள்ளும்.

தேவனிடமிருந்து வரும் ஆசீர்வாதங்கள் என்றும் நிரந்தரமானவை. இதனால் தான் யோசேப்பு சுமார் 80க்கும் மேற்பட்ட ஆண்டுகள், எகிப்தில் ஆளுநராக இருந்ததாக வரலாறு கூறுகிறது. தானியேல் சுமார் 6 ராஜாக்களின் அரசவைகளில் அமைச்சராக இருந்தார் என்று வரலாற்றில் காண்கிறோம். இயேசு அன்று பிசாசை ஜெயித்து, நமக்கு நித்திய இரட்சகராக மாறினார்.

எனவே நம் வாழ்க்கையில் வரும் சோதனைகளை தானியேல், யோசேப்பு ஆகியோரை போல பகுத்தறிந்து, இயேசுவை போல தேவ வசனங்களை பயன்படுத்தி ஜெயித்து முன்னேறுவோம். தேவன் நமக்காக வைத்திருக்கிற ஜீவகிரீடத்தையும், நித்திய ஜீவனையும் பெறுவோமாக.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *