0 1 min 2 weeks

அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான். நியாயாதிபதிகள்: 21.25

இஸ்ரவேல் மக்களை பல்வேறு தரப்பினர் வழிநடத்தி உள்ளனர். இஸ்ரவேல் என்ற பெயருக்கு சொந்தக்காரரான யாக்கோபின் தலைமையில் ஒரு குடும்பமாக (72 பேர்) எகிப்திற்கு போனார்கள். அங்கு யோசேப்பின் ஆதரவில் பலுகி பெருகி, லட்சக்கணக்கான மக்களாக மாறினார்கள்.

குறித்த காலத்தில் மோசேயின் தலைமையில் 40 ஆண்டுகள் கானான் தேசத்திற்கு திரும்பி வர முயற்சித்தார்கள். யோர்தானுக்கு வந்த பிறகு இஸ்ரவேலை வழிநடத்தும் பொறுப்பை யோசுவா ஏற்று, கானான் தேசத்திற்கு கொண்டு வந்து சேர்த்தார். யோசுவாவும் அவர் காலத்தைச் சேர்ந்தவர்களும் இருந்த வரை, இஸ்ரவேல் மக்கள் தேவனை உண்மையாக பின்பற்றினார்கள்.

அதன்பிறகு நியாயாதிபதிகள் வந்தார்கள். ஆனால் நியாயாதிபதிகளின் காலத்தின் முடிவில், யாரும் தேவனை சரியாக பின்பற்றவில்லை என்று தியான வசனத்தில் காண்கிறோம். அவர்களை வழிநடத்த தகுந்த ராஜா இல்லாததால், அவனவனுக்கு எது நல்லதாக தெரிகிறதோ, அப்படி வாழ்ந்தார்கள்.

பரலோகத்திற்கு செல்ல அழைக்கப்பட்ட நம் வாழ்க்கையில் கூட, இது போன்ற ஒரு நிலை ஏற்படுகிறது. பாவ சேற்றில் இருந்து நம்மை மீட்டெடுத்த இயேசு, வேத வசனத்தின் மூலம் தேவ சித்தத்தை வெளிப்படுத்தி அனுதினமும் நமக்கு போதித்து வருகிறார்.

ஆனால் கிறிஸ்தவ வாழ்க்கையில் குறிப்பிட்ட ஆண்டுகள் கடந்த பிறகு, நம்மில் பெரும்பாலானோர் கடந்த வந்த பாதைகளை மறந்து போகிறோம். அதன்பிறகு வேத வசனங்களின்படி வாழ்வதற்கோ, தேவ ஊழியர்களின் வார்த்தைகளுக்கு கீழ்படிவதற்கோ விருப்பம் காட்டுவதில்லை. ஏனெனில் நாம் தேறிவிட்டோம் என்ற எண்ணம் நமக்குள் வந்துவிடுகிறது.

அதுவரை தேவனே நமக்கு ராஜாவாக இருந்து நம்மை வழிநடத்தி வந்த நிலையில், நாம் தேறிவிட்டோம் என்ற எண்ணம் வந்தவுடன், நமக்கு எது சரி என்று தெரிகிறதோ அதை செய்து கொண்டு, சுயமாக திருப்திபட்டு கொள்கிறோம். இதை யாராவது திருத்தம் செய்ய அறிவுரை கூறினாலும், நமக்கு பிடிப்பதில்லை.

இப்படி நாம் சுயமாக சிந்தித்து செய்யும் எல்லா காரியங்களும் தேவனுக்கு சித்தம் தானா? என்று நாம் யோசித்தது உண்டா? ஏனெனில் நம் சொந்த விருப்பத்திற்கு ஏற்றபடி வாழ அழைக்கப்படவில்லை. தேவ சித்தம் செய்து அவரை போல மாறினால் மட்டுமே, தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு செல்ல முடியும்.

தேவ சித்தம் செய்வதை நாம் தவிர்க்க ஆரம்பிக்கும் போதே, நமக்காக சொந்தமாக ஒரு ராஜா வேண்டும் இஸ்ரவேல் மக்கள் கேட்பது போன்ற நிலைக்கு நாம் வந்து விடுகிறோம்.

அவர்களுக்கு ராஜாக்கள் இல்லாமல் இருந்த போது, அவர்களுக்கு வந்த எல்லா யுத்தங்களையும் தேவனே செய்தார். ஆனால் ராஜாக்கள் வந்த பிறகு, தேவனை சார்ந்து வாழ்வதை விட்டுவிட்டு, ராஜாக்களின் விருப்பத்திற்கேற்ப இஸ்ரவேல் மக்கள் வாழ்ந்தார்கள்.

இதனால் தாவீது போன்ற நல்ல ராஜாக்களின் காலத்தில் செழிப்பும், ஆகாப் போன்ற ராஜாக்களின் காலத்தில் பஞ்சம், பட்டினி, யுத்தம் ஆகியவற்றையும் சந்திக்க நேர்ந்தது.
எனவே நம் வாழ்க்கையில் இயேசுவை நம் ராஜாவாக முன் வைத்து, அவரது சித்தம் செய்து வாழ்வோம். பல ஆண்டுகளாக நாம் விசுவாசிகளாக இருக்கிறோம் என்பதால், நம் எண்ணங்கள் எல்லாமே சரியானதே என்ற தவறான எண்ணத்தை களைந்து விடுவோம்.

நமது வாழ்க்கை வேத வசனங்களுக்கு ஏற்ப இருக்கிறதா? அது தேவ சித்தத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறதா? என்று ஆராய்ந்து பார்ப்போம். அப்போது கண்ணீர், துக்கம், இன்னல் ஆகியவை இல்லாத நித்திய ராஜ்ஜியத்திற்கு நாம் சென்று சேர முடியும்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்பான தெய்வமே, எங்கள் பரலோக பயணத்தில் உமது விருப்பத்தை நிறைவேற்றி வாழ கிருபை தாரும். சொந்த விருப்பமே சரி என்ற எங்களின் தவறான எண்ணத்தை எங்களில் இருந்து அகற்றும். ஆலோசனை கர்த்தராகிய நீர் எங்களோடு இருந்து வழிநடத்தும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *