
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான். நீதிமொழிகள்.28:13
உலகில் மனிதன் உருவாக்கப்பட்டது முதல் இன்று வரை அவனுக்கு ஒரு பெரிய சவாலாகவே இருந்து வருவது பாவம். ஆதாமின் காலத்தில் தோன்றிய பாவம், இன்றும் உலகில் கம்பீரமாக உலா வருகிறது. பாவத்தின் வடிவத்தில் மட்டுமே மாற்றம் கண்டுள்ளதே தவிர, அதன் அடிப்படை காரணமோ, மனிதன் பாவத்தை செய்ய விரும்பும் தன்மையோ எந்த வகையிலும் மாறவே இல்லை.
இதற்கு ஒரு எளிய உதாரணம் கூறலாம். ஆதியில் ‘நன்மை தீமை’ அறியும் கனியை தின்றதால், ஆதாமும்-ஏவாளும் பாவம் செய்தனர். அந்த பாவத்திற்கான அடிப்படை காரணம், தேவன் கூறிய வார்த்தைக்கு கீழ்படியாமை காட்டியது. இன்றும் தேவனுடைய வசனத்திற்கு நாம் கீழ்படியாமை காட்டி பாவம் செய்கிறோம். எனவே ஆதாம் செய்த பாவத்திற்கும், இந்த கால நாம் செய்யும் பாவத்திற்கும் அடிப்படையில் வித்தியாசமே இல்லை என்பதை உணரலாம்.
பாவியாகிய ஆதாமிற்கு அன்று உடனே மன்னிப்பு அளிக்க, ஒரு மத்தியஸ்தர் (இயேசு) இருக்கவில்லை. இன்று நமது பாவங்களை மன்னிக்க இயேசு தமது சொந்த இரத்தத்தை சிந்தியுள்ளார். மேலும் நம்மில் வரும் குற்றங்கள், குறைகளை எடுத்துக்காட்டி புத்தி சொல்ல தேவ ஊழியர்களும், பரிசுத்தாவியும் உள்ளார்கள். எனவே நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த சிறந்த வாய்ப்பை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
ஆதாம் பாவம் செய்த பிறகு, அதை அவன் ஒத்து கொள்ளவில்லை. தனது தவறை மறைக்க, மனைவியின் மீது குற்றம் சாட்டினான். அவனிலிருந்து உருவாக்கப்பட்ட ஏவாளும், தனது குற்றத்தை மறைக்க, பாம்பின் மீது பழியை போட்டாள். இதனால் இருவரும் பரிசுத்தமான தேவனுக்கு முன்பாக நிற்கும் தகுதியை இழந்தனர்.
இதுபோல நாம் செய்த பாவங்களை குறித்து வேதாகமத்தின் மூலமோ, தேவ ஊழியர்களின் மூலமோ, விசுவாசிகளின் மூலமோ தேவன் உணர்த்தும் போது, அதை மறைக்க முயற்சி செய்யக் கூடாது. அதை எதிர்த்து கேள்வி கேட்க கூடாது. நம் பாவங்களை ஒத்துக் கொண்டு, அறிக்கையிட்டு விட்டுவிடும் போது, குறிப்பிட்ட பாவத்தின் மீது ஜெயத்தை பெற முடிகிறது.
நாம் செய்த பாவத்தை ஏற்றுக் கொள்ளாமல் அதை உணர்த்தும் போது எதிர்த்து நின்றால், ஆதாமை போல ஆசீர்வாதத்திற்கு பதிலாக சாபத்தை பெற்று கொள்வோம். மேலும் தேவ சமாதானம் நம்மிலிருந்து நீங்கி, எப்போதும் ஒரு திருப்தியில்லாத மனதை பெற்று அல்லல்படுவோம்.
எனவே தேவன் தவறுகளை உணர்த்தும் போது, அவருக்கு கீழ்படிந்து பாவங்களை அறிக்கையிட்டு, அவரிடம் ஆசீர்வாதத்தையும், இரக்கத்தையும் பெறுவோமாக.
ஜெபம்:
இரக்கமும் கிருபையுள்ள எங்கள் நல்ல தேவனே, எங்களிடம் பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். நாங்கள் எப்போது பரிசுத்தமாய் வாழ நீர் விரும்புகிறீர் என்று அறிந்தோம். எங்கள் பாவங்களை குறித்து உணர்த்தும் போது, அதற்கு கீழ்படிந்து வாழ உதவி செய்யும். அதன் மூலம் பாவத்தின் மீதும் ஜெயத்தையும், உமது இரக்கத்தையும் பெற கிருபை செய்யும். இயேசுவின் நாமத்தினாலே கேட்கிறோம் பிதாவே, ஆமென்.