0 1 min 1 mth

சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான். நீதிமொழிகள்:17.17

இந்த உலகில் பிறந்தது முதல் இறக்கும் வரை, பலரும் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நண்பர்களின் பங்கு தனித்தன்மையானது.

குழந்தை பிறந்தவுடன் டாக்டர்களும், நர்சுகளும் நண்பர்களாக மாறி, சரியாக பராமரித்து பெற்றோரிடம் ஒப்படைக்கிறார்கள். வீட்டிற்கு வந்த பிறகு, குழந்தையுடன் விளையாடி மகிழ்விக்கும் வீட்டில் உள்ள அனைவரும் நண்பர்களாக மாறுகிறார்கள்.

பள்ளி செல்ல ஆரம்பிக்கும் போது, அங்கு புதுபுது நண்பர்கள் கிடைக்கிறார்கள். அதில் சிலர் நண்பர்களாக கல்லூரி வயது வரை தொடர்கிறார்கள். கல்லூரி வாழ்க்கையில் புதிய நண்பர்களும் கிடைக்கிறார்கள். பிறகு வேலை செய்யும் இடங்களிலும், மண வாழ்க்கைக்கு பிறகும் பலரும் நட்பு பாராட்டுகிறார்கள்.

இப்படி வாழ்க்கையின் துவக்கம் முதல் முடிவு வரை நண்பர்களாக பலரும் வருகிறார்கள். அதில் சிலர் இடையிலேயே பிரிந்து செல்கிறார்கள். ஆனால் உண்மையான நண்பன் என்பவன், எல்லா காலத்திலும் சிநேகிப்பான் என்கிறது தியான வசனம்.

நம் வாழ்க்கையில் எல்லா காலத்திலும் உண்மையான நட்பை பாராட்டும் நண்பர்கள் மிகவும் குறைவே. இந்நிலையில் நம் உண்மையான நண்பராக தான் இருப்பதாக யோவான்:15.15ல் இயேசு கூறியுள்ளார்.

இதை சொன்ன இயேசு, நண்பர்களான நமக்காக தன் ஜீவனையே தந்தார். உண்மையான நண்பரான இயேசு, நம்மிடம் எதிர்பார்ப்பது அதே உண்மையான நட்பு தான்.

இதற்கு முந்தைய வசனத்தில் (யோவான்:15.13,14), இயேசுவிற்கு நாம் நண்பர்களாக இருக்க வேண்டுமானால், அவர் கற்பிக்கிற யாவையும் செய்ய வேண்டும் என்கிறார். மேலும் ஒரு உண்மையான நண்பன் என்றால், அவன் உயிரை கொடுக்கிற அளவுக்கு இருப்பான் என்கிறார்.

மேலும், யோவான்:15.12ல் இயேசு காட்டிய அதே அன்பை நாம் பிறரிடம் காட்ட வேண்டும் என்கிறார். அதுவே அவருடைய கட்டளை என்கிறார். அந்த கட்டளையை நாம் பின்பற்றினால், இயேசுவின் நண்பர்களாக நம்மை காட்டி கொள்ளவும் முடியும். நம் கிறிஸ்துவ வாழ்க்கைக்கும் புதிய அர்த்தம் உண்டாகும்.

எனவே வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தன் உயிரையே தந்த நம் நண்பர் இயேசு, மற்ற எல்லா நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் தர வல்லவர் என்பதை நம்புவோம். அதேபோல, அதே நட்பையும் அன்பையும் பிறருக்கு காட்டி, உண்மையான கிறிஸ்துவின் நண்பன் என்பதை உலகிற்கு காட்டுவோம்.

ஜெபம்:

எங்களை நேசிக்கும் அன்புள்ள ஆண்டவரே, நீர் எங்களை சீஷர்களாக பார்க்காமல், நண்பர்களாக கண்ட உமது அன்பிற்காக ஸ்தோத்திரம். இந்நாள் வரைக்கும் உமது உண்மையான நட்பின் பலனை அனுபவித்த நாங்கள், அதை பிறருக்கும் காட்ட உதவி செய்யும். உம்மோடு உள்ள நட்பு, பூமியில் மட்டுமின்றி, பரலோகத்திலும் தொடர பாத்திரவான்களாக மாற்றும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *