0 1 yr

என்னைப் போன்ற மனிதன் ஓடிப் போவானோ? என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை என்றேன். நெகேமியா:6.11

இஸ்ரவேல் மக்களின் பாவத்தை கண்டு வெறுத்த தேவன், அவர்களை பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக் கொடுத்தார். அப்போது இஸ்ரவேலின் சுற்று சுவர்கள் இடிக்கப்பட்டு, தேவாலயம் முழுமையாக அழிக்கப்பட்டது. அதன்பிறகு வந்த ராஜாவின் கண்களில் தயவு கிடைத்து, இஸ்ரவேலுக்கு திரும்பி வரும் நெகேமியா உள்ளிட்ட சிலர், இஸ்ரவேலை பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.

இந்த சம்பவங்களை நமது ஆவிக்குரிய பின்மாற்றத்தோடு ஒப்பிடலாம். ஒரு காலத்தில் தேவனுக்காக வைராக்கியமாக நின்ற சிலர், அவரது வழிகளை விட்டு பின்மாறி போகும் போது, தேவன் சில அடிமைத்தனத்தை அனுமதிக்கிறார்.

அதில் இருந்து கண்ணீரோடு தேவனை நோக்கி வேண்டுதல் செய்யும் போது, தேவன் விடுவிக்கிறார். ஆனால் அவர்களின் பழைய ஆவிக்குரிய வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டியது அவர்கள் கையில் தான் உள்ளது.

இல்லாவிட்டால் மீண்டும் சத்துருவாகிய பிசாசின் கையில் அகப்படுவது உறுதி. பின்மாற்றம் என்றவுடன் பெரிய குடிகாரனாக, தேவாலயத்திற்கு பல வருடங்களாக வராமல் இருப்பதை மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் துவக்கத்தில் தேவனுக்காக வைராக்கியமாக இருந்த நிலையை இழப்பதையும், பின்மாற்றம் என்றே எடுத்துக் கொள்ளலாம்.

இன்றைய கிறிஸ்தவர்களிடையே இது போன்ற மறைமுக பின்மாற்றக்காரர்களை அதிகமாக காண முடிகிறது. இரட்சிக்கப்பட்டு ஒரு சில ஆண்டுகளை கடந்துவிட்டால், நமக்கு பரலோகத்தில் இடம் புக்கிங் ஆகிவிட்டது. இனி நம் சொந்த இஷ்டத்திற்கு வாழுவோம் என்று வாழ்கிறார்கள்.

ஆதியில் கர்த்தருக்காக எழும்பி பிரகாசித்த அவர்கள், பின்நாட்களில் நாங்கள் எல்லாம் அந்த காலத்திலேயே ஊழியம் செய்து முடித்துவிட்டோம் என்று கூறும் நிலைக்கு வந்து விடுகிறார்கள்.

இந்த பின்மாற்றத்தின் அனுபவம் நமக்கு இருக்கிறதா? என்று சோதித்து பாருங்கள். அப்படி இருந்தால், இன்றே அதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். ஏனெனில் அதுவே பிசாசிற்கு நாம் கொடுக்கும் வாய்ப்பாக அமையலாம்.

இஸ்ரவேலின் இடிந்து போன சுவர்களை நெகேமியா தலைமையிலான மக்கள் கட்டியெழுப்பியது போல, நாமும் நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் இழந்து போன, தேவனுக்காக கனி தரும் வாழ்க்கையை புதுப்பித்து கட்டுவோம். தேவ அன்பில் நிரம்பி, அவருக்காக செயல்படுவோம். காரணங்களையும், சந்தர்ப்பங்களையும் குற்றம் கூறுவதை கைவிடுவோம்.

நெகேமியா சுற்றுசுவர்களை கட்டியெழுப்பும் பணியில் தீவிரமாக செயல்பட்ட போது, தீர்க்கத்தரிசி என்ற பெயரில் பொய்யான ஆலோசனைகள் வந்தன. அதற்காக பதிலை தான், தியான வசனமாக எடுத்துள்ளோம்.

மேற்கூறிய பின்மாற்றங்களில் இருந்து நீங்கள் வெளியே வர முயற்சி செய்யும் போது, பிசாசின் இது போன்ற சதி ஆலோசனைகள் நமக்கும் வரும். அது சரியானது போலவே தோன்றும்.

ஆனால் அவற்றை பரிசுத்தாவியின் துணையோடு கண்டறிந்து, நெகேமியாவை போல, என்னைப் போன்ற மனிதன் ஓடிப் போவானோ? என்று எதிர்த்து நிற்போம். அப்போது அவைகள் நம்மை ஒன்றும் செய்ய முடியாமல் போகும்.

இன்று பலரும் தங்களின் பின்மாற்ற நிலையை உணர்ந்து, அதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபடும் போது, இது போன்ற ஆலோசனைகள் வந்தால், அதை நம்பி மீண்டும் பின்மாற்றத்திலேயே தொடர்கிறார்கள்.

தேவனுக்காக கிரியை செய்வதை தடுக்க யார் ஆலோசனை கூறினாலும், அதை நன்றாக ஆராய்ந்த பிறகே முடிவெடுக்க வேண்டும். ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு தவறான காலடி கூட, நம் முழு வாழ்க்கையையும் வீணாக்கி விட கூடும்.

எனவே கர்த்தரிடம் திரும்பி, நம்மில் ஏதாவது பின்மாற்ற எண்ணங்கள், செயல்கள் இருந்தால் அவற்றை நீக்கி, நம் வாழ்க்கையை தேவனுக்குள் பாதுகாத்து கொள்வோம்.

ஜெபம்:

அன்புள்ள தேவனே, ஆவிக்குரிய வாழ்க்கையில் எங்களில் ஏதாவது பின்மாற்ற அனுபவங்கள் இருந்தால், எங்களுக்கு மன்னித்து உணர்த்தி அருளும். அதே பின்மாற்றத்தில் தொடராமல், அதில் இருந்து விடுபட்டு, தேவனுக்காக வைராக்கியமாக நிற்க உதவி செய்யும். ஆவிக்குரிய பாதுகாப்பை பலப்படுத்தி, உமது வருகைக்காக காத்திருக்க எங்களை தகுதிப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *