இயேசுவின் படத்தை வைத்து ஜெபிப்பது என்பது இன்றைய கிறிஸ்தவர்கள் இடையே ஒரு சாதாரண நிகழ்வாக மாறி உள்ளது. பாரம்பரிய கிறிஸ்தவர்கள் தான் செய்கிறார்கள் என்று பலரும் குற்றப்படுத்தும் நிலையில், இரட்சிக்கப்பட்டவர்கள் என்ற பெயரில் உள்ள பலரும் கூட தங்கள் வீடுகளில் இயேசு நாதரின் படங்களைக் கொண்ட வசனங்களை வைத்திருக்கிறார்கள்.

இதில் சிலர் அந்தப் படத்தைப் பார்த்து கொண்டு ஜெபிக்கிறவர்களும் உண்டு. இந்நிலையில் நாம் ஜெபிக்கும் போது, இயேசு நாதர் படத்தை வைத்து ஜெபிக்கலாமா என்ற கேள்விக்கு பரிசுத்த வேதாகமம் என்ன பதிலை சொல்கிறது என்று காண்போம்.

கேட்டது:

சமீபத்தில் ஒரு கிறிஸ்தவ நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் நான் இயேசுவை நேரில் பார்த்தேன் என்று கூறினார். ஆச்சரியப்பட்ட நான், எங்கே பார்த்தீர்கள்? எப்படி இருந்தார்? என்று கேட்டேன். அதற்கு அவர், நான் வீட்டிற்கு வரும் வழியில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு முன் கரங்களை நீட்டியவாறு நின்றிருந்தார் என்றார்.

இதேபோல வேறொரு இரட்சிக்கப்பட்ட சகோதரனின் வீட்டிற்கு சென்றிருந்தேன். ஆவிக்குரிய சபையில் ஞாயிறு பள்ளி படித்து, ஞானஸ்நானம் எடுத்து தொடர்ந்து ஆலயத்திற்கு செல்லும் அவரது வீட்டில் நுழைந்த உடன் நம்மை வரவேற்பது போல, ஒரு படத்தை வைத்திருந்தார்.

இது குறித்து கேட்ட போது, நாம் ஆராதிக்கும் தேவன் கண்களுக்கு முன்பாக இருப்பதால், நம் கவனம் சிதறுவது இல்லை. கண்களை மூடி மனதில் தியானித்து ஜெபிப்பது அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்று விளக்கம் அளித்தார்.

ஆராய்ந்தது:

இப்படி பல இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்குள்ளே படம் வைத்து வழிப்படும் வழக்கம் இருக்கிறது. எனவே இயேசுவின் படத்தை வைத்து வணங்குவது பரிசுத்த வேதாகத்தின்படி சரியா? தவறா? என்ற எண்ணம் எழுகிறது.

பரிசுத்த வேதாகமத்தில் மோசேக்கு அளிக்கப்பட்ட 10 கட்டளைகளில் முதல் கட்டளையே, வேறே தேவனை உனக்கு உண்டாக்க வேண்டாம் என்பதாகும். யாத்திராகமம்:20.3-5 வசனங்களை கவனித்து படித்தால், சொரூபத்தையாகிலும் விக்கிரகத்தையாகிலும் உனக்கு உண்டாக்கவும், நமஸ்கரிக்கவும் வேண்டாம் என்று காண்கிறோம்.

இந்த வசனத்தை வாசிக்கும் போது, சிலைகளை வணங்க கூடாது என்று நினைக்கிறோம். ஆனால் சொரூபம் என்பதற்கு நிகரான உருவம் என்று பொருள். எனவே ஒருவருடைய உருவத்தை ஒத்ததாக நினைத்து வரையப்படும் படத்தை கூட நாம் நமஸ்கரிக்க கூடாது. அது தேவனுக்கு விரோதமான பாவம். அதை அவர் அருவருக்கவும் செய்கிறார்.

அதை கூறினால், இயேசு கிறிஸ்துவின் உருவத்தை தானே வணங்குகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது என்ற கேள்வி எழலாம். புதிய ஏற்பாட்டை முழுமையாக படித்தால், இயேசு பிறந்தது முதல் பரலோகத்திற்கு ஏறி சென்றது வரை எந்த இடத்திலும் அவரை உருவமாக யாரும் வரைந்ததாக எழுதப்படவில்லை. தன்னை படம் வரைந்து கொள்ள அவர் அனுமதிக்கவும் இல்லை.

புதிய ஏற்பாட்டு ஆதி கிறிஸ்தவர்களின் காலத்தில் கூட அவரது உருவத்தை வைத்து வணங்கியதாக குறிப்பிடவில்லை. மரணத்தில் இருந்து உயிர்த்தெழும் வல்லமை கொண்ட இயேசுவிற்கு ஒரு சுய உருவத்தை உருவாக்க முடியாதா என்ன?

மனிதனை சொந்த உருவில் உருவாக்கிய தேவனால் அது செய்வது கஷ்டமா என்ன? அதை அவர் செய்யாமல் விட்டதில் இருந்தே, அதை அவர் விரும்பவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

இப்படியிருக்க, இயேசுவின் உருவத்தை வணங்குவதால் நமக்கு ஏதாவது கெடுதல் வருமா? என்ற சந்தேகம் வருகிறது. உயிருடன் இருக்கும் ஒருவர், நம் பக்கத்தில் இருக்க, அவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, அவரது உருவம் என்ற பெயரில் இருக்கும் கற்பனை படத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதும் வணங்குவதும் தவறு தானே. அது அவரை அவமானப்படுத்துவதற்கு சமம்.

சிந்தித்தது:

இந்த காலத்தில் இயேசுவின் உருவம் என்ற பெயரில், பலரும் வணங்கும் படத்தில் இருக்கும் நபர், ஏதாவது ஒரு மனிதரை முன்னிறுத்தி வரையப்பட்ட ஒரு கற்பனை ஓவியம். இதனால் மனிதனை மறைமுகமாக வணங்கவும் நேரிடுகிறது. அது நமக்கு மட்டுமின்றி, நம் பிள்ளைகளுக்கும் ஒரு தவறான கண்ணோட்டத்தை அளிக்கும்.

இயேசுவை விசுவாச கண்களில் காணும் அனுபவத்தை இழந்து, உருவத்தில் காணும் பழக்கத்தை வளர்த்து கொள்வார்கள். எதிர்காலத்தில் அதுவே உருவ வழிபாட்டிற்கு அவர்களை வழிநடத்தவும் வாய்ப்பு உள்ளது.

இயேசு கூறுவது போல காணாமல் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் (யோவான்:20.29). மேலும் இனி உலகத்திற்கு வரவிருக்கும் அந்தி கிறிஸ்து இன்று இயேசு என்ற உருவில் வணங்கப்படும் அதே உருவில் வந்தால், பெரும்பாலான கிறிஸ்தவர்கள் எளிதாக ஏமாறவும் வாய்ப்புள்ளது.

இது எங்களுடைய சொந்த கருத்து அல்ல. மேலும் யாரையும் குற்றப்படுத்தவோ, வேதனைப்படுத்தவோ இந்த செய்தியை வெளியிடவில்லை. வேதத்தின்படி, நாம் செய்வது சரியா, தவறா? என்று ஆராய்ந்து பார்த்தோம். எனவே நம் வீடுகளில் இயேசு என்ற பெயரில் நம்பப்படும் படங்களை வைத்திருக்க வேண்டுமா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

By admin