நான் சண்டே ஸ்கூல் படிக்கும் போது, நடந்த ஒரு சம்பவம், எனக்கு அடிக்கடி ஞாபகத்திற்கு
வருவதுண்டு. அதை குறித்து பலரிடமும் பகிர்ந்துள்ளேன். அந்த காரியத்தை தற்போது
இணையதள வாசகர்களிடமும் பகிர்ந்து கொள்ள வாஞ்சிக்கிறேன்.

கேட்டது…
ஞாயிறு பள்ளியில் எனது வாத்தியார் எங்களுக்கு பாடம் எடுக்கும் முன் கடந்த வாரத்தை குறித்து
கேட்பது வழக்கம். இந்நிலையில் ஒரு ஞாயிறு பள்ளி வகுப்பில் கடந்த வாரம் யாரெல்லாம் சினிமா
பார்த்தீர்கள் என்ற கேள்வியை கேட்டார். நான் உட்பட பலரும் வெட்கத்தோடு கரங்களை
உயர்த்தினோம்.
அடுத்த கேள்வி, யாரெல்லாம் இன்று காலையில் ஜெபித்தீர்கள்? கரங்களின் எண்ணிக்கை மிகவும்
குறைவாகவே இருந்தது. அடுத்த கேள்வி: யாரெல்லாம் இன்று காலையில் பைபிள் படித்தீர்கள்?
இங்கொன்றும், அங்கொன்றுமாக ஓரிரு கரங்கள் மட்டுமே உயர்ந்திருந்தன.
அதன்பிறகு கேள்விகளை கேட்ட வாத்தியார், எங்களோடு பேச ஆரம்பித்தார். “ஒரே குழாயில்
இருந்து சுத்தமான நீரும், சாக்கடை நீரும் வந்தால் நன்றாக இருக்குமா?” ஆனால் பாருங்கள், நாம்
சினிமாவும் பார்க்கிறோம். தேவனை ஆராதிக்க தேவாலயத்திற்கும் வந்திருக்கிறோம். சினிமாவை
பார்த்து நம் ஆவிக்குரிய வாழ்க்கையை கெடுக்கும் பாடல்களையும் பாடுகிறோம். தேவாயத்திற்கு
வந்து நம் ஆவியை உயிர்ப்பிக்கும் துதியின் பாடல்களையும் பாடுகிறோம். நாம் செய்வது சரியா
என்பதை யோசித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அன்றைய பாடத்தை துவக்கிவிட்டார்.
ஒரே குழாயில் இருந்து சுத்தமான நீரும், சாக்கடை நீரும் வந்தால் நன்றாக இருக்குமா? என்ற
கேள்வி மட்டும் என் மனதில் பலமாக பதிந்துவிட்டது. அது எனது கல்லூரி நாட்களிலும், பணியின்
நிமித்தம் பல இடங்களுக்கு சென்ற போதும் பாவங்களில் விழுந்து அழியாமல் இருக்க
அவ்வப்போது என்னை உணர்த்தியது.
இன்று பலருக்கும் மேற்கூறிய சிந்தனை இல்லாமல் பாவ எண்ணங்கள் மற்றும் உலக
யோசனைகளில் சிக்கி தவிக்கிறார்கள். பாவ எண்ணங்கள் வரும் போதே, நாம் தேவனுக்கு
உரியவர்கள் என்பதை மனதில் உறுதிபடுத்தி கொண்டு, அவரை நோக்கி பார்ப்போம்.
பாவ குழியில் இருந்து மீட்கப்பட்ட நாம், திரும்ப அதற்குள் விழுந்து விட கூடாது என்பதில்
தேவன் கருத்தாக இருக்கிறார். அதற்கு நாம் ஒத்துழைக்கிறோமா…?

  • கிறிஸ்துவிற்குள் அன்பான சகோதரர்.

By admin