சில நாட்களுக்கு முன்பு, எதிர்பாராத வகையில் புத்தகம் ஒன்றை படிக்க நேர்ந்தது. அதில் வந்த
ஒரு கதை என்னை மிகவும் யோசிக்க வைத்தது.
இன்றைய கிறிஸ்தவர்களிடையே காணப்படும் பொதுவான சந்தேகங்களில் ஒன்று
என்னவென்றால், நாம் பாவம் செய்ய முழு காரணமாக இருக்கும் பிசாசை, தேவன் அழிக்காமல்
விட்டுள்ளது ஏன்? என்பதாகும். ஒரு சாதாரண கிறிஸ்தவனான எனக்கும் இந்த சந்தேகம்
நீண்டகாலமாக இருந்தது. ஆனால் என்னை சிந்திக்க வைத்த அந்த கதையின் மூலம் தேவன்
அதற்கு பதிலளித்தது போல இருந்தது. நம் இணையதள வாசகர்களுக்கும் அந்த கதை பயன்படும்
என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறோம்.


கதை இப்படியாக வருகிறது…


ஒரு ஊரில் பக்தி நிறைந்த பாதிரியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தேவாலயத்திற்கு வரும்
மக்களை எப்படியாவது தேவனுக்கு பிரியமான பிள்ளைகளாக மாற்ற வேண்டும் என்ற
லட்சியத்தோடு வாழ்ந்து வந்தார். ஆனால் இதற்கு தடையாக இருந்த பிசாசின் மீது பாதிரியாருக்கு
ஏகப்பட்ட கோபம்.
ஒரு நாள் பாதிரியார் வழக்கம் போல தேவாலயத்தில் ஜெபத்தை முடித்த பிறகு, பக்கத்து ஊரில்
இருந்த ஒருவரை காண ஆள்நடமாட்டம் குறைவான ஒரு காட்டுப் பகுதி வழியாக நடந்து
சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் காணப்பட்ட முட்புதர்களின் இடையே இருந்து ஒரு அழுகை சத்தம்
கேட்டது. திடுக்கிட்ட பாதிரியார், அந்த இடத்திற்கு சென்று பார்த்தார். உடல் முழுவதும்
காயங்களுடன் ஒருவர் சாகும் நிலையில் கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பாதிரியார்,
முட்புதரை விலக்கி, அவரை வெளியே கொண்டு வந்தார்.
பின்னர் காயமடைந்த நபரிடம் விசாரித்த போது, தான் காப்பாற்ற நினைத்தது ஒரு மனிதனை
அல்ல, பிசாசை என்பது பாதிரியாருக்கு தெரியவந்தது. அப்போது பரிதாப மனநிலை மாறி,
பிசாசின் நிலையை எண்ணி மனம் மகிழ்ந்த பாதிரியார், “எனக்கும் என் மக்களுக்கும் எவ்வளவு
தொல்லைகளை தருகிறாய். நீ துடிதுடித்து சாவதை நான் சந்தோஷமாக பார்ப்பேன்” என்று கூறி
பிசாசை விட்டு விலகி நின்றார்.
இயேசுவை சோதித்த போது வேத வசனங்களை கூறியது போல, பாதிரியாரிடமும் வேதம்
வசனங்களை கூறியது பிசாசு. “உன்னை போல உன் அயலானையும் நேசி, நீ உன்னிடத்தில்
அன்பு கூறுகிறது போல, பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக” போன்ற வசனங்களை
நினைத்தாவது எனக்கு உதவி செய்ய கூடாதா? என்று கேட்டது. பாதிரியார் இதற்கெல்லாம்
மசியவில்லை.

கடைசியாக, நான் இல்லையென்றால், தேவனை யாருமே தேடமாட்டார்கள். எல்லாரும் சொந்த
இஷ்டத்தில் நடக்க ஆரம்பித்து விடுவார்கள் என்றது பிசாசு. பாதிரியார் ஒன்றும் புரியாதவராக,
ஏன்? என்றார்.
நான் இல்லாவிட்டால் கிறிஸ்தவ மக்களுக்கு எந்த தொல்லையும், கஷ்டமும், இருக்காது.
அவர்களோடு போராட யாரும் இல்லாத காரணத்தால், எல்லாரும் சொந்த இஷ்டத்தில்
நடப்பார்கள். தேவனே நேரடியாக வந்து, நான் சொல்வது போல செய்யுங்கள் என்று பேசினால்
கூட கேட்கமாட்டார்கள். எனவே நீ என்னை காப்பாற்றினால் மட்டுமே, மக்களை
தேவனிடத்திற்கு உன்னால் முழுமையாக திருப்ப முடியும் என்றான் பிசாசு.
நான் கிறிஸ்தவர்களுக்கு கஷ்டங்களை கொடுக்கும் போது தேவாலயத்திற்கு வந்து, கண்ணீரோடு
தேவனை தேடுவார்கள். இப்போது நீ என்னை காப்பாற்றினால், மேற்கண்ட உதவியை உனக்கு
நிச்சயம் செய்வேன் என்று பிசாசு உறுதி அளித்தது.
இதை கேட்ட பாதிரியார், தாமதிக்காமல் பிசாசை தன் தோளின் மேல் தூக்கிக் கொண்டு சென்று
மருத்துவமனையில் சேர்த்தார். சில நாட்களில் பிசாசு முழுமையாக குணமடைந்தது.
பாதிரியாரிடம் உறுதியளித்தது போலவே, எல்லாருக்கும் கஷ்டங்களை கொடுத்தான். இதனால்
அந்த ஊரில் இருந்த எல்லாரும் தேவ பக்தி மிகுந்தவர்களாக மாறினர்.


சிந்தித்து…
மேற்கூறிய சம்பவம் உண்மையில் நடைபெறாது என்றாலும், இந்த உலகில் பிசாசு
வைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் இதுவாக கூட இருக்கலாம் என்ற ஒரு சிந்தனை எனக்குள்
எழுந்தது. ஆண்டவரே, எனக்கு பிரச்சனைகளை கொண்டு வரும் பிசாசை அழித்து போடும் என்று
ஜெபிக்காமல், அவனை ஜெயிக்க எனக்கு பெலன் தாரும் என்று ஜெபிப்போம். ஆவிக்குரிய
வாழ்க்கையில் நம் எதிரியான பிசாசு, நம்மோடு போராட எப்போதும் தயாராக இருக்கிறான்.
ஆனால் நாம் அவனுடன் யுத்தம் செய்ய தயாராக இருக்கிறோமா?

  • கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

By admin