
கேரளாவைச் சேர்ந்த ஒரு சகோதரி கூறுகிறார்…
தமிழகத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு சிறிய வயதில் இருந்தே அதிக ஆரோக்கிய பிரச்சனைகள் வந்தன. இதற்காக பலரின் ஆலோசனைகளைக் கேட்டு, பல வழிப்பாட்டு தலங்களுக்கு சென்று, பல சிறப்பு வழிபாடுகளை என் பெற்றோர் செய்தார்கள். ஆனால் எதுவுமே உதவவில்லை.
சென்னையில் உள்ள பிரபல மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றும், இதில் இருந்து குணமடையவில்லை. மருத்துவ சோதனைகளில் என் மூக்கில் ஒரு சதை வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. மேலும் அது நாளுக்கு நாள் வளர்ந்து, எனக்கு அதிக வேதனையும் அளித்தது. குறிப்பாக, அவ்வப்போது மூக்கில் ரத்தம் வருவது, சைனஸ் பிரச்சனை, தொடர் தும்மல் என அதிக தொல்லையாக இருந்தது.
அப்போது நண்பர் ஒருவர் மூலம் அருகில் இருந்த தேவ ஆலயத்திற்கு அழைத்து செல்லப்பட்டேன். தேவன் விடுதலை தருவார் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து கூட்டங்களில் கலந்து கொண்டேன். இதற்கிடையில், எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மூக்கில் வளர்ந்த சதை அகற்றப்பட்டது.
ஆனால் சில மாதங்களில் திரும்பவும் வளர ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் அந்த பிரச்சனையோடு வாழ பழக வேண்டியது தான் என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பரிசுத்தாவியின் அபிஷேகம் பெற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் என மனதில் அதிகரித்தது.
தேவனே என்னை பரிசுத்தாவியின் வல்லமையால் நிரப்பும் என்று ஜெபிக்க ஆரம்பித்தேன். சில நாட்கள் கடந்த போது, எனது பழக்கவழக்கங்கள் மாற ஆரம்பித்தன. ஜெபம், வேத வாசிப்பு, எல்லா தேவாலய கூட்டங்களுக்கும் செல்வது ஆகியவை அதிகரித்தன.
ஒருநாள் தேவாலயத்தில் அனைவரும் ஆவியில் நிரம்பி கொண்டிருக்கும், எனக்குள் ஒரு வல்லமை நிரம்புவதை உணர்ந்தேன். அந்த வல்லமையால் இங்கும் அங்குமாக தூக்கி வீசப்பட்டேன். கட்டுப்படுத்த முடியாத தேவ வல்லமை எனக்குள் இறங்குவதை அறிந்தேன்.
எவ்வளவு நேரம் நான் ஆவியில் நிரம்பினேன் என்று தெரியவில்லை. ஆனால் நீண்டநேரம் அந்த அனுபவம் எனக்குள் இருந்ததாக தெரிந்தது. ஒரு கட்டத்தில் நான் சாந்தமாகி, நான் திரும்ப என் இருப்பிடத்திற்கு வந்து அமர்ந்த போது, என் மூக்கில் இருந்து லேசாக ரத்தம் வருவதை அறிந்தேன்.
நான் ஆவியில் நிரம்பிய போது, அருகில் இருந்த மேசையில் நான் மோதியதாக பக்கத்தில் இருந்தவர்கள் கூறினார்கள். சிறிது நேரத்தில் என்னால் சீராக மூச்சு விட முடிந்தது. அவ்வளவு நாட்களாக மூக்கில் வளர்ந்த சதை மூலம் இருந்த தடை மறந்திருந்தது.
மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என்று வீட்டில் கூறினார்கள். ஆனால் எனக்கு இருந்த அந்த சதை அடைப்பு இல்லாததை உணர்ந்த நான், அதற்கு மறுத்துவிட்டேன். பரிசுத்தாவியின் அபிஷேகம் கிடைத்த பிறகு, என் மூக்கில் இருந்த சதை வளர்ச்சி நின்றது. சைனஸ் பிரச்சனையும் வரவில்லை. பூரண விடுதலையை பெற்றேன்.
எனது உடலில் இருந்த ஆரோக்கிய பிரச்சனைகள் ஒவ்வொன்றாக மறந்தன. தேவனே, எனக்கு சுகம் தரும் நிரந்தர வைத்தியராக உள்ளார். இந்த சாட்சியை வாசிக்கும் உங்களுக்குள், இருக்கும் எந்த பிரச்சனையும் தீர்க்க இயேசுவால் கூடும் என்பதை விசுவாசியுங்கள். விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காணலாம் என்பதற்கு நான் நடமாடும் சாட்சியாக இருக்கிறேன்.