0 1 min 6 mths

இயேசு கிறிஸ்து மரித்து, உயிர்த்தெழுத்து 40 நாட்கள் இந்த உலகிலேயே இருந்து, இடறலடைந்த அவரது சீஷர்களை திடப்படுத்திய பிறகு, பரலோகத்திற்கு ஏறி செல்லும் முன் அளித்த வாக்குறுதிகளில் முக்கியமானது பரிசுத்தாவியின் அபிஷேகம்.

இன்றைய கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர், பரிசுத்தாவியின் அபிஷேகத்தை, ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் ஒதுக்கி விடுவதை காணலாம். மேலும் பல கிறிஸ்தவர்களுக்கும், பரிசுத்தாவியை குறித்த தெளிவான அறிவு இல்லாததால் தான், அந்நிய பாஷையை கிண்டல் செய்வதும், ஆவியில் நிறைந்து சந்தோஷப்படுபவர்களை பார்த்து கேலி செய்வதும், இன்றைய கிறிஸ்துவ சபைகளில் காண கிடைக்கும் சாதாரண நிகழ்ச்சியாக மாறி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நமது இணையதளத்தின் பேஸ்புக் பக்கத்தின் நட்பு வட்டாரத்தை சேர்ந்த ஒருவர், பரிசுத்தாவியை குறித்த பல சந்தேகங்களை கேட்டு தெரிந்துக் கொண்டார். அதேபோல ஞாயிறு பள்ளிக்கு வரும், ஒரு சிறுவனுக்கும் பரிசுத்தாவியின் முக்கியத்துவத்தை குறித்து விளக்கினேன்.

அப்போது, அச்சிறுவனுக்குள் பரிசுத்தாவியை பெற வேண்டும் என்ற ஒரு பேராவல் ஏற்பட்டதை காண முடிந்தது. எனவே நம் வாசகர்களுக்கும் பயன்படும் வகையில், இந்த செய்தியின் மூலம் பரிசுத்தாவியின் அபிஷேகத்தின் அவசியம் குறித்து விளக்க விரும்புகிறோம்.

பைபிளை கவனமாக படித்தால், பழைய ஏற்பாட்டு காலத்தில் இருந்தே, பரிசுத்தாவி இவ்வுலகிற்கு அவ்வப்போது வந்து சென்றுள்ளதை காணலாம். ஆனால் கிறிஸ்தவர்களில் சில பிரிவினர் எழும்பி, பரிசுத்தாவி என்ற ஒன்று கிடையாது, அது தேவையே இல்லை என்றெல்லாம் வாதாடுகிறார்கள்.

பழைய ஏற்பாட்டில் “கர்த்தருடைய ஆவி” என்ற பெயரில் பல இடங்களில் கூறிப்பிடப்பட்டுள்ள இந்த பரிசுத்தாவி, புதிய ஏற்பாட்டில் தான் தேவ மக்களின் மீது நிரந்தரமாக தங்க ஆரம்பித்தது.

பரிசுத்தாவியின் அவசியம்:

அப்போஸ்தலருடைய நடபடிகள்:1.8-ல் பரிசுத்தாவியின் பண்புகளை குறித்து இயேசு குறிப்பிடுகிறார். அதாவது, பரிசுத்தாவி நம் மீது வரும் போது, நமது ஆவி, ஆத்மா, சரீரம் ஆகிய மூன்றிலும் ஒரு புதுபலம் உண்டாகிறது. இந்த வல்லமையை பெற்ற பிறகுதான், நாம் தேவனுக்காக சாட்சிகளாக மாறுகிறோம். அப்போது நமக்குள் இருக்கும் வெட்கம், பயம், கலக்கம் ஆகிய அனைத்தும் விலகி விடுகிறது.

நம் வாழ்க்கையில் தேவன் செய்த எல்லா நன்மைகளை குறித்தும், நம்மை மீட்டெடுத்த பாவ அனுபவங்களை குறித்தும் வெளிப்படையாக கூறுவோம். இதை நாம், எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் பூமியின் கடைசிப் பரியந்தம் சென்று கூற வேண்டும்.

இதில் எருசலேம் என்பது நமது குடும்பத்தையும், யூதேயா என்பது நாம் சார்ந்திருக்கும் சபையையும், சமாரியா என்பது நமது சுற்றத்தாரையும், பூமியின் கடைசிப் பரியந்தம் என்பது மற்ற எல்லாரையும் குறிக்கிறது.

பரிசுத்தாவியின் வல்லமையை பெறுவதற்கு முன், இயேசுவின் சீஷர்கள் யாரும் வெளிப்படையாக, அவரை குறித்து பேச பயப்பட்டார்கள் என்று வேதத்தில் காண்கிறோம்.

ஆனால் பரிசுத்தாவியை பெற்ற பிறகு, தங்களோடு இயேசு இல்லாத நிலையிலும், (அப்போஸ்தலர் நடபடிகள்: 2 அதிகாரம்) பேதுரு வெளிப்படையாக செய்த முதல் பிரசங்கத்தில் 3000 பேர் இரட்சிக்கப்பட்டு சபையோடு சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள் என்று காண்கிறோம்.

எனவே நாம் பரிசுத்தாவியின் அபிஷேகத்தை பெற்ற பிறகு, தேவ ஊழியங்களில் ஈடுபடுவது நல்லது. அப்போது தான் தேவ நடத்துதலை ஊழியங்களில் காண முடியும். இல்லாவிட்டால் நமது சுயசித்தமும், சுயதிட்டத்தையும் மட்டுமே கண்டு, ஏமாற்றத்தை பெற அதிக வாய்ப்புள்ளது.

மேலும் பரிசுத்தாவியினால் நிரப்பப்பட்ட ஆதிகால அப்போஸ்தலர்கள், தங்களின் வாழ்க்கையில் வந்த எந்த போராட்டத்திலும் தளர்ந்து போகவில்லை; பின்மாற்றம் அடையவில்லை. அவர்கள் அடைந்த துன்பங்கள், நெருக்கங்கள் மூலம் பல ஆயிரக்கணக்கான மக்களை இரட்சிக்க முடிந்தது. எனவே நமது ஊழியங்களில், பரிசுத்தாவி மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

அவர் ஒரு தேற்றரவாளன்:

பரிசுத்தாவியை குறித்து யோவான்:16.7-11 ஆகிய வசனங்களில், தேற்றரவாளனாக செயல்படுவதாக இயேசு கூறுகிறார். மேலும் அவர் வந்து பாவத்தை குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துவார் என்கிறார் இயேசு.

ஆனால் இன்று பரிசுத்தாவி என்பது ஏதோ புரியாத பாஷையில் சபையில் கொஞ்சநேரம் பேசி, விசித்திரமான சில உடல் அசைவுகளை ஏற்படுத்துவது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அது பரிசுத்தாவியின் அபிஷேகம் அல்ல. அது நமது உடலில் ஏற்படும் எழுச்சியின் வெளிப்பாடு அவ்வளவுதான்.

ஆனால் உண்மையில் பரிசுத்தாவியின் அபிஷேகத்தினால் நிரம்பும் ஒருவர், தனது பாவத்தை குறித்த குற்ற உணர்வு அடைவான். ஏனெனில் அவனுக்குள் ஒரு பரிசுத்தத்தின் வேலை தொடர்ந்து நடந்துக் கொண்டே இருக்கும்.

இது குறித்து, 1சாமுவேல்.10.6-ல் காண முடிகிறது. இந்த வசனத்தோடு தொடர்புடைய சவுலின் அனுபவத்தை ஒப்பிட்டு, தினத்தியானம் பகுதியில் ஒரு செய்தியை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.

எனவே பரிசுத்தாவியின் அபிஷேகம் நமக்குள் வரும் போது, நம்மில் உள்ள பாவங்களை குறித்த உணர்வை அளித்து, அதிலிருந்து ஒரு பூர்ண விடுதலையை அளிக்கிறது என்று வேதம் (2 கொரிந்தியர்:3.17) கூறுகிறது. மேலும் நமக்கு தேவையான தேவ ஆலோசனைகளை, தகுந்த நேரத்தில் அருளுகிறார். இதனால் தேவனை விட்டு விலகி போகாமல் காக்கப்படுகிறோம்.

மேற்கண்ட செய்தியின் மூலம் பரிசுத்தாவியின் அவசியம் குறித்து ஒரு சிறிய அறிமுகத்தை மட்டுமே அளித்துள்ளோம். பரிசுத்தாவியை குறித்து நாம் விவரிக்க துவங்கினால், அது மிகவும் நீண்ட செய்தியாகிவிடும். எனவே கர்த்தருக்கு சித்தமானால், இனி வரும் நாட்களில் பரிசுத்தாவியை குறித்த மற்ற காரியங்களை வெளியிடுகிறோம்.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *