0 1 yr

உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழப் பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்?” பிரசங்கி:3.21


உலகத்தையும், அதில் உள்ளவைகளையும் தனது வார்த்தையினால் தேவன் உருவாக்கினார் என்று பரிசுத்த வேதாகமம் துவங்குகிறது. அதன்பிறகு மனிதனை மண்ணில் இருந்து வடிவமைத்து, தேவன் உருவாக்கினார். மனுஷியை மனித எலும்பில் இருந்து படைத்தார். எனவே படைப்பிலேயே மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் வித்தியாசம் உண்டு என்பதை அறியலாம்.நமது தியான வசனத்தில், மேற்கண்ட இரு உயிர்களின் மரணத்திற்கு பிறகு நடைபெறும் சம்பவங்களை ஞானி சாலொமோன் குறிப்பிடுகிறார். அதாவது மனிதன் மரித்த பிறகு, அவனுடைய உடல் மண்ணிற்கு திரும்பினாலும், தேவன் அளித்த ஆவி, தேவனிடத்திற்கே திரும்பும். அது மண்ணில் புதைந்து போவதில்லை.

தேவனுடைய வார்த்தையினால் உருவாக்கப்பட்ட மற்ற எந்த உயிர்களுக்கும், இந்த சிறப்பு கிடையாது. ஆனால் இந்த காலத்தில் கூட மறுஜென்மம் அல்லது 7 ஜென்மங்கள் உண்டு என்பதை நம்புகிறார்கள். இதிலும் பரிசுத்த வேதாகமம் படிக்கும் கிறிஸ்தவர்கள் கூட அதை நம்புகிறார்கள் என்பது தான் வருந்தத்தக்கது.

இது குறித்து கூறும் போது, பல கிறிஸ்தவர்களும் “நாங்கள் அதையெல்லாம் நம்புவது இல்லை” என்று கூறுவார்கள். ஆனால் இன்று மறைமுகமாக பலரும், தங்களுக்கே தெரியாமல் நம்புகிறார்கள். இதை எப்படி என்று ஒரு சிறிய வேத எடுத்துக்காட்டு மூலம் காட்டுகிறேன்.

இயேசு கிறிஸ்துவை உண்மையான உலகின் இரட்சகர் என்று மனதில் விசுவாசித்து வாயினால் அறிக்கையிடும் போது, பாவி ஒருவர் இரட்சிக்கப்படுகிறார். அதன்மூலம் அவரது பாவங்களுக்கான தீர்வு கிடைக்கிறது. அதன்பிறகு ஞானஸ்நானம் எடுக்கும் போது, பாவங்கள் முழுமையாக கழுவப்படுகிறது. இது ஒரு ஆவிக்குரிய வழி.

ஆனால் இதற்கு எதிர்மறையான ஒரு வழியும் உண்டு. இன்றைய கிறிஸ்தவர்களில் பலரும், பல ஜென்மங்கள் உள்ளதை நம்புவதில்லை என்று கூறினாலும், தங்களின் பேச்சுவழக்கில், “எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான்…” என்று கூறுவதை கேட்க முடிகிறது. அதில் என்ன தப்பு இருக்கிறது என்று நமக்கு சாதாரணமாக தோன்றினாலும், அவர்கள் அந்த காரியத்தை அறிக்கையிடுகிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது, அந்த காரியத்தை முழுமையாக நம்புவதாக ஏற்றுக் கொள்கிறார்கள் என்று பொருள்.

இதன்மூலம் எப்படி இயேசுவை இரட்சகராக அறிக்கையிட்டு இரட்சிப்பை பெறுகிறோமோ, அதேபோல மேற்கூறிய தேவனுக்கும், வேத வசனத்திற்கும் விரோதமான காரியத்தினால் ஏற்படும் பாவத்திற்கான தண்டனையை பெற, தகுதி பெறுகிறோம். எனவே இது போன்ற அந்நிய தெய்வங்களின் காரியங்கள், கதைகள் ஆகியவை தவறானது என்று நாம் அறிந்து, இதுபோல வாயினால் கூறி அறிக்கையிடுவதை இன்றோடு விட்டுவிடுவோம்.

இவை எல்லாம் மறைமுகமாக பிசாசு, நம் வாழ்க்கையில் கொண்டு வரும் சாபத்திற்கான வழிகளாக உள்ளன. இதை கண்டறிந்து, இயேசு கூறுவது போல பாம்பை போல வினா உள்ளவர்களாக இருப்போம். அதற்கு தேவன் உதவி செய்வராக.

ஜெபம்:
எங்களை நேசிக்கும் அன்பான இயேசுவே, எங்களோடு பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். எங்களில் உள்ள குறைகளை நீர் அவ்வப்போது உணர்த்தி, பரிசுத்தப்படுத்தி வருகிற கிருபைக்காக ஸ்தோத்திரம். எங்களுக்கே தெரியாமல் நாங்கள், மேற்கூறிய செய்தியில் உள்ள போன்ற பல அறிக்கைகளை கூறிய குறைகளை மன்னியும். இனி வரும் நாட்களில் ஆவிக்குரிய விழிப்புள்ளவர்களாக வாழ உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *