0 1 min 6 mths

2021 ஆம் ஆண்டின் துவக்கத்தில் நம்மோடு இருந்த பலரும் இன்று, நம்மிடையே தற்போது இல்லை. அதேபோல ஆண்டின் துவக்கத்தில் நம்மிடத்தில் இல்லாத பலரும், புதியதாக நம்முடன், நம் குடும்பத்தில் இணைந்திருக்கலாம். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டில் நமது ஆவிக்குரிய வாழ்க்கையிலும், சரீர வாழ்க்கையிலும் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது என்பதை சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.

இதன்மூலம் நமது வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகளை கண்டறிந்து, அதை மீண்டும் வராமல் தடுப்பதற்கான வழிகளையும், திட்டங்களையும் தீட்ட முடியும். அதேபோல நமது வாழ்க்கையில் கிடைத்த வெற்றிகளுக்கும், நன்மைகளுக்கும், தேவனுக்கு நன்றி தெரிவிக்கவும் உதவியாக இருக்கும்.

பொதுவாக நம் வாழ்க்கையில் பெறும் வெற்றிகளை நாம் நீண்டகாலம் எண்ணிப் பார்ப்பது இல்லை. ஆனால் நாம் அடைந்த தோல்விகளை பலரும் எளிதில் மறப்பது இல்லை. ஏனெனில் தோல்விகளால் நாம் அடைந்த இழப்பு நமது மனதில் பெரிய அளவிலான பாதிப்பையும், துக்கத்தையும் ஏற்படுத்தி விடுகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும், கடந்த ஆண்டில் நமது வாழ்க்கையில் இல்லாத அல்லது தோல்வியை அளித்த ஒரு காரியத்தில் வெற்றி பெற விரும்பி தீர்மானங்கள் எடுப்பது இயல்பு. அதுவும் கிறிஸ்தவர்கள் இடையே, புத்தாண்டு ஆராதனையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மிகவும் ஆவிக்குரியதாக அமைகிறது.

கேட்டது:

இந்நிலையில், ஒரு முறை புது வருட ஆராதனையில் என்னை மிகவும் சிந்திக்க வைத்த ஒருவரின் சாட்சியை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஒரு வாலிபர் தனது சாட்சியை கூறுகையில், “நான் கடந்த புது வருட ஆராதனையில் கலந்து கொண்ட போது, பல தீர்மானங்களை எடுத்தேன்.

அதன்மூலம் எனது ஆவிக்குரிய வாழ்க்கையில் பெரும் வளர்ச்சியை அடைய விரும்பினேன். ஆனால் முடிவை எட்டியுள்ள இந்த ஆண்டை நான் திரும்பி பார்த்தால், என் தீர்மானங்களில் ஒன்றாவது கடைபிடித்தேனா? என்பது கூட அறிய முடியாத வகையில், நான் எடுத்த தீர்மானங்கள் என்னென்ன என்பதே எனக்கு ஞாபகத்தில் இல்லை” என்றார்.

சிந்தித்தது:

இன்று நம்மிடையே பலரின் நிலையும் இது போன்றதாக அமையலாம். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், புது வருட ஆராதனை அல்லது ஜனவரி 1 ஆம் தேதி முதல்… என்ற ஒரு நம்பிக்கையை நமக்குள் வளர்த்து கொள்கிறோம். ஆனால் நமது தீர்மானங்களின் வெற்றிக்காக, தேவனிடத்தில் காத்திருக்கவோ, தேவனிடம் கிருபையையும், அபிஷேகத்தையும் பெற்று கொள்ளவோ காத்திருப்பதில்லை.

இரண்டாவதாக எல்லாரும் தீர்மானம் எடுக்கிறார்கள், நானும் எடுக்கிறேன் என்ற எண்ணம். இதனால் மற்றவர்களை சார்ந்து செல்லும் நமக்கு இடறல் மற்றவர்களின் மூலமே ஏற்படுகிறது.

மூன்றாவதாக உணர்ச்சிவசப்பட்டு கண்மூடித்தனமாக தீர்மானங்களை எடுப்பது. எடுத்துக்காட்டாக, தினமும் தனி ஜெபமே செய்யாத ஒரு நபர், வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல், தினமும் 2 மணி நேரம் ஜெபிக்க போவதாக தீர்மானம் எடுப்பது. தீர்மானம் நல்ல விஷயம் தான். ஆனால் அதில் உறுதியாக நிற்கும் திறன் வேண்டுமே.

ஜனவரி 1 ஆம் தேதி முதல் சில நாட்களுக்கு, தினமும் கஷ்டப்பட்டு 1 மணிநேரம் ஜெபிக்கும் அந்த நபர், காலப் போக்கில் அது படிப்படியாக குறைந்து போகவோ அல்லது அதை தொடர முடியாமலோ போகிறது. மேலும் நாம் ஒரு தீர்மானம் எடுக்கும் போது, அதை தேவனும் கேட்கிறார். பிசாசும் கேட்கிறான்.

நமது தீர்மானங்களின்படி நடக்க தேவையான தேவ பெலத்தை, தேவன் அளிக்கிறார். அதை பெறுவதற்கு நாம் காத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த தீர்மானத்தில் இருந்து விலக்க பிசாசு சோதனைகளையும், போராட்டங்களையும் அளிக்கிறான்.

எனவே 2வதாக வரும் நமது தீர்மானத்திற்கு எதிரான சோதனைகளை ஜெயிக்கும் வல்லமையையும் தேவனிடத்தில் இருந்து நாம் முதலில் பெற்று கொள்ள வேண்டும்.
பெரும்பாலானோர் தமது தீரமானத்தை எடுத்துவிட்டு, அப்போதைக்கு நிலைநிற்க கிடைக்கும் தேவ பெலத்தோடு வீடு திரும்புகிறார்கள். அதை புதுப்பிக்க தவறுகின்றனர்.

அதனால் தீர்மானத்தை பிசாசு எளிதாக, சோதனைகளின் மூலம் ஜெயித்துவிடுகிறான். நாமும் வழக்கம் போல ஒவ்வொரு வருடத்தின் ஜனவரி மாதத்தோடு தீர்மானத்தில் இருந்து விலகி, பழைய வாழ்க்கையே தொடர்கிறோம்.

எனவே இந்த புத்தாண்டை சந்தோஷமாக துவங்கும் நாம் மேற்கண்ட காரியங்களை குறித்து விழிப்புள்ளவர்களாக இருப்போம். நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் தீர்மானங்கள் அவசியம். ஆனால் அவை தேவனுடைய வல்லமையினால் காக்கப்பட வேண்டும்.

தீர்மானங்களை கெடுக்க வரும் சோதனைகளை மேற்கொள்ளும் தேவ வல்லமையை தினந்தோறும் புதுப்பித்து வாழ்வோம். அதன்பிறகு உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் எடுக்கும் தீர்மானங்களில் தோல்வியே இருக்காது. என்றும் ஜெயமே. இந்த புத்தாண்டு, நம் வாழ்க்கையில் ஒரு புதுமையை கொண்டு வரட்டும் என்று இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை கூறுவது…

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *