
தேவனோடு உள்ள உறவை அதிகரிக்க, ஜெபமும் வேத வாசிப்பும் நமக்கு பெரும் உதவியாக உள்ளன. ஜெபத்தினால் நாம் தேவனோடு பேசுகிறோம். வேதம் வாசிக்கும் போது, தேவன் நம்மோடு பேசுகிறார். இந்நிலையில் இன்றைய அவசர உலகில், பலரும் கூறும் ஒரு வரி என்னவென்றால், இதற்கெல்லாம் எங்கப்பா நேரம்? என்கிறார்கள்.
இப்படி கூறுகிறவர்களை நாங்கள் குற்றப்படுத்துவதாக நினைக்க வேண்டாம். ஏனெனில் நடைமுறை வாழ்க்கையில் மனிதன், ஒவ்வொரு நாளும் எவ்வளவு வேகமாக ஓடுகிறான் என்பதை நாங்களும் காண்கிறோம், அனுபவித்தும் அறிகிறோம்.
பார்த்தது:
இந்நிலையில் சமீபத்தில் பெங்களூரில் இருந்து கே.ஜி.எப் (கோலார் தங்க வயல்) என்ற இடத்திற்கு நான் ரயிலில் பயணிக்க நேர்ந்தது. கர்நாடகாவில் இயக்கப்படும் கடும் நெரிசல் கொண்ட ரயில்களில் இதுவும் ஒன்று. ஆனால் அந்த நெரிசலிலும் என்னை ஆச்சரியப்படுத்திய ஒரு சம்பவத்தை தான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
KGF பகுதியில் தொழில் வளம் குறைவு என்பதால், அங்கிருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், பெங்களூருக்கு வந்து செல்கின்றனர். ஏறக்குறைய தினமும் 6 மணிநேரம் ரயில் பயணத்திலேயே இந்த மக்கள் கழிக்கின்றனர். அவர்களின் வாழ்க்கையை எண்ணி பார்த்து வியந்து கொண்டிருக்கும் போது, ரயிலில் எங்கள் அருகில் அமர்ந்திருந்த சில சகோதரிகள் சேர்ந்து, ஒரு பாட்டை ஆரம்பித்தார்கள்.
ஏறக்குறைய மாலை 7 மணிக்கு துவங்கிய அந்த பாடலை தொடர்ந்து, பல காரியங்களுக்காக ஜெபித்தார்கள். முக்கியமாக, தாங்கள் வசிக்கும் KGF நகரின் வளர்ச்சிக்காகவும், அங்குள்ள மக்களின் இரட்சிப்பிற்காகவும் கருத்தாக ஜெபித்தார்கள். இரவு 8 மணி வரை தொடர்ந்த அந்த ஜெபத்தில் கூறிய ஒவ்வொரு காரியங்களும், உண்மையில் என் உள்ளத்தை தொடுவதாக இருந்தது.
இந்த ஜெபத்தில் கலந்து கொண்ட பலரும், தங்களின் தேவைகளை கூறிய போது, அவர்களுக்காகவும் ஜெபிக்கப்பட்டது. நான் அந்த ஜெபத்தில் சிறிது நேரம் கலந்து கொண்டேன். ரயிலை விட்டு இறங்கிய பிறகும், அந்த ஜெபத்தில் கூறப்பட்ட காரியங்களை என்னால் மறக்க முடியவில்லை.
சிந்தித்தது:
நானும் பல முறை நீண்ட பயணங்களை செய்துள்ளேன். ஆனால் ஒரு நாள் கூட பயணத்தில் ஜெபித்தது இல்லை. வேதம் வாசித்தது இல்லை. பயணத்தில் களைப்பாக உள்ளதாக நினைத்து, நன்றாக தூங்கி இருக்கிறேன். இல்லாவிட்டால், ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து நேரத்தை போக்கி இருக்கிறேன்.
பயணம் முடித்து வீடு திரும்பிய பிறகு கூட, பயணக் களைப்பு என்று சாக்கு போக்கு கூறி, ஒரு நாள் சரியான ஜெபம், வேத வாசிப்பு இல்லாமல் படுத்து ஓய்வெடுத்து இருக்கிறேன்.
மேலும் நான் வாழும் ஊருக்காக அல்லது நான் பிறந்த தேசத்திற்காக இவர்களை போல ஒருநாள் கூட பாரத்தோடு ஜெபித்தது கிடையாது. தினமும் பயணித்து களைப்போடு செல்லும் இவர்களுக்குள் இருந்த அந்த ஜெப வாஞ்சை, ஆத்ம பாரம் எனக்கு இல்லையே என்று ஆவியில் உணர்த்தப்பட்டேன்.
அந்த ஜெப வாஞ்சையுள்ள சகோதரிகளின் எழுப்புதலை கண்ட எனக்குள், பயணங்களில் நாம் ஏன் மனதில் ஜெபிக்க கூடாது என்று தோன்றியது. மொபைல்போனில் பைபிள் ஆப் இருக்கிறது, அதை வாசிக்கலாமே! என்று உரைத்தது. அதை தீர்மானமாக எடுத்து, வாழ்க்கையில் செயல்படுத்தினேன்.
உண்மையாகவே, பயணத்தில் வேடிக்கை பார்த்து செல்லும் போது ஏற்படும் தேவையில்லாத சிந்தனைகள் மூலம் தேவனை விட்டு விலகும் நிலை தான் ஏற்பட்டது. ஆனால் வேதம் வாசித்து, ஜெபித்து செல்லும் போது, தேவனோடு நெருங்க முடிந்தது. எனவே ஜெபிக்க, வேதம் வாசிக்க டைம் கிடைப்பதில்லை என்று வருத்தப்படும் சகோதர, சகோதரிகளே, நீங்கள் பயணத்தில் இருக்கும் நேரத்தை அதற்கு பயன்படுத்தி கொள்ளலாமே!
– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.