
அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார். மத்தேயு.22.14
இந்த வார்த்தைகளை, உலகில் பாவிகளை இரட்சிக்க வந்த இயேசு கிறிஸ்து கூறியவை. இந்த வசனத்தில் இரண்டு குழுவினரை குறித்து இயேசு கூறுகிறார். 1.அழைக்கப்பட்டவர்கள், 2.தெரிந்துக் கொள்ளப்பட்டவர்கள்.
அழைக்கப்பட்டவர்கள் யார்? இவர்களை குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் பைபிளின் முதல் புத்தகமான ஆதியாகமத்திற்கு செல்ல வேண்டும். அங்கு ஆபிரகாம் என்ற ஒரு மனிதனை தேவன் அழைக்கிறார். அவரை பெரிய ஜாதியாக மாற்றுவதாக கூறி தேவன் வாக்குத்தத்தம் செய்கிறார்.
இந்த உடன்படிக்கை அவருடைய காலத்தில் நிறைவேறவில்லை என்றாலும், அவருக்கு பின் சந்ததியான இஸ்ரவேல் மக்களிடம் நிறைவேறியது. அவர்கள் பெரிய ஜாதியாக உருவாகி, கானான் நாட்டில் (தற்போது இருக்கும் இஸ்ரவேல் நாடு) குடியேறினார்கள்.
கானான் நாட்டில் குடியேறிய இஸ்ரவேல் மக்கள் அவ்வப்போது தேவனை விட்டு விலகி, விக்கிரகங்களை வணங்கிய போது, தேவன் பல தீர்க்கத்தரிசிகளை அனுப்பி உபதேசித்தார்.
நியாயதிபதிகளை எழுப்பி அவர்களை எதிரிகளின் கைகளில் இருந்து காப்பாற்றினார். அவர்களை ஆளும்படி ராஜாக்களை நியமித்தார். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மீண்டும் விக்கிரகங்களை நோக்கி இஸ்ரவேல் மக்கள் திரும்பினார்கள்.
கடைசியில் உலக பாவங்களை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டு குட்டியாக இயேசுவே மனிதனாக வந்து, இஸ்ரவேல் மக்களுக்கு உபதேசித்தார். ஆனால் அவரை புரிந்து கொள்ளாமல், சிலுவையில் அறைந்து கொன்றனார்கள். ஆனாலும் இயேசு தாம் கூறியது போலவே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
இந்நிலையில் அழைக்கப்பட்டவர்களாக இருந்த இஸ்ரவேல் மக்கள், தங்களின் அழைப்பை ஏற்க மறுத்தனார்கள். இதனால், தேவ ராஜ்ஜியத்திற்கான அழைப்பு, உலகில் மதம், மொழி, இனம் என எந்தொரு வேறுபாடுமின்றி எல்லாருக்கும் பொதுவாக அளிக்கப்பட்டது.
இதனால் பாவத்தில் உழன்று திரிந்த நமக்கும், அந்த நிலையில் இருந்து விடுதலை பெற்று கிறிஸ்து இயேசுவின் இரட்சிப்பை பெற்று தேவ ராஜ்ஜியத்திற்குள் செல்ல வாய்ப்பு கிடைத்தது.
இந்த அழைப்பு எல்லாருக்கும் அளிக்கப்பட்டாலும், அதையேற்று வருபவர்கள் மட்டுமே தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களின் பட்டியலில் சேருகிறார்கள். தேவ அழைப்பில் நிலை நின்று இயேசுவைப் போல பரிசுத்தமுள்ளவர்களாக மாறுகிறார்கள் மட்டுமே, தேவ ராஜ்ஜியத்திற்குள் செல்ல முடியும்.
நாமும் இஸ்ரவேல் மக்களைப் போல, தற்காலிகமான இந்த உலக தேவைகளுக்காக தேவனை பின்பற்றினால், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பின்வாங்கி போகும் நிலை ஏற்படும். நமக்கு அளிக்கப்பட்ட விலையேறப்பட்ட இரட்சிப்பின் அழைப்பை பாதுகாத்து அதில் உண்மையுள்ளவர்களாக நடப்போம்.
தேவன் நமக்கு அளித்துள்ள அழைப்பிற்கு ஏற்ப, அவரது கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடக்கும் போது, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர முடியும். அதன்மூலம் பரம ராஜ்ஜியத்தில் சென்று தேவனோடு நித்திய காலமாக வாழ முடியும்.
ஜெபம்:
எங்களை அளவில்லாமல் நேசிக்கும் தெய்வமே, நீர் எங்களுக்கு தந்த விலையேறப்பட்ட இரட்சிப்பின் அழைப்பிற்காக ஸ்தோத்திரம். சில நேரங்களில் அதை மறந்து உலகின் தற்காலிக இன்பங்களை தேடி சென்ற எங்களை மன்னிப்பும். பரம அழைப்பை ஏற்று, தெரிந்து கொள்ளப்பட்டவர்களாக மாறி, உமது மோட்ச ராஜ்ஜியத்தில் வந்து சேர எங்களுக்கு உதவி செய்யும், வழிநடத்தும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.