0 1 min 3 mths

சென்னையைச் சேர்ந்த ஒரு சகோதரி கூறுகிறார்…

பக்தி வைராக்கியம் மிகுந்த ஒரு கிறிஸ்தவ பெற்றோருக்கு பிறந்த நான், சிறிய வயது முதலே பக்தியாக வளர்க்கப்பட்டேன். எனது சிறு வயதிலேயே இயேசுவை உண்மையான இரட்சகராக ஏற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. எனது பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரி படிப்பில் நுழைந்தேன்.

இந்தியாவில் இருந்து மருத்துவ படிப்பிற்காக, சீனாவிற்கு சென்றேன். வெளிநாட்டில் குழந்தை பிறப்பிற்கான சிறப்பு மருத்துவ படிப்பை முடித்து நாடு திரும்பினேன்.
இதனால் இந்தியாவில் குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதியருக்கு ஆலோசனை வழங்கும் பிரிவில் மருத்துவ ஆலோசகராக எனக்கு பணி கிடைத்தது. எனக்கு திருமணமாகி கொஞ்ச காலமே கடந்திருந்த நிலையில், மேற்கண்ட பணியில் இருப்பது எனக்குள் பெரிய அளவிலான தன்னம்பிக்கைக்கு வழிவகுத்தது.

குழந்தை பிறப்பு என்பது ஒரு மருத்துவ செயல், நம்மை போன்ற மருத்துவர்களுக்கு அது மிகவும் எளியது என்ற எண்ணம் என் மனதில் உண்டானது. இதனால் எங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று ஜெபிப்பது ஒரு தேவையற்ற காரியமாக தோன்றியது.

ஆனால் திருமணமாகி முதல் ஆண்டு கடந்த நிலையில், என்னை சந்தித்த பலரும் உங்களுக்கு இன்னும் குழந்தை இல்லையா? என்று கேட்க ஆரம்பித்தனர். இதனால் ஒரு குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். இதற்காக எனக்கு தெரிந்த மருத்துவ முறைகளை கையாண்டோம்.

எங்களின் முயற்சிக்கு வெற்றி கிடைப்பதாக தோன்றும் வகையில், சில மாதங்களில் நான் கர்ப்பம் தரித்தேன். ஆனால் சில மாதங்கள் மட்டுமே நீடித்த அந்த கர்ப்பம், தானாக கலைந்தது. மீண்டும் சற்று இடைவெளி விட்டு அடுத்த முயற்சியில் ஈடுபட்டோம். மீண்டும் சில மாதங்கள் மட்டுமே நீடித்த கர்ப்பம் கலைந்தது.

இதனால் மனதளவில் நான் மிகவும் சோர்ந்து போனேன். எனது கணவரும் வருத்தத்தில் தவிர்த்தார். எனது மருத்துவ சோதனைகளில் எந்த குறையும் இல்லை என்று வந்தாலும், கர்ப்பம் நிற்பதில் ஏனோ தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டது. எனக்கு தெரிந்த எல்லா மருத்துவ முறைகளும், பரிசோதனைகளும் தோல்விகளை சந்திக்க, கடைசியாக தேவனே கதி என்ற நிலைக்கு வந்தேன்.

ஒரு உயிரை உருவாக்கும் ஆற்றல் தேவனுக்கு மட்டுமே உள்ளது. அது எல்லா மருத்துவ முறைகளுக்கும் அப்பாற்பட்ட வல்லமையினால் உருவாகிறது என்ற தீர்மானத்திற்கு வந்தேன். தேவனிடம் எனது குறைகளை அறிக்கையிட்டு, நான் ஒரு குழந்தை மருத்துவர் என்ற பெருமையான எண்ணங்களை மாற்றிவிட்டு, தேவ சமூகத்தில் என்னை தாழ்த்தினேன்.

அப்போது அன்னாளின் ஜெபத்தை கேட்டு பதிலளித்த தேவன், எனது ஜெபத்திற்கும் பதில் அளித்தார். தாழ்வில் நம்மை நினைக்கும் தேவன், எங்களை வெட்கப்பட்டு போக அனுமதிக்கவில்லை. திருமணமாகி 4 ஆண்டுகள் கடந்த நிலையில், தேவ கிருபையினால் எனக்கு உண்டான கர்ப்பம் கலைந்து போகாமல் நிலைத்தது.

மருத்துவ சோதனைகளின் முடிவில் எனக்கு கர்ப்பக் கால சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருப்பதால், குழந்தைக்கு ஏதாவது குறைப்பாடு உண்டாகலாம் என்று தெரிய வந்தது. ஆனாலும் தேவன் சகலத்தையும் நேர்த்தியாக செய்கிறார் என்று விசுவாசித்து ஜெபித்தேன்.

இதனால் பிரசவத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்ததோடு, குழந்தைக்கும் எந்த குறைப்பாடும் இல்லாமல் தேவன் பாதுகாத்தார். இதனால் மருத்துவ கணக்கீடுகளுக்கு அப்பாற்பட்டு எனக்கு ஒரு பெண் குழந்தையை தந்து ஆசீர்வதித்த தேவனை நான் நன்றியுள்ள இருதயத்தோடு துதிக்கிறேன்.

ஒரு குழந்தைக்கு தாயாக மாறுவது என்பது சாதாரண ஒரு மருத்துவ செயல் என்று எண்ணி இருந்த எனக்கு, நான் ஆராதிக்கும் தேவன் சர்வ வல்லமையுள்ள தேவன், அவரது அறிவுக்கு எட்டாமல் ஒரு உயிரும் உலகில் பிறப்பது இல்லை என்று நிரூபித்து காட்டி, எனது அறியாமையை நீக்கிய தேவனை நன்றியுள்ள இருதயத்தோடு துதிக்கிறேன்.

எனது சாட்சியை படித்துக் கொண்டிருக்கும் அன்பான சகோதரனே, சகோதரியே, உங்களுக்கு உடலில் எந்த நோயாக இருந்தாலும் அதில் இருந்து விடுவிக்க இயேசு வல்லமை உள்ளவராக இருக்கிறார். இந்த உலகில் உள்ள எல்லா டாக்டர்களையும் விட அவர் ஆற்றல் மிகுந்தவர். அவருக்கு கூடாத காரியம் என்று ஒன்றுமில்லை.

எனவே உங்கள் உடல் குறைகளை அவரிடம் முதலில் கொண்டு செல்லுங்கள். அப்போது எல்லா குறைகளை நிறைவாக்கும் தேவன் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை காண செய்வார்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *