0 1 min 2 mths

….. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிட வேண்டும் என்று சொல்கிறார் என்றார்கள். யாத்திராகமம்.5:1

இந்த வார்த்தைகளை மோசேயும், ஆரோனும் சேர்ந்து எகிப்து மன்னனாகிய பார்வோனிடம் கூறுவதாக வேதத்தில் காணலாம். வேதத்தை தியானித்து வாசித்தால், பார்வோனின் மூலம் கிரியை செய்த பிசாசு, கர்த்தருடைய ஊழியக்காரனாகிய மோசேயை வஞ்சிக்க முயன்றதை அறியலாம். இதன் பின்னணியை குறித்து அறிந்துக் கொள்வது நமது ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும் என்று விசுவாசிக்கிறோம்.

யாக்கோபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை போக்க, யோசேப்பின் மூலம் இஸ்ரவேல் குடும்பத்தை எகிப்திற்கு தேவன் கொண்டு வந்தார். அங்கே பெருகிய இஸ்ரவேலின் குடும்பம், எகிப்தியரின் மக்கள் தொகையை விட அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. அதை கண்டு பயந்த எகிப்தியர், இஸ்ரவேல் மக்களை துன்புறுத்த துவங்கினர்.

இதனால் இஸ்ரவேல் மக்கள் தங்களின் தேவனாகிய கர்த்தரை நோக்கி கூப்பிட்ட போது, தேவனால் எழுப்பப்பட்ட ஒரு தீர்க்கத்தரிசி தான் மோசே. சிறு வயதிலேயே குடும்பத்தில் இருந்து பிரிந்து போன மோசே, எகிப்து அரசக் குமாரனாக, சொந்த தாயால் வளர்க்கப்பட்டார். ஆனால் வளர்ந்த பிறகு தான் யார் என்ற உண்மை அறிந்து இஸ்ரவேல் மக்களுக்காக போராட முயன்றார்.

ஆனால் எகிப்தியரின் சகல சாஸ்திரங்களிலும், கலைகளிலும் படித்து தேறிய நிலையில் இருந்த மோசேயை கொண்டு, இஸ்ரவேல் மக்களை இரட்சிக்க தேவன் விரும்பவில்லை. எகிப்தை விட்டோடி, தான் இனி எதுவுமில்லை என்ற நிலையை மோசே அடைந்தார். அதன்பிறகு மோசேயை அழைத்து தனது மக்களை இரட்சிக்கிறார்.

இன்று நம் வாழ்க்கையில் கூட மோசேயை போல, சில நேரங்களில் தேவன் நமக்கு அளித்திருக்கும் ஊழியங்களை சொந்த புத்தியை பயன்படுத்தி செய்ய நினைக்கிறோம், செய்கிறோம். சுயஞானம், சுயதிறமை என்று எல்லாவற்றையும் நமது சுயத்தில் செய்வது, தேவனுக்கு சித்தம் அல்ல.

ஆரம்பக் காலத்தில் ஆவியானவரின் வழி நடத்துதலை பெற்று ஊழியம் செய்யும் பலரும், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, சொந்த முயற்சியில் இறங்கி விடுகின்றனர். இதனால் பின்நாட்களில் அவர்கள் ஆவிக்குரிய வீழ்ச்சியை சந்திக்கிறார்கள். எனவே நமக்கு தேவன் அளித்திருக்கும் ஊழியங்களை, தேவ கிருபையினால், தேவ நடத்துதலை பெற்று செய்ய வேண்டும்.

மோசேயும் தனது சொந்த திறமைகளை பயன்படுத்தி, ஒரு எகிப்தியனை கொலை செய்து, இஸ்ரவேல் மக்களின் பாதுகாவலான மாற முயற்சி செய்கிறார். ஆனால் அந்த சம்பவமே, அவரை எகிப்தில் இருந்து தப்பியோட வேண்டிய நிலைக்கு தள்ளி விடுகிறது.

மோசேயின் வாழ்க்கையை 3 பகுதிகளாக படிக்கலாம். முதல் நாற்பது ஆண்டுகள் செல்வ செழிப்பான எகிப்து அரண்மனை வாழ்க்கை, 2வது நாற்பது ஆண்டுகள் ஆடுகளின் மேய்ப்பனாக திரியும் வனாந்திர வாழ்க்கை, 3வது நாற்பது ஆண்டுகள் தேவனுடைய மக்களின் இரட்சகனாக ஊழிய வாழ்க்கை என்று 3 பகுதிகள் உள்ளன.

இதில் மூன்றாவது பகுதியில் வரும் ஊழிய வாழ்க்கையின் துவக்கத்தில், தேவ அழைப்பை பெறும் மோசே, எகிப்திற்கு திரும்ப வருகிறார். இஸ்ரவேல் மக்களை சந்தித்து, தேவன் கூறிய காரியங்களை அறிவிக்கிறார். இஸ்ரவேல் மக்களின் பிரதிநிதியாக, எகிப்தின் மன்னனாகிய பார்வோனை சந்திக்கிறார். அப்போது இஸ்ரவேலின் தேவனுக்கு பலி செலுத்த வனாந்தரத்தில் 3 நாட்கள் பயணம் செல்ல மக்களை அனுப்புமாறு பார்வோனிடம் அனுமதி கேட்கப்படுகிறது.

ஆனால் இதற்கு பார்வோன் குறுக்கு யோசனைகளை கூறி, தேவ சித்தத்தை தடுக்க விரும்புகிறான். ஆண்கள் மட்டும் 6 லட்சம் பேர் இருக்க, லட்சக்கணக்கான குடும்பங்களை மோசே ஒரே மனிதனாக நடத்தி செல்வதை குறித்து நினைத்தால், பார்வோன் கூறிய யோசனைகள் சரியானது போல தெரியும்.

ஆனால் அவை இஸ்ரவேல் மக்களை அடிமை கட்டிலிருந்து விடுதலை செய்யாமல் இருக்க வைக்கும் தந்திரங்களாக இருந்தன. அதை பகுத்தறிந்து கொண்ட மோசே பார்வோன் மூலம் பிசாசு அளித்த சோதனைகளை ஜெயித்தான். இப்படி பார்வோன் மூலம் பிசாசு கூறிய சில தந்திரமான யோசனைகளை பற்றி இனி வரும் அடுத்தடுத்த பாகங்களில் சிந்திப்போம்.

(முதல் தந்திரம் – தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *