0 1 min 2 mths

3வது தந்திரம்:

யாத்திராகமம்.10:11ல் பார்வோனின் மூன்றாவது தந்திரத்தை வாசிக்கிறோம். மோசே கேட்டது போல, 3 நாட்கள் தொலைவில் சென்று ஆராதனை செய்யலாம். ஆனால் ஆண்கள் மட்டும் செல்லுங்கள் என்று பார்வோன் ஆலோசனை கூறுகிறான்.

பரிசுத்த வேதாகமத்தில் “ஆண்” என்ற வார்த்தையின் மூலம் ஜெயம் அல்லது வெற்றி குறிப்பிடப்படுகிறது. இரட்சிக்கப்பட்ட எல்லாரும் பாவத்தை ஜெயித்தவர்களாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆனால் அந்த ஜெயம் ஒரே நாளில் வருவதில்லை. அதற்காக தேவ பலமும், வேத அறிவும் கொண்டு போராட வேண்டும்.

ஆனால் இன்று பலரும் பாவத்திற்கு எதிராக போராடுவதில்லை. சபையில் தென்படும் சில ஆவிக்குரிய தேறினவர்கள் அல்லது அனுபவ விசுவாசிகளை பார்த்துவிட்டு, இவர்களை போல நாம் மாற முடியுமா?

நாம் ஒன்றிற்கும் தகுதியற்றவர்கள், திறமையற்றவர்கள் என்று தம்மை தாமே குறைத்து மதிப்பிட்டு கொள்கிறார்கள். மேலும் தேவன் தன்னை அழைத்த அழைப்பை மறந்துவிட்டு, கடமைக்கு சபைக்கு வந்து செல்லும் விசுவாசிகளாக மாறி விடுகிறார்கள். இதனால் ஆவிக்குரிய வாழ்க்கையில் சரியான வளர்ச்சியின்றி பெயருக்கு கிறிஸ்தவர்களாக வாழ்கிறார்கள்.

மேற்கூறிய பார்வோனின் ஆலோசனையில் பெண்கள், குழந்தைகள், கால்நடைகள் போன்றவை எகிப்திலேயே இருக்கட்டும் என்று கூறுவதை காண்கிறோம். இந்த பிசாசின் ஆலோசனையை இன்றைய பல கிறிஸ்துவ குடும்பங்கள் கீழ்படிகின்றன.

பிள்ளைகளின் படிப்பு, வேலை, திருமணம், எதிர்காலம், ஆஸ்தி, சொத்து என்று எல்லாவற்றையும் கவனிக்கும் இன்றைய பெரும்பாலான பெற்றோர், பிள்ளைகளின் ஆவிக்குரிய வாழ்க்கையை கண்டு கொள்வதில்லை.

இது குறித்து கேட்டால், அதை தேவன் பார்த்து கொள்வார் என்று சொல்லி விடுகிறார்கள். நாம் பிள்ளைகளை கர்த்தருக்குள் வளர்க்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இதை நீதிமொழிகள்.22.6ல் “பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து, அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” என்று வாசிக்கிறோம்.

சிறு வயதிலிருந்தே ஆவிக்குரிய பிள்ளைகளாக வளர்க்காமல் விட்டுவிட்டு, வளர்ந்த பிறகு அவர்களின் தாறுமாறான வழிகளை கண்டு பல பெற்றோரும் கண்ணீர் வடிக்கிறார்கள். வளர்ந்த பிள்ளைகளின் மீது உள்ள கோபத்தில் சாப்பிடாமல் இருந்துவிட்டு, உபவாசம் எடுத்து ஜெபிக்கிறேன் என்று கூறுகிறார்கள்.

தகுந்த நேரத்தில் மற்றவர்களின் மீது காட்டாத அன்பும் பக்தியும், எப்போதும் பயன் தராது. அதேபோல, கோபத்தில் எடுக்கும் உபவாசமும், அடம்பிடிக்கும் ஜெபமும் என்றும் கேட்கப்படாது. தேவனாக மனமிறங்கி பிள்ளைகளை திருத்தினால் தான் உண்டு.

சிலர் தங்களுக்கு பழக்கமான தேவ ஊழியர்களிடம் சொல்லி பிள்ளைகளுக்கு ஆலோசனை கூறி ஜெபிக்குமாறு போய் நிற்கிறார்கள். நம் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே ஜெபிக்காமல் விட்டுவிட்டு, பாவத்தில் வளர்ந்து மூழ்கி இருக்கும் போது, மற்றவர்களின் ஜெபத்தை எதிர்பார்ப்பதில் எந்த பயனும் ஏற்பட போவதில்லை.

பிள்ளைகள் சிறுவயதில் இருக்கும் போது, பெற்றோர் வேத வசனத்திற்கு கீழ்படியாமல் இருந்தால், பிள்ளைகள் எளிதாக பிசாசின் பிடியில் சிக்கி கொள்கின்றனர்.

சில வீடுகளில் பெற்றோர் கூறும் ஆலோசனைகளை பிள்ளைகள் கேட்பதில்லை. நீங்கள்தான் எப்போது பார்த்தாலும் சபை கூட்டங்களுக்கு செல்கிறீர்கள். எங்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்? என்று கேட்கும் பிள்ளைகளும் உண்டு.

இதனால் வளர்ந்து வரும் தலைமுறை தேவனை விட்டு விலகி, பிசாசின் பிள்ளைகளாக மாற நேரிடுகிறது. எனவே பிள்ளைகளை தேவ பயத்தில் வளர்த்து, அவர்களுக்காக தொடர்ந்து ஜெபிக்க வேண்டியுள்ளது.

எகிப்திலேயே இருக்க வேண்டும் என்று பார்வோன் கூறியவர்களில் பெண்களும் உட்படுகின்றனர். “பெண்கள்” என்ற வார்த்தைக்கு வேதம், பல அர்த்தங்களை குறிக்கிறது. அதில் ஒன்று பலவீன பாண்டம். இதை 1 பேதுரு.3:7ல் வாசிக்கிறோம்.

உடலில் மற்றும் ஆவியில் ஏற்படும் பலவீனத்தை காரணம் காட்டி, சபைக்கு செல்லாமல் இருப்பவர்கள் இன்று அதிகரித்து வருகிறார்கள். இரட்சிக்கப்பட்ட காலத்தில் எத்தனையோ கிலோ மீட்டர்கள் நடந்தே சபை கூட்டங்களுக்கு சென்றேன் என்று கூறும் பலரை பார்த்திருக்கிறோம்.

ஆனால் இன்று அவர்களின் நிலைமை தலைகீழாக இருக்கிறது. இது குறித்து கேட்டால், நாங்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இருந்த போது தேவனுக்காக பாடுபட்டோம். அது போதும் என்று கூறி திருப்திபட்டு விடுகிறார்கள்.

ஆனால் வேதம் இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்வதில்லை. சங்கீதம்.92:15 ல் “அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்” என்று காண்கிறோம். இதன்மூலம் தேவ சமூகத்திற்கு வருவதற்கு வயது எந்த வகையிலும் தடையல்ல என்பதை அறியலாம். எனவே இது தேவனுடைய ஆலோசனையல்ல என்பது தெளிவாகிறது.

எனக்கு குறிப்பிட்ட பலவீனம் உள்ளது, வயதாகிவிட்டது, சபை தூரமாக உள்ளது – இது போன்ற காரணங்களை கூறி, பிசாசு நமது மனதில் சோர்வை ஏற்படுத்துகிறான். நல்ல ஆலோசனை போல தோன்றும் இவற்றிற்கு செவிக் கொடுக்கும் பலரும், தங்களின் ஆவிக்குரிய ஓட்டத்தை தோல்வியில் முடிக்கிறார்கள்.

சிலர் சபைக்கு வராததற்கு, தங்களின் வேலையே காரணம் என்று கூறுகிறார்கள். எல்லாருக்கும் வேலை முக்கியம் தான். ஆனால் அந்த வேலையை தந்த தேவனை மறந்துவிட்டு, செல்வது சரியல்ல. இந்த உலகில் நாம் வாழ்வதற்கு தேவையான எல்லாவற்றை தேவனே தருகிறார்.

எனவே அவருடைய சமூகத்தை விட, மற்ற எந்த காரியத்திற்கும் நாம் முக்கியத்துவம் கொடுப்பது அவரை இழிவுப்படுத்துவது போன்ற செயலாகும். எனவே இது போன்ற போராட்டங்களில் நன்றாக ஜெபித்து, பிசாசின் கட்டுகளை உடைத்தெறிய வேண்டும்.

பார்வோன் கூறியது போல பிள்ளைகள், பெண்கள் இங்கேயே இருக்கட்டும், நீங்கள் போய் ஆராதனை செய்து வாருங்கள் என்ற ஆலோசனையை மோசே பகுத்தறிந்து அதை ஏற்க மறுத்துவிட்டார்.

அதேபோல நாமும் தேவனுக்கு முதலிடம் கொடுத்து குடும்பத்தோடு கர்த்தரை சேவிப்போம். பலவீனங்கள், வேலை, மனசஞ்சலம் போன்ற சோர்வு உண்டாக்கும் காரியங்களை பற்றி நினைத்து கொண்டிருக்காமல், தேவனை ஆராதிக்க நேரம் கிடைக்கும் போதெல்லாம் துதிப்போம்.

யோசுவா.24:15ல் வாசிக்கும் போது, “நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்.” என்கிறார் யோசுவா. இன்று நம் குடும்பங்களில் இது போன்ற நிலை இருக்கவே தேவன் விரும்புகிறார். பிசாசின் வஞ்சகமான ஆலோசனைகளை கண்டறிந்து, அதை ஜெயித்து முன்னேறுவோம்.

(நான்காவது தந்திரம் – தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *