0 1 min 1 mth

4வது தந்திரம்:

பார்வோனின் அடுத்த ஆலோசனை, மனிதர்கள் எல்லாரும் 3 நாட்கள் பயணித்து சென்று ஆராதனை செய்து வரலாம். ஆனால் கால்நடைகள் மட்டும் எகிப்திலேயே இருக்கட்டும் என்பதே. இதை யாத்திராகமம்.10:24,25-ல் காணலாம். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் மோசே, கால்நடைகள் மூலம் தான் பலி செலுத்த முடியும் என்பதால், அவைகளை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறி விடுகிறார்.

பழைய ஏற்பாட்டில் ஆடுகள், மாடுகள், புறாக்கள் ஆகியவை பலி செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டது. பலி செலுத்துவதற்கு பல காரணங்கள் இருப்பதை வேதத்தில் காணலாம். அதில் பலியினால் ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டது; தேவன் செய்த நன்மைகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது – ஆகியவை முக்கியமானவை.

இயேசு கிறிஸ்து நமது சகல பாவங்களை போக்கும் வகையில், ஒரே தரம் பலியாக தன்னையே ஒப்புக் கொடுத்ததால், இரட்சிக்கப்பட்டவர்கள் இன்று பாவ நிவாரணப் பலிகளை (பாவம் மன்னிக்கப்பட) செலுத்துவதில்லை. ஆனால் தேவன் செய்த நன்மைகளுக்காக நன்றி பலிகளை, நமது துதி மற்றும் ஸ்தோத்திரங்கள் மூலம் தேவனுக்கு செலுத்த வேண்டியுள்ளது.

பழைய ஏற்பாட்டில் பலி செலுத்தும் மிருகங்களுக்கு குறையோ, ஊனமோ இருக்க கூடாது என்று காண்கிறோம். அப்படி இருந்தால் அதை தேவன் அங்கீகரிக்கமாட்டார்.

இன்று தேவனுடைய சமூகத்திற்கு வரும் நாம், நம்மையே ஜீவ பலியாக செலுத்த வேண்டும் என்று ரோமர்.12:1ம் வசனத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இப்படியிருக்க நாம் தேவனுக்கு முழுமையான பலியாக இருக்கிறோமா? நமது துதியும், ஸ்தோத்திரமும் தேவனால் அங்கீகரிக்கப்படுகிறதா?

நாம் சபைக்கு சென்றுவிட்டால் மட்டும் போதாது. அங்கே தேவனை முழு இதயத்தோடும், முழு ஆத்மாவோடும், முழு பலத்தோடும் ஆராதிக்க வேண்டும். நாம் ஜெபித்து முடிக்கும் போது தேவ சமாதானமும், சந்தோஷமும், திருப்தியும் உண்டாகிறதா? அப்படியில்லை என்றால், நாம் செலுத்துவது சரியான பலி அல்ல என்பதை தெரிந்து கொள்ளலாம்.

“இந்த ஜனங்கள்…, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம் பண்ணுகிறார்கள், அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது…” என்று ஏசாயா.29:13ல் வாசிக்கிறோம். இன்றைய அவசர உலகில் முழு மனதோடு ஜெபிக்க முடியாமல் கஷ்டப்படுகிறவர்கள் எத்தனையோ பேர் உள்ளார்கள்.

பெயரளவில் வாயினால், தேவனை துதித்துவிட்டு வாழ்க்கையை நகர்த்துகிறோம். ஆனால் தேவன் நமது வாயின் வார்த்தைகளை மட்டும் பார்ப்பதில்லை, இதயத்தின் எண்ணங்களையும் காண்கிறார்.

சபைக் கூட்டங்களில் இருக்கும் போது கூட மனதளவில் அலுவலகத்திற்கும், வீடுகளுக்கும் சென்று வரும் அநேகர் உள்ளார்கள். சரீர அளவில் சபையில் இருந்தாலும், மனதளவில் அவர்கள் தேவ சமூகத்திற்கு வந்திருக்கவே மாட்டார்கள்.

இன்றைய தனி மனிதனின் வாழ்க்கையில் பல டென்ஷன்கள், பொறுப்புகள், கடமைகள் ஆகியவை இருப்பது நிஜம் தான். ஆனால் அவை நம்மை தேவ சமூகத்தில் முழு மனதோடு துதிக்க தடை செய்வதாக இருந்தால், நிச்சயம் இதுவும் ஒரு வகையான அடிமைத்தனம் தான்.

இதை எப்படி மேற்கொள்வது? ஜெப நேரங்களில் நமது ஒருமனத்தை கெடுத்துவிட்டால், நம் ஜெபங்கள் தேவ சந்நிதியில் வீணாகிவிடும் என்பது சாத்தானுக்கு தெரியும். இதனால் தான் ஜெப நேரங்களில் இது போன்ற யோசனைகளை அவன் கொண்டு வருகிறான்.

இதனால் ஜெப நேரங்களில் அலுவலக காரியங்களோ, வீட்டு காரியங்களோ நினைவில் வந்தால், உடனே அதை அப்புறம் பார்த்து கொள்ளலாம் என்று நீங்கள் கண்டு கொள்ளாமல் விடுங்கள். உங்கள் மனதை தேவ சந்நிதியில் முழுமையாக ஒப்புக் கொடுத்து, ஜெபத்தில் பாடப்படும் பாடல்கள், ஜெபம், வசனங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள்.

நம் எண்ணத்தை திசை திருப்பும் மொபைல்போன்கள், பேச்சுகள், மற்றவர்களின் செயல்கள் ஆகியவை மீது கவனம் செலுத்துவதை தவிர்த்து விடுங்கள். இப்படி கர்த்தருடைய நேரத்தை அவர் ஒருவருக்கே செலுத்த நாம் பழகி கொள்ள வேண்டும்.

நாம் முழு மனத்தோடு தேவனை துதிக்கும் போது, நமக்காக யுத்தம் செய்ய கர்த்தர் இறங்குகிறார். இதை தவிர்க்கவே, அது போன்ற அந்நிய யோசனைகளை நம் இதயத்திற்குள் பிசாசு கொண்டு வருகிறான். எனவே பிசாசின் தந்திர ஆலோசனைகளுக்கு செவி சாய்க்காமல், தேவனுக்கு கீழ்படிவோம். அவருக்கு ஜீவ பலியாக ஒப்புக் கொடுத்து ஆசீர்வாதங்களை பெறுவோம்.

தேவ மக்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க தேவனால் அழைக்கப்பட்ட மோசேயின் மனதை மாற்ற பிசாசு, இந்த வேதப்பாடத்தில் குறிப்பிட்டது போன்ற 4 தந்திரமான யோசனைகளை பார்வோனின் மூலம் கொடுத்தான். ஆனால் தேவ ஊழியரான மோசே அவற்றை பகுத்தறிந்து ஜெயமெடுத்தார்.

அதேபோல நம் வாழ்க்கையில் நம்மை தேவனுக்காக வைராக்கியமாக நிற்க தடை செய்யும் வல்லமைகளை கண்டறிவோம். சோம்பேறிகளாக மாற்றி கடமைக்காக சபைக் கூட்டங்களுக்கு சென்று வரும் பழக்கத்தை விடுவோம்.

நாம் மட்டுமின்றி நமது குடும்பம் முழுவதும் கர்த்தருக்காக வைராக்கியமாக ஜொலிக்கும் சுடர்களாக பிரகாசிப்போம். மோசேயின் வைராக்கியம் மற்றும் பகுத்தறிவின் மூலம் இஸ்ரவேல் மக்கள் முழுவதுமாக எகிப்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல இன்று நமக்கு எதிராக வரும் பிசாசின் ஆலோசனைகளை கண்டறிந்து ஜெயமெடுத்து பரலோக ராஜ்ஜியத்தில் சென்று சேர தேவன் தாமே நமக்கு உதவி செய்வாராக.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *