0 1 min 2 mths

… மறுபடியும் அருகே நிற்கிறவர்கள் பேதுருவைப் பார்த்து: மெய்யாகவே நீ அவர்களில் ஒருவன், நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது என்றார்கள். மாற்கு: 14.70

பாவத்தில் சிக்கித் தவித்த மனிதக் குலத்தை மீட்க வந்த இயேசுவை, சிலுவையில் அறைந்து கொலை செய்ய கைது செய்த போது, அவருடைய எல்லா சீஷர்களும் சிதறி ஓடினார்கள். அவர்களில் ஒருவரான சீமோன் பேதுரு, இயேசுவிற்கு என்ன நேரிடும் என்பதை அறிய (மாற்கு:14.54) அவரை தூரத்தில் பின்தொடர்ந்து சென்று, காவலர்கள் உடன் குளிர் காய்கிறார்.

அப்போது இயேசு ஏற்கனவே பேதுருவிற்கு கூறியது போல, தனது குருவை 3 மூன்று முறை மறுதலிக்கிறார் பேதுரு. இதில் 3வது முறை பேதுரு மறுதலிக்க காரணமாக இருந்த கேள்வியை தான் இங்கு தியான வசனமாக எடுத்துள்ளோம்.

ஏற்கனவே 2 முறை பேதுரு, இயேசுவின் கூட்டாளியாக கண்டறியப்பட்ட போது, சாதாரணமாக குறிப்பிடப்பட்ட நிலையில், மூன்றாவது நபர் அதை நிரூபிக்கும் வகையில், நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது என்று கூறுவதை கவனிக்க வேண்டும்.

இயேசுவின் மூன்றரை ஆண்டு ஊழியத்தில் சீஷராக உடன் இருந்த பேதுரு, அதற்காக எல்லாவற்றையும் விட்டு வந்தவர். மேலும் இயேசுவோடு கூட இருந்து, அவருடன் தொடர்ந்து பழகியதால், அவரது பேச்சு, செயல், எண்ணம் ஆகியவற்றில் பெரும் மாற்றம் ஏற்பட்டு இருந்தது. அதை அவரால் உணர முடியவில்லை என்றாலும், மற்றவர்களால் தெளிவாக அறிய முடிந்தது.

இதனால் தான் பேதுருவின் பேச்சு முறையை வைத்தே, இவனும் இயேசுவோடு இருந்தவன் என்று ஒருவர் குறிப்பிடுகிறார். அதை மறுதலிப்பதற்காக, இயேசுவை சபிக்கவும், தான் கூறுவதற்கு சத்தியம் செய்யவும் வேண்டிய நிலை பேதுருவிற்கு ஏற்பட்டது (மாற்கு:14.71).

இந்நிலையில் நாம் இரட்சிக்கப்பட்ட நாளில் இருந்து இயேசு கிறிஸ்துவை பின்பற்றுபவர்களாக மாறினோம். இயேசுவின் சீஷர்களுக்கு அன்று பரிசுத்தாவியின் அபிஷேகம் அளிக்கப்படவில்லை. இயேசு உயிர்த்தெழுந்து பரலோகத்திற்கு சென்ற பிறகே பரிசுத்தாவி அளிக்கப்பட்டது.

ஆனால் இன்று நமக்கு பரிசுத்தாவின் அபிஷேகம் அளிக்கப்பட்டுள்ளது. உலக உருவாக்கம் முதல் மனிதனோடு தேவன் கொண்டிருந்த உறவு, அன்பு குறித்தும், எதிர்காலத்தில் இந்த உலகிற்கு என்ன சம்பவிக்கும் என்பது குறித்தும் தெளிவாக சுட்டிக் காட்டும் பரிசுத்த வேதாகமம், நமக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வகையில் தேவனோடு ஒவ்வொரு நாளும் நெருங்கி வாழ நமக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நமது வாழ்க்கையில் எந்த அளவிற்கு இயேசுவின் சாயல் காணப்படுகிறது?

நமது பேச்சு, செயல்பாடு, எண்ணம், சிந்தை ஆகியவற்றில் இயேசு பிரதிபலிக்கப்படுகிறாரா? நம் வாழ்க்கையில் இயேசுவின் தத்ரூபம் எதுவும் இல்லாமல், நான் இரட்சிக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவராக வாழ்கிறேன் என்று கூறுவதில் எந்த பயனும் இல்லை.

இந்த உலகில் இயேசுவை போல வாழ்ந்து, பரிசுத்தமாக தம் வாழ்க்கையை காத்துக் கொள்ளும் ஒரு நபருக்கு தான், பரலோகத்தில் இயேசு அமர்ந்துள்ள சிங்காசனம் அளிக்கப்படும் என்று வேதம் கூறுகிறது.

இயேசுவின் சிலுவை பாடுகளையும் அவரது துயரங்களையும் எண்ணி துக்கப்படும் நாம், இன்று முதல் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் இயேசுவின் பிரதிபலிப்பு இருக்கிறதா என்பதை பரிசோதிப்போம். அதற்கு தடையாக உள்ள குறைகளை நிவர்த்தி செய்து, நடமாடும் இயேசுவாக மாறி, பரம சிங்காசனத்திற்கு தகுதி அடைவோம்.

ஜெபம்:

எங்களை நேசிக்கும் அன்பான ஆண்டவரே, எங்களை பாவத்தில் இருந்து மீட்டு, உம்மைப் போல பரிசுத்தமாக மாற்றியுள்ளீர். உம்மை போல வாழ எங்களுக்காக சிறந்த மாதிரியாக வாழ்ந்து சென்றுள்ளீர். அதற்கேற்ப எங்கள் வாழ்க்கையில் இயேசுவை பிரதிபலிப்பவராக வாழ கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *