
இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். மாற்கு:2.5
இயேசுவின் ஊழியத்தில் அவர் எங்கு சென்றாலும் மக்கள் திரள் அவரை சூழ்ந்து கொண்டது. இந்நிலையில் திமிர்வாதம் பிடித்த ஒரு மனிதனை இயேசு குணமாக்க வேண்டும் என்று விரும்பும் 4 பேர், இயேசு இருந்த ஒரு வீட்டிற்கு அழைத்து வருகின்றனர்.
ஆனால் அவர்களின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்கும் மக்கள் கூட்டத்தை கண்டு மனம் தளராத 4 பேரும், அந்த வீட்டின் கூரையை திறந்து திமிர்வாதக்காரன் படுத்திருக்கும் கட்டிலோடு இயேசுவின் முன்னால் கொண்டு வந்து சேர்த்து விடுகின்றனர். அந்த 4 பேரின் விசுவாசத்தையும் கண்ட இயேசு, முதலில் திமிர்வாதக்காரனின் பாவத்தை மன்னித்துவிட்டு, அதில் திருப்தி அடையாதவராக அவனை குணமாக்குகிறார்.
அந்த 4 பேரை போல, பாவம், சாபம், நோய், கஷ்டம் ஆகியவற்றில் சிக்கி தவிக்கும் மற்றவர்களை தேவன் விடுவிக்க வேண்டும் என்று நாம் எந்த அளவிற்கு போராடி ஜெபிக்கிறோம், உதவுகிறோம்?
ஏனெனில் இயேசு குணப்படுத்திய திமிர்வாதக்காரனுக்கு, அவர் மீது விசுவாசம் இருந்ததாக வேதம் குறிப்பிடவில்லை. இதில் இருந்து அந்த 4 பேரின் விசுவாசமே, இயேசுவை அற்புதம் செய்ய தூண்டியது என்று அறியலாம்.
இதேபோல நாம் ஜெபிக்கும் மற்றவர்களுக்கு, இயேசுவின் மீது விசுவாசம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களை விடுவிக்க தேவன் வல்லமையுள்ளவர் என்ற விசுவாசத்தோடு கூட நாம் கிரியை செய்யும் போது, தேவன் அற்புதங்களை செய்கிறார்.
இன்று பொதுவாக, நமக்கு இருக்கும் தேவைகளை சந்திப்பதற்கு தேவன் உண்மையுள்ளவர் என்று விசுவாசிக்கிறோம். ஆனால் மற்றவர்களின் தேவைகளுக்காக ஜெபிக்கும் போது, நமது விசுவாசத்தின் அளவு குறைகிறது. இதனால் அந்த ஜெபத்திற்கான பதில் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. சில நேரங்களில் பதில் கிடைக்காமல் கூட போகிறது.
அந்த 4 பேரின் மேற்கண்ட முயற்சியின் பின்னணியில், இயேசுவின் மீதான மிகப்பெரிய விசுவாசத்தை காண முடிகிறது. ஏனெனில் தாங்கள் சுமந்து கொண்டு வந்த திமிர்வாதக்காரனை எப்படியாவது இயேசுவிடம் கொண்டு வந்து சேர்த்துவிட்டால், அவனை குணப்படுத்தி விடுவார் என்பதை 4 பேரும் முழுமையாக விசுவாசித்து, ஒருமனத்தோடு செயல்பட்டனர்.
இதனால் அவர்கள் விரும்பிய சரீரத்தில் கிடைக்க வேண்டிய சுகத்தை தவிர, ஆவிக்குரிய விடுதலையும் திமிர்வாதக்காரனுக்கு இயேசு அளித்தார். இதேபோல நாமும் மற்றவர்களுக்காக ஜெபிக்கும் போது, நமக்குள் பூர்ண விசுவாசம் இருக்க வேண்டும்.
அதற்கு எந்த தடைகள் வந்தாலும், அதை மேற்கொள்ளும் ஒருமனம் இருக்க வேண்டும். இவ்விரண்டும் நமக்கு இருக்கும் போது, நாம் எதிர்பார்க்கும் காரியங்கள் மட்டுமின்றி, எதிர்பாராத விடுதலையும் தேவன் அளிக்கிறார்.
எனவே இன்று முதல் மற்றவர்களுக்காக ஜெபிக்கும் போது, நம் காரியங்களுக்காக எந்த அளவிற்கு விசுவாசத்தோடு ஜெபிக்கிறோமோ, அதே பூர்ண விசுவாசத்தோடு ஜெபிப்போம். தேவன் கிரியை செய்வதற்கு தடையாக உள்ள காரியங்களையும் கடந்து செல்லும் ஒருமனத்துடன் செயல்படுவோம். அப்போது தேவனிடம் இருந்து எதிர்பாராத நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் மற்றவர்களுக்கு பெற்று தரும் அதிசய கருவிகளாக, தேவன் நம்மை உயர்த்துவார்.
ஜெபம்:
எங்களை அளவில்லாமல் நேசிக்கும் தெய்வமே, மற்றவர்களுக்காக ஜெபிக்கும் போது, எங்களுக்குள் இருக்க வேண்டிய இரு காரியங்களை குறித்து நீர் பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். இன்று முதல் மற்றவர்களுக்காக கடமைக்கு ஜெபிக்கும் மனப்பாங்கை விட்டுவிட்டு, விசுவாசத்தோடும், ஒருமனத்தோடும் ஜெபிக்க கிருபைத் தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே ஆமென்.