0 1 yr

உங்களை எகிப்தியரின் கைக்கும் பார்வோனின் கைக்கும் தப்புவித்து, எகிப்தியருடைய கையின் கீழிருந்த ஜனத்தை விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம். யாத்திராகமம்:18.10

எகிப்து ராஜாவாகிய பார்வோனின் அடிமைத்தனத்தில் இருந்து, மோசேயைப் பயன்படுத்தி இஸ்ரவேல் மக்களை விடுவித்த தேவன், பாலைவனத்தின் வழியாக வாக்குத்தத்தம் செய்யப்பட்ட கானான் நாட்டிற்கு கொண்டு வந்தார். இந்த பயணத்தின் இடையே, மோசேயின் மாமனாகிய எத்திரோ, அவரை சந்திக்க வருகிறார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் எத்திரோவும் மோசேயும், ஒருவரையொருவர் நலம் விசாரித்த வண்ணம், கூடாரத்திற்குள் நுழைகின்றனர். அதன்பிறகு எந்த குடும்பக் காரியங்களையும் பேசி, நேரத்தை வீணாக்கியதாக வேதம் குறிப்பிடவில்லை.

எகிப்தில் பார்வோன் ராஜாவால், இஸ்ரவேல் மக்கள் அனுபவித்த வேதனைகளையும், அங்கிருந்து தேவன் விடுவித்த விதத்தையும், வழியில் தேவன் செய்த அதிசயங்களையும் குறித்து மோசே விவரித்து கூறுகிறார். இதை கேட்ட மாமன் எத்திரோ, தேவனை துதிக்கிறார்.

இன்றைய காலக்கட்டத்தில் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், சபையினர், அறிமுகமானவர்கள் என பல மனித இணைப்புகளின் மத்தியில் நாம் வாழ்கிறோம். மேற்கூறிய வகைகளில் உட்படும் பலரும் நம் வீடுகளுக்கு அவ்வப்போது வந்து போகிறார்கள். அதில் இரட்சிக்கப்பட்டவர்களை விட, இரட்சிக்கப்படாதவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கலாம்.

இந்நிலையில் நம் வீட்டிற்கு வந்து போகும் விருந்தினரிடம் நாம் எதைக் குறித்து அதிகமாக பேசுகிறோம் என்று சிந்தித்து பாருங்கள். பலரும் பிறரின் குற்றம் குறைகளையும், தங்களின் பெருமையான காரியங்களையும் குறித்து தான் பேசுகிறார்கள். இதை கேட்கும் வந்தவர்கள், அவர்களுடைய மனதில், மற்றவர்களை குறித்து வைத்துள்ள கசப்புகளையும், கோபத்தையும், விரோதத்தையும் உங்களிடம் கொட்டி விடுகிறார்கள்.

இதிலும் தங்களின் வாழ்க்கை அனுபவம் என்ற பெயரில், சிலர் கூறும் சுயபுகழ் காரியங்களுக்கு முடிவே வருவதில்லை. கேட்பவருக்கு விருப்பம் இருக்கிறதா என்று கூட பார்க்காமல், அவ்வளவு ஆர்வதோடு கூறுவார்கள். இப்படி பேசுவதால், மற்றவர்களின் தேவையில்லாத துக்கங்களும், கோபங்களும், சந்தேகங்களும், நம் மனதில் தங்கி விடுகின்றன.

அதேபோல தேவ சித்தமில்லாத காரியங்களை, சில நேரங்களில் மற்றவர்களிடம் நாம் கூறிவிடவும் வாய்ப்பு உருவாகிறது. முடிவாக, தேவனை விட்டு நாம் விலகுகிறோம் என்பதோடு, மற்றவர்களை இரட்சிப்பிற்குள் நடத்துவதற்கு தேவன் தந்த நல்ல சந்தர்ப்பத்தை இழக்கவும் செய்கிறோம்.

ஆனால் மோசேயைப் போல, தேவன் செய்த நன்மைகளையும், அதிசயங்களையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது, அவர்களுக்குள் நம் தேவன் மீதான விசுவாசம் வளர்கிறது. ஒரு கட்டத்தில், நம் தேவனை அறிந்து கொள்கிறார்கள்.

இதை தான் நம் தியான வசனத்திற்கு அடுத்த வசனத்தில் காண்கிறோம். மோசே கூறிய காரியங்களைக் கேட்ட எத்திரோ, கர்த்தர் எல்லாத் தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்கிறார்.

எனவே இன்று முதல் நம் வீட்டிற்கு வருபவர்களிடம், நம் வாழ்க்கையில் தேவன் செய்த நன்மைகளைக் குறித்து கூறுவோம். அதேபோல நாம் சந்தித்த கஷ்டங்கள், துன்பங்கள், பிரச்சனைகளின் மத்தியில், தேவன் நடத்திய பாதைகளையும், அதிசயங்களையும் குறித்து கூறுவோம்.

அப்போது நமது தேவனுடைய நாமம் மகிமைப்படும் என்பதோடு, அவர்களும் இரட்சிப்பை அடையவும் கூடும். மேலும் தேவையற்ற காரியங்களால் நம் மனது கரைப்படாமல் காத்து கொள்ளலாம்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற பரலோக பிதாவே, மோசேயை முன்நிறுத்தி எங்களோடு பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். மோசேயைப் போல நாங்களும், எங்களை தேடி வரும் மக்களிடம் உமது அதிசயங்களையும், அற்புதங்களையும், நீர் எங்களை நடத்திய பாதைகளைப் பற்றி எடுத்துக் கூறி, உமது வல்லமையை அவர்கள் விளங்கிக் கொள்ளத் தக்க உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *