0 1 min 1 week

நான் எகிப்தின் மேல் என் கையை நீட்டி, இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் நடுவிலிருந்து புறப்படப் பண்ணும் போது, நானே கர்த்தர் என்று எகிப்தியர் அறிவார்கள் என்றார். யாத்திராகமம்: 7.5

எகிப்தில் அடிமைகளாக உள்ள இஸ்ரவேல் மக்களை விடுவிக்கும் பணியில், மோசேயையும் ஆரோனையும் தேவன் ஏற்படுத்துகிறார். இஸ்ரவேல் மக்களின் விடுதலையை பற்றி நாம் வாசிக்கும் போது, அது சாதாரணமாக தெரியலாம். ஆனால் அதன் பின்னணியில் தேவனுடைய கரம் இருந்துள்ளது.

இஸ்ரவேல் மக்களை எகிப்தில் கரம் பிடிக்கும் தேவன், அவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்த தேசத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும் வரை, அவர்களோடு இருந்தது. இஸ்ரவேல் மக்கள் சில நேரங்களில் இதை மறந்து, அவர்களை வழிநடத்திய மோசேக்கு எதிராக முறுமுறுத்தார்கள்.

Same message in Malayalam:

மேலும் முற்காலத்தில் தாங்கள் எகிப்தில் இருந்த போது நன்றாக வாழ்ந்தது போலவும் பேசினார்கள். அப்படி பேசியவர்கள் யாரும் கானான் நாட்டிற்குள் நுழைய முடியவில்லை. கடைசி வரை தங்களின் விசுவாசத்தை கொண்டிருந்த யோசுவாவும் காலேப்பும் மட்டுமே கானான் நாட்டை அடைந்தார்கள்.

இதேபோல நாம் இயேசு கிறிஸ்துவை பற்றி அறிந்து, இரட்சிக்கப்பட்ட சம்பவம் சில நேரங்களில் நமக்கு சாதாரணமாக தெரியலாம். ஏனெனில் உலகில் உள்ளவர்கள் நம்மை விட மேன்மையாகவும் சிறப்பாகவும் வாழ்வது போல நமக்கு தெரிவதே இதற்கு காரணம்.

ஆனால் இஸ்ரவேல் மக்களை தேவன் மீட்டது போல, நம் இரட்சிப்பிற்கு பின்னால் தேவனுடைய கரம் இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அது நாம் பரலோக கானானை அடையும் வரை நம்மோடு இருக்கும்.

இதற்கிடையில் நான் இரட்சிக்கப்படுவதற்கு முன்பு, நன்றாக வாழ்ந்தேன் என்று இஸ்ரவேல் மக்களை போல முறுமுறுப்பாக பேசினால், நமக்குள்ளும் ஆவிக்குரிய மரணம் ஏற்படுகிறது. மேலும் நம்மோடு உள்ள தேவனுடைய கரம் நம்மை விட்டு விலகவும் வாய்ப்புள்ளது.

எகிப்தில் இருந்து இஸ்ரவேல் மக்கள் விடுதலையாகி வெளியே வந்த போது, கர்த்தரை தேவன் என்று எகிப்தியர் அறிந்தார்கள். செங்கடல் வரை துரத்தி கொண்டு வந்த எகிப்திய படை தோல்வி அடைந்து, கடலில் மூழ்கி இறந்தார்கள். இதனால் மீதமிருந்த எகிப்தியர் மட்டுமின்றி பிற நாட்டினரும் இஸ்ரவேலின் தேவனை பயப்பட்டார்கள் என வேதத்தில் பல இடங்களில் காணலாம்.

இதேபோல பாவத்தில் இருந்து நாம் மீட்கப்பட்டதன் மூலம் இயேசுவே தேவன் என்று பிறர் அறிந்தார்கள். ஆனால் நமக்குள் யோசுவா, காலேப் போன்ற விசுவாசம் தொடர்ந்து இருக்கிறதா? என்பதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

இஸ்ரவேல் மக்கள் பயணித்த 40 ஆண்டுகளும் அவர்களின் மீது பகலில் மேகஸ்தம்பமும், இரவில் அக்னிஸ்தம்பமும் நீங்கவில்லை. அதுபோல நம் மீதான தேவனுடைய பாதுகாப்பின் கரம் எந்த சூழ்நிலையிலும் நீங்குவது இல்லை. ஏனெனில் நம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.

இந்நிலையில் இஸ்ரவேல் மக்கள் சாப்பாட்டிற்காக முறுமுறுத்தது போல, இந்த உலகில் உள்ள தேவைகளுக்காக தேவனுக்கு விரோதமாக நாம் பேசக் கூடாது. அப்படி பேசும் போது, அவற்றை தேவன் கோபத்தோடு நமக்கு அளிக்கிறார். ஆனால் பரலோகத்திற்கு செல்ல வேண்டும் என்ற உயர் நோக்கத்தில் அழைக்கப்பட்ட நாம் அதிலிருந்து வழிவிலகி, உலகத்தோடு பிற்காலத்தில் நியாயத்தீர்ப்பை அடைய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

எனவே நமக்கு அளிக்கப்பட்ட இரட்சிப்பை முடிவு வரை பாதுகாத்து கொள்வோம். இரட்சிப்புக்கு ஆதரவாக உள்ள விசுவாசத்தை அனுதினமும் வளர்த்து கொள்வோம். தேவையில்லாத உலக ஆசைகளையும், விருப்பங்களையும் குறைத்து கொண்டு, ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் உயர்வையும் நோக்கி பயணிப்போம். அப்போது யோசுவா, காலேப்பை போல நமக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட பரலோகத்தை எளிதாக அடைய முடியும்.

ஜெபம்:

எங்களை அளவில்லாமல் நேசிக்கும் அன்பான தெய்வமே, உம்முடைய உன்னதமான அழைப்பால் இரட்சிப்பை அளித்து, மேன்மையான பரலோக ஆசீர்வாதங்களால் அனுதினமும் நிரப்பி நடத்தி வருகிறீர். அதை எண்ணி, விசுவாசத்தையும் நம்பிக்கையும் முடிவு வரை பாதுகாத்து கொள்ள உதவி செய்யும். எங்களில் வந்த முறுமுறுப்புகளை மன்னிப்பும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *