இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை; தேவனைப் பற்றிக் குறை சொல்லவுமில்லை. யோபு.1:22

ஊரில் பெரிய பணக்காரனாக இருந்த யோபு, தன் குடும்பத்தோடு தேவனுடைய பாதுகாப்பில் சந்தோஷமாக வாழ்ந்து வந்ததாக யோபு புத்தகம் ஆரம்பிக்கிறது. தேவனுக்கு பயந்து வாழும் யோபின் வாழ்க்கையில், சோதனைக்காரனாக பிசாசு நுழைய தேவன் அனுமதித்த போது, அடுத்தடுத்த அதிர்ச்சி செய்திகளை கேட்க நேரிடுகிறது.

பிசாசின் சோதனையில் யோபு ஒரு ஏழையாக, பிள்ளைகளை இழந்து, மனைவியின் ஏளன பேச்சிற்கு உள்ளாகி, உடல் முழுவதும் புண்களோடு, ஒரு சாலையோர பிச்சைக்காரனை போல மாறி விடுகிறார்.

இன்று நம் வாழ்க்கையிலும் பல சோதனைகளை கடந்து செல்கிறோம். சில நேரம், அவை தேவன் அனுமதி அளித்தவையாகவும், சிலவற்றை நாம் தானாக சென்று விழும் சோதனையாகவும் இருக்கின்றன. ஆனால் மேற்கூறிய இரு வகையான சோதனைகளிலும் நாம் ஜெயம் கொண்டவர்களாக இருக்கவே தேவன் விரும்புகிறார்.

தன் வாழ்க்கையில் வந்த சோதனையிலும் தேவன் மீதான நம்பிக்கையை இழக்காத யோபு, பாவம் செய்யவில்லை. அதைவிட முக்கியமாக அவர் தேவனுக்கு விரோதமாக எந்த குறையும் கூறவில்லை.

நம் சோதனை வேளைகளில் பாவம் செய்யாமல் கூட இருந்து விடுகிறோம். ஆனால் இஸ்ரவேல் மக்களை போல, சில சோதனைகளின் இடையே தேவனுக்கு எதிராக பேசி விடுகிறோம்.

தேவனுக்கு விரோதமாக யோபு பேசாமல் இருந்ததற்கு முக்கிய காரணம், அவருக்குள் இருந்த தேவ அன்பு. அந்த அன்பை பறித்து போட, அதிர்ச்சி செய்திகள் வந்தன. மனைவி, நண்பர்கள் மூலம் மனமுறிவை ஏற்படுத்தும் வார்த்தைகள் வந்தன. ஊர் மக்களின் கேலி, கிண்டல் வந்தன. ஆனால் யோபு, தேவ அன்பில் நிலைத்து நின்றார். சோதனையை ஜெயித்து, தேவனுக்கு மகிழ்ச்சியை அளித்தார்.

நமக்குள், தேவ அன்பு அதிகரிக்கும் போது, பிசாசின் சோதனைகளை ஒரு பொருட்டாக கூட நினைக்கமாட்டோம். சோதனைகளின் மத்தியிலும் ஒரு தேவ சமாதானம் நமக்குள் இருக்கும். தேவ அன்பு நமக்குள் குறையும் போது, சமாதானம் நம்மை விட்டு விலகுகிறது.

தேவ அன்பு ஒரே நாளில் நமக்குள் முற்றிலும் இல்லாமல் போவதில்லை. நாம் தேவ சமூகத்தை விட்டு விலகும் போது, தேவ அன்பு, சமாதானம் ஆகியவை கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு விலகுகிறது. தேவன் மீதான அன்பு நமக்குள் குறைவதற்கு முக்கிய காரணம், நமக்கும் தேவனுக்கும் இடையே ஏற்படும் இடைவெளி.

ஒருநாள் வேதம் படிக்காமல், ஜெபிக்காமல் விடுவது, சபை கூட்டங்களுக்கு அவ்வப்போது போகாமல் இருப்பது என ஆரம்பிக்கும் இந்த இடைவெளி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அதை பரிசுத்த ஆவியானவர் அவ்வப்போது நமக்கு உணர்த்துவார்.

ஆனால் அதை கண்டுகொள்ளாமல் விடும் போது பின்மாற்றம் அடைகிறோம். தேவன் நம்மோடு இல்லாததால் எதிலும் திருப்தியில்லாமல், மனஉளைச்சல் அதிகரிக்கிறது.
ஆனால் கிருபையுள்ள தேவன் மீண்டும் நம்மை தண்டித்து அவரது சமூகத்திற்கு கொண்டு வருகிறார். ஆனால் சிலர் தேவன் அளிக்கும் தண்டனையை எண்ணி, கோபத்தோடு தேவனை விட்டு பின்வாங்கி போகிறார்கள்.

எனவே ஆவிக்குரிய வாழ்க்கையில் சிறு சறுக்கல் கூட நமக்கு பெரிய இழப்பை அளிக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதனால் பிசாசின் தந்திரங்களை அறிந்து ஆவியில் எப்போதும் விழித்து இருந்து, சோதனைகளில் ஜெயம் பெறுவோமாக.

ஜெபம்:

அன்புள்ள தேவனே, உமது அன்பினால் எங்கள் இதயங்களை நிரப்பும். உமது அன்பை விட்டு தூரப்படும், எங்களின் பலவீனங்களை மன்னியும். ஜெப குறைகள், வேத வாசிப்பு குறைகள் ஆகியவற்றை மன்னியும். எங்களை உமது அன்பிற்குள் பாதுகாத்து கொள்ளும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *