0 1 min 1 yr

யோனாவின் வரலாற்றைப் படிக்கும் போது, ஒரு பெரிய மீனின் வயிற்றில் 3 நாட்களாக ஒரு மனிதனால் எப்படி உயிரோடு வாழ முடியும் என்ற சந்தேகம் நம்மில் பெரும்பாலானோருக்கு உண்டாகிறது. அதன் பின்னணி குறித்து இந்தச் செய்தியில் காண்போம்.யோனாவின் காலத்தில் தற்போது உள்ளது போன்ற உயிரினங்களின் வகைப்பாடு அமைப்புகள் எதுவும் இருக்கவில்லை என்பதை நாம் அறிவோம். எனவே மக்கள் கண்களால் பார்த்தவற்றை அவர்களின் விருப்பம் போல, பெயரிட்டு அழைக்கும் முறை பின்பற்றப்பட்டது. இதனால் ஒரு மனிதனை விழுங்க வேண்டுமானால், அது ஒரு பெரிய மீனாக மட்டுமே இருக்க முடியும் என்பது சிந்திக்கத்தக்கது.

மேலும் கடல்வாழ் உயிரினங்களின் வகையில் உட்படும் பெரிய அளவிலான திமிங்கலங்கள், சுறா மீன்கள் போன்றவை ஒரு முழு மனிதனை அப்படியே விழுங்கும் திறன் கொண்டவை என்று சில கடல்வாழ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆனால் திமிங்கலம் என்ற வார்த்தை வேதத்தில் ஏற்கனவே சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், அது யோனாவை விழுங்கியிருக்க வாய்ப்பில்லை. அப்படியிருந்தால், பெரிய மீன் என்ற வார்த்தைக்கு பதிலாக, திமிங்கலம் என்று எழுதப்பட்டு இருக்கலாம்.

அதே நேரத்தில் யோனா:1.17 வசனத்தில் யோனாவை விழுங்கிய மீனை, கர்த்தர் ஆயத்தப்படுத்தி இருந்தார் என்று வாசிக்கிறோம். அதாவது அது ஒரு புதிய தேவனுடைய படைப்பாக கூட இருந்திருக்கலாம் என்பது சிந்திக்கத்தக்கது.
ஏனெனில் தேவனுடைய வழியை விட்டு விலகி ஓடும் ஒரு மனிதனை, தனது வழிக்கு திரும்ப கொண்டு வர, ஒரு புதிய படைப்பை உருவாக்கக் கூட தேவன் தயங்குவதில்லை.

மேலும் எந்த மாதிரியான அற்புதத்தையும் தேவன் நடத்தி காட்டுவார். இதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு தான் தீர்க்கத்தரிசி பிலேயாமின் கழுதைப் பேசிய சம்பவம்.
எனவே நமக்கு அளிக்கப்பட்டுள்ள பணியை அல்லது ஊழியத்தை தேவ சித்தம் போல செய்து முடிப்பது சாலச்சிறந்தது. அதை நம் சொந்த விருப்பத்திற்கு மாற்ற நினைக்கும் போது, யோனாவைப் போல பல விபரீதங்களைச் சந்திக்க நேரிடும்.

அந்தப் பெரிய மீனால் விழுங்கப்பட்ட யோனா, அதன் வயிற்றில் மூன்று நாட்கள் இருக்க நேர்ந்தது. இதை வாசிக்கும் போது, இந்தக் காரியம் நமக்கு சாதாரணமாக தெரிந்தாலும், மீனின் வயிற்றில் 3 நாட்கள் இருப்பது என்பது அவ்வளவு லேசான காரியமல்ல. கடலில் வாழும் மீன்களின் உடற்கட்டமைப்பு மற்றும் தகவமைப்பு குறித்த புத்தகத்தை ஆராய்ந்ததால், அதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

இதை எளிதாக கூற வேண்டுமானால், நம் வீடுகளில் சாப்பிடுவதற்காக வாங்கும் மீன்களை உதாரணம் காட்டலாம். மீன்களைச் சமைப்பதற்கு முன் சுத்தம் செய்யும் போது, அதன் குடல் மற்றும் வயிற்று பகுதியை நீக்க வேண்டும். ஏனெனில் அந்த இரு பகுதிகளும் கடும் நாற்றம் மிகுந்தவை.

மீன் வகைகளை விரும்பி சாப்பிடும் ஒரு நபரால் கூட, அவற்றின் குடல் மற்றும் வயிற்று பகுதியை நீக்காமல் சாப்பிட முடியாது. அவை சாப்பிடுபவருக்கு குமட்டலை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது. அப்படியென்றால் யோனா மூன்று நாட்கள், மீனின் வயிற்றில் எப்படி இருந்திருப்பார் என்று யோசித்து கொள்ளுங்கள்.

மீனின் வயிற்றில் இருந்தவாறு யோனா ஜெபித்ததாக, யோனா:2.1 வசனத்தில் காண்கிறோம். கப்பலில் யோனாவின் தவறை தேவன் சுட்டிக்காட்டிய போதே, தன்னை யார் என்று மற்றவர்கள் கேட்ட போதோ ஜெபிக்காத யோனா, மீனின் நாற்றம் கொண்ட வயிற்றில் சிக்கித் தவித்த போது ஜெபிக்கிறார். மேலும் அந்தச் சூழ்நிலையில் இருந்து, தேவனுடைய உதவி இல்லாமல் யோனாவால் வெளியே வரவே முடியாது என்பது உறுதியானது.

தேவன் அளிக்கும் சிறிய அளவிலான தண்டனைகளிலேயே, நம் குறையை உணர்ந்து, அவரிடம் மன்னிப்பு கேட்டால், மற்றவர்களுக்கு முன்னால் நாம் தலைக்குனிவைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படாது. அந்தத் தலைக்குனிவு சந்தர்ப்பத்திலும் நம்மை தாழ்த்த நாம் தயாராக விட்டால், யோனாவைப் போல நாம் விரும்பாத என்பதோடு, எங்கேயும் தப்ப முடியாத ஒரு சந்தர்ப்பத்தில் சிக்கிக் கொண்டு நம்மை தாழ்த்தி ஜெபிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

மீனின் வயிற்றில் இருந்த யோனாவின் பயணம், நாம் பொதுவாக நினைக்கும் வகையில் ஒரு AC பஸ் சென்றது போல இருக்கவில்லை என்பதை, யோனா 2:2-9 வசனங்களை படிக்கும் போது தெரிந்து கொள்ளலாம். மீனின் வயிற்றில் நாற்றம் ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் அது தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கும் என்பதால், இங்கும் அங்குமாக தூக்கி வீசப்பட்டிருப்பார்.

மூன்று நாட்களும் யோனா, சற்றும் இளைபாறுதல் இல்லாமல் கஷ்டப்பட்டிருப்பார். நாம் கூட தேவனுடைய வார்த்தைக்கு விலகி சென்றால், நம் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து தப்ப முடியாத வகையில் சிக்கிக் கொண்டு, அலைச்சலை மட்டுமே சந்திக்க முடியும். எல்லாப் பக்கத்திலும் நெருக்கப்பட்டு, அதிலிருந்து வெளியே வர முடியாமல் தவிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே தேவன் அழைக்கும் போதே, அதற்கு ஒப்புக் கொடுத்து செல்வது நல்லது. அதற்கு விரோதமாக நமது சொந்த விருப்பங்களை முன்னிறுத்தி, அவரிடம் இருந்து தப்ப நினைத்தால், அது நடக்காது. மேலும் தேவன் வைத்துள்ள பாதைக்கு நம்மைக் கொண்டுவர, எந்த மாதிரியான அற்புதத்தை செய்யவும், அவர் தயங்கமாட்டார்.

யோனா கூறும் சத்தியங்கள் -12 பாகம் (தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *