0 1 min 1 yr

தேவனுடைய சத்தத்திற்கு கீழ்படியாமல், சொந்த விருப்பத்திற்கு தர்ஷீசுக்கு செல்ல முயன்ற யோனா, மீனின் வயிற்றில் சிறை வைக்கப்பட்ட சூழ்நிலையைக் குறித்து கடந்த செய்தியில் சிந்தித்தோம். அங்கிருந்து யோனா தப்புவதற்கு என்ன செய்ய வேண்டியிருந்தது என்பதைக் குறித்து இந்தச் செய்தியில் காண்போம்.ஒரு பெரிய மீனின் வயிற்றில் சென்று சிக்கிக் கொண்ட யோனா, மூன்று நாட்களாக கடும் நாற்றத்தில் கஷ்டப்பட்டார். அதே நேரத்தில் அவருக்கு சாப்பிட உணவோ, குடிக்க தண்ணீரோ கிடைத்திருக்க வாய்ப்பில்லை. இன்னும் தெளிவாக கூறினால், ஒரு மீனின் வயிற்றிற்குள் அவருக்கு சுவாசிக்க ஆக்ஸிஜன் எப்படி கிடைத்தது என்பது தேவனுக்கு மட்டுமே தெரியும்.

ஏனெனில் எந்தொரு உயிரினத்தின் இரைப்பையிலும் ஆக்ஸிஜன் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஒரு மனிதனுக்கு ஆக்ஸிஜன் இல்லாமல் 3 நிமிடங்களுக்கு மேல் வாழ முடியாது என்று மருத்துவம் கூறுகிறது. ஆனால் நம் தேவனால் ஒரு பெரிய மீனின் வயிற்றில் சிறைப்பிடிக்கப்பட்ட யோனா, அங்கே மூன்று நாட்கள் உயிரோடு இருக்கிறார்.

தேவனிடமிருந்து நாம் விலகிச் செல்ல விரும்பினாலும், அவரது வழிக்கு நம்மை திரும்பக் கொண்டுவர, ஒரு சில தண்டனைகளை நம் வாழ்க்கையில் தேவன் அனுமதிக்கிறார். ஆனால் அந்தத் தண்டனைகளின் மூலம் நம்மை முழுமையாக அழித்துவிட வேண்டும் என்பது தேவனுடைய விருப்பம் அல்ல.

அதே நேரத்தில் மேற்கண்ட சம்பவத்தைப் போல, தேவனால் அளிக்கப்படும் தண்டனைகளைப் பார்க்கும் போது, நம்மால் வாழவே முடியாது என்று தோன்றலாம். ஆனால் அங்கேயும் நாம் அழிந்து போகாமல், தேவனால் காக்கப்படுகிறோம் என்பது கவனிக்கத்தக்கது. இந்தச் சூழ்நிலையில் உடனடியாக நம்மை தாழ்த்தினால், அங்கிருந்து விரைவில் விடுவிக்கப்படுவோம்.

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு காரியம் என்னவென்றால், தவறு செய்த யோனாவை தவிர, யோனாவை உயிரோடு விழுங்கிய மீனும் 3 நாட்கள் உபவாசம் இருந்தது. ஏனெனில் அந்த மீன் 3 நாட்களாக எதுவும் சாப்பிட்டதாக வேதம் குறிப்பிடவில்லை. அப்படியே மீன் ஏதாவது சாப்பிட்டு இருந்தால், அந்த உணவோடு சேர்ந்து யோனாவும் ஜீரணமாகி இருப்பார்.

ஏனெனில் பொதுவாக பெரிய அளவில் அமைந்த மீன்களின் உணவு மண்டலத்தில், வாயில் உணவு அரைக்கப்படுவது மிகவும் குறைவு என்றாலும், இரைப்பையில் மிக அடர்ந்த நிலையில் ஜீரண அமிலங்கள் சுரக்கப்படுகின்றன. இதில் உணவு முழுவதும் கூழ் போல மாற்றப்படுகிறது.

ஆனால் மீனின் வயிற்றில் இருந்த யோனாவிற்கு, ஒரு சிறு காயம் கூட ஏற்படவில்லை. அவரது தண்டனையின் நடுவிலும், தேவனுடைய இரக்கம் பாதுகாக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் யோனா தன்னைத் தாழ்த்தி ஜெபித்த போது, அதே அதிகாரத்தின் 10வது வசனத்தில் தேவனுடைய கட்டளைக்கு ஏற்ப யோனாவை கரையில் கக்கிப் போடுகிறது மீன். எனவே நமது குற்றத்தை உணர்ந்து நம்மை தாழ்த்தி ஜெபிக்கும் வரை, தேவனிடம் இருந்து நமக்கு மீட்பு கிடைக்காது. மாறாக, அவரது தண்டனையின் அளவு அதிகரித்துக் கொண்டே தான் செல்லும்.

யோனா செய்த தவறுக்கு, அவருடன் பயணித்த பயணிகள் தவிர, கடலில் வாழ்ந்த ஒரு மீனும் கஷ்டப்பட்டது. இதுபோல நாம் தேவனுடைய வழியை விட்டு விலகி வாழும் போது, நம்மைச் சுற்றி வாழும் பலருக்கும் பெரிய இழப்பு உண்டாகும் என்பதோடு, நாம் உட்படும் சபை, குடும்பம், சமூகம், தெரு என்பதையும் கடந்து, நம்மோடு தொடர்புடைய உயிரினங்கள் கூட பாதிப்பைச் சந்திக்கும்.

எனவே நமது கீழ்படியாமைக்கு தேவன் அளிக்கும் சிறிய அளவிலான தண்டனையை அனுபவிக்கும் போதே, நமது தவறை உணர்ந்து, அவரது சமூகத்தில் நம்மை தாழ்த்தினால், பெரிய அளவிலான விரும்பத்தகாத சந்தர்ப்பங்களில் கஷ்டப்பட்டு, கட்டாய மனந்திரும்புதல் என்ற நிலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படாது.

மேலும் சிறிய தண்டனைகளில் நாம் திருந்தாமல் போனால், நம்மால் மேற்கொண்டு நகரவே முடியாத ஒரு நிலைக்கு கொண்டு சென்று, தேவனால் மட்டுமே நம்மால் காப்பாற்ற முடியும் என்று உணர்த்துவார். அங்கிருந்து நம்மால் தப்பிச் செல்லவே முடியாது.

யோனா கூறும் சத்தியங்கள் -13 பாகம் (தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *