0 1 min 1 yr

யோனா தீர்க்கத்தரிசியின் ஒரு நாள் பிரசங்கத்தில், ஒரு நகரமே அழிவில் இருந்து இரட்சிக்கப்பட்டது என்று கடந்த பகுதியில் கண்டோம். இந்நிலையில் அந்த நகரின் இரட்சிப்பு, யோனாவிற்கு ஏற்படுத்திய மாற்றத்தைக் குறித்து இந்த வேதபாடத்தில் காண்போம்.

நினிவே மக்களின் மனந்திரும்புதல், தேவனின் கோபத்தைத் தளர்த்தியது. ஆனால் தேவன் காட்டிய இந்த மனஉருக்கத்தையும் கிருபையையும் கண்டு, யோனாவிற்கு கடும்கோபம் வருகிறது (யோனா:4.1-3). ஏனெனில் தேவ சித்தம் நிறைவேறியது என்பதைவிட, தனது தீர்க்கத்தரிசனம் நிறைவேறாமல் போகும் என்பது தான் யோனாவிற்கு கவலை உண்டாக்கியது.

அதை அவமானமாக கூட யோனா நினைக்கிறார் என்பதை தேவனிடம் அவர் கூறும் பகுதியில் இருந்து தெரிகிறது. மேலும் இதன்மூலம் தனது கீழ்படியாமையை நியாயப்படுத்தவும் முயற்சி செய்கிறார்.

இந்த மனநிலையோடு செயல்படும் பல கிறிஸ்தவ மக்கள், இன்று தங்களுக்குள் சண்டைகளையும் விரோதங்களையும் வளர்த்து கொள்ளுகிறார்கள். எங்கள் சபை, எங்கள் ஊழியம் என்று பிரித்து பார்க்கிறார்கள். எங்கள் சபையில் இரட்சிக்கப்பட்டவர், பிரிந்து சென்று புதிய ஊழியம் ஆரம்பித்துவிட்டார், இது எவ்வளவு பெரிய தவறு என்று பல ஊழியர்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.

இன்னும் சிலர், நான் மட்டும் இவருக்கு சுவிசேஷம் சொல்லாமல் விட்டிருந்தால், இன்று இவ்வளவு பெரிய ஊழியராக வளர்ந்திருக்க முடியுமா? என்று பெருமையாக பேசுகிறவர்களும் இருக்கிறார்கள். இது போன்ற தவறான எண்ணங்கள் கிறிஸ்தவர்களில் இருந்து விலக வேண்டும்.

தேவனிடமிருந்து ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான அழைப்பும், ஊழியமும் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான தாலந்துகளும் திறமைகளும் வேறுபடுகின்றன.

எனவே நம்மால் இரட்சிக்கப்பட்டவர், நம்மை விட பெரிய ஊழியங்களைச் செய்தால், அதைக் கண்டு சந்தோஷப்பட வேண்டுமே தவிர, அதை தவறாக விமர்சிப்பதோ, அதற்கு எதிராக ஜெபிப்பதோ ஒரு தவறான நடவடிக்கையாகும். நாம் செய்யும் ஒவ்வொரு ஊழியத்திற்கும், பரலோகத்தில் நிறைவான பிரதிபலன் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மற்றவர்கள் அழிந்தாலும் பரவாயில்லை, தனது தீர்க்கத்தரிசனம் எப்படியாவது நிறைவேற வேண்டும் என்ற மனநிலையோடு யோனா ஜெபிக்கிறார். ஆனால் அந்த ஜெபம், ஒரு நல்ல மனநிலையோடு கூடியதல்ல. அது எரிச்சலில் வந்தது என்பதை யோனா:4.4 வசனத்தில் தேவன் கேட்கும் கேள்வியில் இருந்து அறியலாம்.

ஆனால் அதற்கு பதில் அளிக்காமல், தனது வேண்டுதல் நிறைவேற யோனா பிடிவாதம் பிடிக்கிறார். யோனாவின் இந்த மனப்போக்கை மாற்ற தேவன் ஒரு ஆமணக்குச் செடியை முளைக்கக் கட்டளையிடுகிறார் (யோனா:4.6).

இதேபோல சில காரியங்களுக்காக நாம் பிடிவாதம் கொண்டு ஜெபிக்கும் போது, தேவன் சில நன்மைகளை நமக்கு அளித்து, சமாதானம் செய்ய விரும்புகிறார். இதில் இருந்து தேவனுடைய நடத்துதலை அறிந்து, நம் மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

தனக்கு நிழல் கொடுத்த ஆமணக்கு செடியைக் கண்டு யோனாவிற்கு எந்த மாற்றமும் நிகழாத நிலையில், அதைத் தேவன் காய்ந்து போகும்படி செய்கிறார். தேவ சித்தமில்லாத காரியங்களுக்காக பிடிவாதம் கொண்டு ஜெபிக்கக் கூடாது. அந்த ஜெபம் ஆசீர்வாதங்களுக்கு பதிலாக, நமக்கு அளிக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்களையும் இழப்பதற்கு எதுவாக அமையலாம்.

வெயிலின் வெப்பத்தைத் தாங்க முடியாத யோனா, தேவனிடம் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக, சாக வேண்டும் என்று மீண்டும் ஜெபிக்கிறார். இதனால் அந்தக் காய்ந்தப் போன ஆமணக்கு செடியை முன்னுறுத்தி, தேவன் யோனாவிற்கு பாடம் புகட்டுகிறார்.

எந்தத் தகுதியும் இல்லாத நமக்கு, விலையேறப்பட்ட இரட்சிப்பை அளித்து, மேன்மையான ஊழியங்களில் பங்கு பெற செய்த தேவனுடைய இரக்கங்களை என்றும் நம் நினைவில் கொள்ள வேண்டும். அந்தக் காலத்தில் மற்ற எத்தனையோ தீர்க்கத்தரிசிகள் இருந்த போதும், தேவன் யோனாவை இந்தப் பணிக்காக தேர்ந்தெடுத்தார். ஆனால் அதை மறந்த யோனா, தனது விருப்பத்தைச் செய்ய விரும்புகிறார்.

இதனால் தனக்கு எத்தனையோ பிரச்சனைகள் வந்த போதும், யோனாவிற்கு சுயசித்தத்தை விட்டு கொடுக்க முடியவில்லை. நம்மிடம் ஒப்படைக்கும் ஊழியம் ஒரு சாதாரண ஊழியமாக நமக்கு தோன்றலாம். ஆனால் அது பலருக்கும் கிடைக்காத ஒன்று என்பதை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே அதை உண்மையும் உத்தமமுமாக செய்ய வேண்டும்.

இப்படி யோனா புத்தகத்தின் துவக்கம் முதல் கீழ்படியாமை காட்டும் யோனா, கடைசி வசனம் வரை, சரியான முறையில் மனந்திரும்பவில்லை. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, தேவனுடைய சித்தம் அல்லது அவருடைய மனதில் இருக்கும் காரியத்தை ஒரு தீர்க்கத்தரிசி என்ற நிலையில், அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்த நிலை நமக்கு என்றும் ஏற்படக்கூடாது. தேவனுடைய சித்தத்தில் இருந்து நாம் விலகும் போதே, அதை அவர் உணர்த்துவார். அப்போதே அதற்கு கீழ்படிந்து மனந்திரும்பி, தேவனுடைய பணிக்கு முழுமையாக ஒப்புக் கொடுக்க வேண்டும். அப்போது மகிமையான காரியங்களை நாம் காண முடியும்.

யோனாவின் கீழ்படியாமை மற்றும் பிடிவாதம் மூலம், அவருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. மேலும் அவரது விருப்பம் கடைசி வரை நிறைவேறவும் இல்லை. தேவ சித்தம் மட்டுமே நிறைவேறியது. ஆனால் அதன்மூலம் யோனாவிற்கு கிடைக்கவிருந்த மகிமையான ஆசீர்வாதங்களை அவர் இழந்து, ஒரு குட்டி தீர்க்கத்தரிசியாக, வேதத்தில் அறியப்படுகிறார்.

தேவ சித்தத்தை விட்டு, நமது சொந்த விருப்பத்தைச் செய்ய எவ்வளவு முயற்சி செய்தாலும், அது சில நேரங்களில் பெரிய தோல்வியையும், ஏமாற்றத்தையும் மட்டுமே தரும் என்பது யோனாவின் வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய பாடமாகும்.

மேலும் பரிசுத்த வேதாகத்தில் ஒரு கேள்விக் குறியோடு முடியும் புத்தகம் என்ற சிறப்பையும் யோனாவின் புத்தகம் பெறுகிறது. அதாவது தேவனுடைய மனதை புரிந்து கொள்ளாத ஒவ்வொருவரையும் நோக்கி, தேவன் கேள்விக் குறியோடு மட்டுமே நிற்கிறார் என்பதை நமக்கு உணர்த்துகிறது. இந்த வேதப்பாடத்தையும் ஒரு கேள்வியோடு முடிப்போம், தீர்க்கத்தரிசி யோனாவைப் போல நமக்குள் கீழ்படியாமையும் பிடிவாதமும் இருக்கிறதா?

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *