
உம்முடைய கூடாரம் சமாதானத்தோடு இருக்க காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும் போது குறைவைக் காணமாட்டீர். யோபு. 5.24
இன்றைய உலகில் எப்படியாவது சமாதானத்தை அடைய வேண்டும் என்று மனிதன் தேடி அலையாத இடம் இல்லை. வாழ்க்கையின் துன்பத்தையும், துயரங்களையும் மறந்து, சமாதானத்தை பெறுவதற்காக எவ்வளவோ காரியங்களை செய்கிறார்கள்.
சிலர் ஆட்டம், கூத்து, நாடகம், கற்பனை சித்திரங்கள் ஆகியவற்றை பார்த்து துன்பத்தில் இருந்து தங்களை விடுவித்து கொள்ள நினைக்கிறார்கள். சிலர் எந்தொரு காரியமும் நினைவில் வராமல் இருக்க, போதை அளிக்கும் பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.
மேற்கண்ட இவற்றில் இருந்து மனிதனுக்கு ஒரு தற்காலிக சமாதானத்தை மட்டுமே பெற முடிகிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு, மீண்டும் அதே சமாதானம் இல்லாத நிலையே தொடர்கிறது.
இந்நிலையில் இயேசு கிறிஸ்துவின் மூலம் கிடைக்கும் இரட்சிப்பின் மூலம் நமக்கு உலகில் உண்மையான சமாதானத்தை பெற முடிகிறது. ஏனெனில் அவருக்கு சமாதான பிரபு என்ற பெயரும் உள்ளது என்று ஏசாயா தீர்க்கத்தரிசன புத்தகத்தில் காண்கிறோம்.
இயேசுவின் மூலம் அளிக்கப்படும் சமாதானம் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையில் துவங்கி, அவன் வசிக்கும் வீடு, வேலை செய்யும் இடம், படிக்கும் பள்ளி அல்லது கல்லூரி என்று எல்லா இடங்களுக்கும் பரவுகிறது.
அப்படியென்றால், கிறிஸ்தவர்களில் பலரும் சமாதானம் இல்லாமல் இருக்கிறார்களே? என்ற கேள்வி நமக்குள் ஏற்படலாம். உண்மை தான், ஒரு காலத்தில் இயேசுவின் மூலம் கிடைத்த இரட்சிப்பு, நமக்கு அளித்த சமாதானத்தை நாம் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
நம் வாழ்க்கையில் உலக காரியங்கள் குறுக்கிடும் போதும், இயேசுவின் மூலம் கிடைத்த சமாதானத்தை இழந்துவிட கூடாது. சிலர் பணம், பொருள், ஆஸ்தி, மதிப்பு, மரியாதை ஆகியவற்றை எதிர்பார்த்து, மேற்கண்ட மெய்யான சமாதானத்தை இழந்து விடுவார்கள். அவர்கள் ஆசைப்படுவது போல, மேற்கண்ட எல்லாவற்றையும் சம்பாதித்து விட்டாலும், மனதில் ஏதோ ஒரு குறை இருப்பதாக உணருவார்கள்.
ஆம், அதுவே அவர்கள் இழந்துவிட்ட சமாதானம் ஆகும். அதை இயேசுவிடம் திரும்பி வந்தால் மட்டுமே பெற முடியும். என்ன பிரதர், சமாதானம் என்ன அவ்வளவு பெரிய விஷயமா? என்று சிலருக்கு அதை சாதாரணமாக நினைக்கலாம். அந்த சமாதானம் இல்லாமல் தான், உலகில் உள்ள எவ்வளவோ பெரிய பணக்காரர்கள் பலரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
இயேசுவின் சமாதானம் நமக்குள் பெருகும் போது, மற்றவர்களுக்கும் நாம் சமாதானம் பண்ணும் நிலைக்கு வளர்கிறோம். அப்போது இயேசு கூறுவது போல, பாக்கியவான்களாக மாறுகிறோம்.
இதன் ஒரு பகுதியாக நமது தியான வசனத்தின் இரண்டாவது பகுதியில், நமக்குள் சமாதானம் இருந்தால், அதன்மூலம் நமது வாழ்க்கையில் எந்த குறையும் இருக்காது என்று காண்கிறோம். அதே நேரத்தில், உலகில் கிடைக்கும் சில தற்காலிக இன்பங்களின் மூலம் கிடைக்கும் சமாதானம் மூலம் நமது குறைகள் அதிகரிக்குமே தவிர, குறைய வாய்ப்பில்லை.
உண்மையான இரட்சிப்பு உடையவர்களாக, நமக்கு இருக்கும் பலத்தோடு செயல்பட்டால், மற்ற எல்லாவற்றையும் தேவன் பார்த்து கொள்வார் என்ற விசுவாசம், நமக்குள் அதிகரித்து நம் மனம் சமாதானத்தால் நிரப்புகிறது. இதனால் நமது வாழ்க்கையின் குறைகள் நீங்குகின்றன.
மேலும் இயேசுவின் சமாதானத்தால் நம் இதயம் நிரப்பும் போது, தேவையற்ற ஆசைகள், இச்சைகள் மற்றும் பாவ எண்ணங்களில் இருந்து நம் மனம் விடுபடுகிறது. நம் கட்டுப்பாட்டில் இல்லாத எதிர்காலத்தை குறித்த காரியங்களை பற்றி யோசிக்கும் நிலையும் ஏற்படாது.
எனவே நிலையற்ற சமாதானத்தை அளிக்கும் உலகின் இன்பங்களுக்கு பின்னால் ஓடுவதை தவிர்ப்போம். இயேசு கிறிஸ்துவின் மூலம் கிடைக்கும் நிலையான சமாதானத்தை நாம் இழந்திருந்தால், இன்றே தேவ சமூகத்தில் நம்மை தாழ்த்தி அதை பெற்று கொள்வோம்.
ஜெபம்:
எங்களை நேசிக்கும் அன்பான தெய்வமே, நீர் எங்கள் வாழ்க்கையில் அளித்த இரட்சிப்பின் சந்தோஷத்திற்காகவும், அதனால் கிடைத்த நிலையான சமாதானத்திற்காகவும் ஸ்தோத்திரம். அந்த தெய்வீகமான சமாதானத்தின் மேன்மையை குறித்து அறிய உதவி செய்தீர். உலகம் அளிக்கும் தற்காலிக சமாதானத்திற்காக ஓடுவதை தவிர்க்க எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.