0 1 min 12 mths

… நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய போர்வையை விரியும்; நீர் சுதந்தரவாளி என்றாள். ரூத்: 3.9

பரிசுத்த வேதாகமத்தில் பெண்களின் பெயர்களில் வரும் ரூத் புத்தகம், அந்நிய ஜாதியைச் சேர்ந்த ஒருவர் எப்படி இஸ்ரவேல் வம்சத்திற்குள் இணைய முடியும் என்பதை காட்டுகிறது. இதனால் போவாஸை இயேசுவிற்கு, ரூத்தை கிறிஸ்துவின் சபைக்கும் நிழலாக கூறலாம்.

போவாஸை குறித்து மாமியார் மூலம் அறிந்து கொள்ளும் ரூத், தன்னை மணமுடித்து கொள்ளுமாறு நேரடியாக கேட்காமல், தன் மீது போர்வையை விரிக்குமாறு ஏன் கேட்கிறார் என்று நம்மில் அநேகருக்கு கேள்வி எழலாம். போர்வை என்ற வார்த்தைக்கு அநேக அர்த்தங்கள் இருந்தாலும், இங்கு பாதுகாப்பு என்பதை குறிப்பதாக காணலாம்.

கணவனை பறிக்கொடுத்து குடும்பத்தில் எந்தொரு ஆண் துணையும் இல்லாமல், வயதான மாமியாரான நவோமியுடன் இருக்கும் இளம்பெண்ணான ரூத்தின் வாழ்க்கையில் எந்தொரு பாதுகாப்பும் இருக்கவில்லை. எந்த மாதிரியான பிரச்சனைகள் வந்தாலும், துணையாக நிற்க யாரும் இல்லை என்ற நிலையில் இருந்தாள் ரூத்.

ஹீப்ரு மொழி வேதாகமத்தில் ரூத் குறிப்பிடும் “போர்வை” என்ற வார்த்தைக்கு பதிலாக, “செட்டை” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. கன்னட மொழி பைபிளில் கூட, “சிறகு” என்ற அர்த்தம் வரும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் போவாஸிடம் தனக்கு பாதுகாப்பை அளிக்குமாறு ரூத் கேட்டுள்ளார் என்று அறியலாம்.

நாசியில் சுவாசம் உள்ள மனுஷனை நம்ப வேண்டாம் என்று வேதம் கூறுகிறது. அப்படியென்றால், நம்மை சுற்றிலும் உள்ள மனிதர்கள் எந்த அளவிற்கு நம்பிக்கையற்றவர்கள் என்பது சிந்திக்கத்தக்கது. இதை நம் வாழ்க்கையில் அநேக சந்தர்ப்பங்களில் அனுபவித்தும் வருகிறோம். இருந்தாலும், தேவனை காட்டிலும் மனிதர்களின் மீது அதிக நம்பிக்கை வைக்கிறோம் என்பது ஒரு கசப்பான உண்மை.

மேலும் இயேசு கூறியது போல, உலகத்தார் அல்லாத நமக்கு இங்கு எந்தொரு பாதுகாப்பும் இல்லை. தேவனே நமக்கு பாதுகாப்பாக இருக்கிறார். அந்த வகையில் உன்னதமானவரின் மறைவில் இருப்பதன் மேன்மையை குறித்து 91-வது சங்கீதத்தில் வாசிக்கிறோம். இயேசுவின் பாதுகாப்பிற்குள் வரும் போது, நமக்கு எந்தொரு ஆபத்தும் ஏற்பட வாய்ப்பில்லை.

தன் குஞ்சுகளுக்கு சடுதியாக வரும் ஆபத்தை அறிந்து எச்சரிக்கை சத்தத்தை எழுப்பும் கோழி, தன் இறகின் கீழ் சேர்த்து கொள்வது போல, தேவனும் நம்மை மறைத்து கொள்கிறார். அதற்காக அவ்வப்போது வேத வசனத்தின் மூலம் நமக்கு எச்சரிக்கையும் தருகிறார் என்று நாம் ஏற்கனவே ஒரு தினத்தியானத்தில் பார்த்தோம்.

ரூத் புத்தகத்தை கவனமாக படித்தால், ரூத் மீது போவாஸிற்கு விருப்பம் இருந்தது என்றாலும், அவராக வந்து ரூத்தின் மீது போர்வையை விரிக்கவில்லை என்று காணலாம். ரூத் கேட்ட பிறகு தான், அந்த பாதுகாப்பின் அனுபவத்தை அளிக்கிறார். அதேபோல நமக்கு தேவையான பாதுகாப்பை அளிக்க, தேவன் தயாராக உள்ளார். ஆனால் அதற்கு நாம் கேட்க வேண்டும்.

இந்த பாதுகாப்பை நாம் கேட்டு பெற்று கொள்ளாமல், எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? என்று தேவனை கேள்வி கேட்டு எந்த பயனும் இல்லை. எனவே ஒவ்வொரு நாளும் தேவனுடைய பாதுகாப்பை கேட்டு பெற்று கொள்வோம். அப்போது பிசாசின் எந்தொரு போராட்டத்தையும், நாம் எளிதாக மேற்கொள்ள முடியும். நமக்கு இருக்கும் பாதுகாப்பற்ற நிலையும் மாறும்.

போர்வையை போர்த்தி கொண்டிருக்கிற ஒரு மனிதனின் உடல் பகுதிகள் வெளியே தெரியாது. அவரது போர்வைக்குள் இன்னொருவர் இருந்தால் கூட வெளியே போர்வை மட்டும் தான் தெரியும். அதேபோல, தேவனுடைய பாதுகாப்பின் போர்வைக்குள் நாம் இருக்கும் போது, நமக்கு வரும் போராட்டங்கள் தேவனை கடந்து தான் வரும்.

அப்போது நமக்கு எதிராக பிசாசு உருவாக்கும் எந்தொரு ஆயுதமும் வாய்க்காமல் போகும். இந்த பாதுகாப்பின் போர்வையை பெற விரும்புகிறீர்களா? இந்த ஜெபத்தில் என்னோடு இணைந்து கொள்ளுங்கள்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்புள்ள தெய்வமே, போவாஸை போல நீர் எங்கள் மீது அன்பு வைத்து, பாதுகாப்பை அளிக்க விரும்புகிறீர் என்று அறிந்தோம். இதுவரைக்கும் உமது பாதுகாப்பின் மேன்மை அறியாமல், பல சோதனைகளில் சிக்கி தவித்தோம். இனிவரும் நாட்களின் உமது பாதுகாப்பு என்ற போர்வையை எங்கள் மீது விரியும். உமது பாதுகாப்பின் கரம், எங்களோடு இருக்கட்டும். பிசாசின் எல்லா போராட்டங்களையும் ஜெயிக்க கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *