0 1 min 4 mths

தங்களை பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக் கொண்டன. லூக்கா:8.31

கலிலேயாவுக்கு எதிராக உள்ள கதரேனருடைய நாட்டிற்கு சென்ற இயேசுவையும், அவரது சீஷர்களையும் வரவேற்க, பிசாசுகளால் நிறைந்த ஒரு மனிதன் வருவதாக மேற்கண்ட வசனத்தின் முற்பகுதியில் வாசிக்கிறோம். இந்த மனிதனுக்குள் அநேக பிசாசுகள் இருந்தபடியால், லேகியோன் என்று தனது பெயரை கூறுகிறான்.

மேற்கண்ட பிசாசுகள் பிடித்த மனிதனை சந்திக்க சென்ற இயேசுவும், அவரது சீஷர்களும், கடலில் ஏற்பட்ட புயல் காற்றையும், கொந்தளிப்பையும் கடந்து செல்ல வேண்டி இருந்தது என்பதை காணலாம் (லூக்கா:8.23-24).

இதை கண்டு ஏற்கனவே பயந்து போயிருந்த இயேசுவின் சீஷர்களுக்கு, லேகியோனின் வரவேற்பு மேலும் திகிலை ஏற்படுவதுவதாக அமைந்து இருக்கலாம். ஆனால் இயேசுவின் நடவடிக்கையில் எங்கேயும் பயமோ, பதட்டமோ இருந்ததாக தெரியவில்லை.

படகில் மடிந்து விடுவோம் என்று பயந்த சீஷர்களுக்கு, இயேசு தைரியத்தை ஏற்படுத்தும் வகையில், அமைதலை உண்டாக்கி விசுவாசத்தை உறுதிப்படுத்துகிறார்.

கதரேனருடைய தேசத்தில் வரவேற்க வந்த லேகியோனிடம் இருந்த பிசாசுகளை வெளியேறுமாறு சாதாரணமாக இயேசு கட்டளையிடுகிறார். இதில் இருந்து இயேசுவிற்குள் இருந்த தைரியத்தை அறிய முடிகிறது.

ஆனால் இன்று இரட்சிக்கப்பட்ட பல தேவ பிள்ளைகளின் மனதிலும், பிசாசு மற்றும் அவனது செய்கைகளை எண்ணி பயப்படும் வழக்கம் காணப்படுகிறது. இதனால் அவர்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சனைகளும் வராத வகையில், தேவனுடைய நீதியின் பாதைக்கும், பிசாசின் பாவ வழிகளுக்கும் இடைப்பட்ட நிலையில் பயணிக்கிறார்கள்.

இதனால் தேவாலயத்திற்கு சென்றால் தேவ பிள்ளையாகவும், உலக மக்கள் கூடும் இடத்தில் சென்றால் உலக மனிதர் போலவும் நடந்து கொள்கிறார்கள். இதற்கான அடிப்படையாக அமைவது பிசாசின் மீதான பயமே என்பதை காண முடிகிறது.

இந்நிலையில் கதரேனருடைய தேசத்தில் அடியெடுத்து வைத்த இயேசுவை கண்டு, லேகியோனாக இருந்த பிசாசு பிடித்த மனிதன் பயப்படுகிறான் என்பதை அறியலாம். தனது எல்லைக்குள் இயேசுவின் வருகையை தடுக்க நினைத்தும் முடியாமல் போகவே, தன்னை பாதாளத்திற்கு அனுப்ப வேண்டாம் என்று வேண்டுகிறான்.

அப்படியென்றால், இயேசு கிறிஸ்துவை பின்பற்றி, அவரை போல மாற வேண்டிய நாம், பிசாசை கண்டு எதற்கு பயப்பட வேண்டும்? இயேசுவை போல நாமும் பரிசுத்தமாக வாழும் போது, பிசாசை மிரட்டும் மனிதர்களாக நாம் மாற முடியும்.

நீதிமான் சிங்கத்தை போல தைரியமாய் இருப்பான் என்று வேதம் கூறுகிறது. எனவே யூதா கோத்திரத்தின் சிங்கமான இயேசுவின் பிள்ளைகளான நாம் பிசாசிற்கு எதிர்த்து நிற்கும் தைரியத்தை கொண்டவர்களாக இருப்போம். இதன்மூலம் பிசாசின் கட்டுகளில் இருக்கும் பலரையும் தேவ வல்லமையினால் விடுவித்து, தேவனுடைய ராஜ்ஜியத்தில் சேர்ப்போம்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற பரலோக பிதாவே, எங்களோடு பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். நாங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு தகுந்த மாதிரிகளை காட்டி சென்றுள்ளீர். உம்மை போல பரிசுத்தமான வாழ்க்கையை வாழ்ந்து, பிசாசிற்கு எதிர்த்து தைரியமாக நின்று, பல ஆத்துமாக்களை சம்பாதிக்கும் மக்களாக எங்களை மாற்றும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே. ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *