நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள். லேவியராகமம்:26.12

பூமியில் மனிதனை உண்டாக்கியது முதல் தேவன், அவனோடு வாசம் செய்ய  விரும்பினார். ஆனால் ஆதாமின் கீழ்படியாமை, அவனது பின்சந்ததிகளிலும் தொடரவே, பரிசுத்த தேவனின் மனவிருப்பம் நிறைவேறவில்லை.

ஆதாமிற்கு பிறகு வேதத்தில் காணப்படும் ஒரு சில பரிசுத்தவான்கள், தேவனோடு நடந்தார்கள், பேசினார்கள், தேவ வார்த்தைகளை கூறி மற்றவர்களையும் தேவனிடத்திற்கு கொண்டு வந்தார்கள்.

அந்த தேவன் இன்றும் நம்மோடு வாழ விரும்புகிறார். இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்று கொள்ளும் போது நாம் இரட்சிக்கப்படுகிறோம். இரட்சிக்கப்பட்ட நாள் முதல் தேவன் நம்மோடு வாசம் செய்ய துவங்குகிறார். நமக்குள் வரும் பரிசுத்தாவி, ஒவ்வொரு நாளும் தகுந்த ஆலோசனைகளை வழங்கி, முடிவில் இயேசு கிறிஸ்துவை போல நம்மை மாற்றுகிறார்.

ஆனால் தேவனின் இந்த பணியின் நடுவே குறுக்கிடும் பிசாசு, நமக்கு உள்ள தேவ ஐக்கியத்தை தடை செய்யும் வகையில், உலக ஆசைகளையும், எண்ணங்களையும் நம் இதயத்தில் கொண்டு வருகிறான். இதற்கு இடம் அளிக்கும் போது, நாம் கொஞ்சம் கொஞ்சமாக தேவனிடமிருந்து விலகி, முடிவில் அவரிடமிருந்து முற்றிலுமாக விலகி விடுகிறோம்.

தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதை நாம் சில நேரங்களில் மறந்து விடுகிறோம். இதுவே நாம் பாவத்தில் வீழ்ந்து தேவனிடமிருந்து விலக செய்யும் துவக்கமாக அமைகிறது. இது குறித்து பாவத்தில் வீழ்ந்து தவிக்கும் நபர்களிடம் கேட்டால், தேவன் எங்களை கைவிட்டார் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையில், பாவத்தில் விழுபவர்கள் தான் தேவனை கைவிடுகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு, தேவன் எப்போதும் நம் முன்னால் இருப்பதாக வைத்து கொள்வோம். அப்போது நாம் ஒரு சிகரெட்டை ஊதி தள்ள முடியுமா? ஒரு தியேட்டருக்கு சென்று சினிமா பார்க்க முடியுமா? இதுபோல நாம் எந்த பாவங்களில் சிக்கி தவிக்கிறோமோ அதை அங்கே வைத்து பாருங்கள். மேற்கூறிய எல்லா கேள்விகளுக்கும் – இல்லை என்ற பதிலை மட்டுமே விடையாக கூற முடியும்.

எனவே தேவன் நம்மோடு இருப்பதை மறந்து விடுவதால், நாம் அநேக பாவங்களை தைரியமாக செய்கிறோம் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மை.
தேவனிடமிருந்து விலக ஆரம்பிக்கும் போதே, பரிசுத்தாவி நமக்கு உணர்த்துகிறது.

அப்போது அந்த ஆலோசனைக்கு கீழ்படியும் போது, தேவனுக்கும் நமக்கும் இடையிலான இடைவெளி குறைந்து நெருக்கம் ஏற்படுகிறது. பரிசுத்தாவின் ஆலோசனையை கண்டுகொள்ளாமல் விடும்போது, நம் நிலைமை இன்னும் மோசமாகிறது.

எனவே தேவன் நம்மோடு, நமக்குள் வாசம் செய்ய விரும்புகிறார். நாம் ஆராதிக்கும் தேவன் சபையில் மட்டுமல்ல, நம் உள்ளத்திலும், நம்மோடும் வாழ இடம் கேட்கிறார். எனவே அவருக்கு பயந்து அவருக்காக, அவரை போல வாழ்ந்து, அவரது நாடாகிய பரலோகத்திற்குள் சென்று சேர கர்த்தர் தாமே உதவி செய்வாராக.

ஜெபம்:

எங்களை அதிகமாக நேசிக்கும் அன்பான தேவனே, எங்களோடு எப்போதும் வாழ நீர் விரும்புகிறீர்கள் என்று அறிந்து கொள்ள உதவி செய்தீர். நாங்கள் செய்யும் பாவத்தினால் உம்மை விட்டு தூரமாக சென்றோம். இருப்பினும் எங்களை மன்னித்து, மீண்டும் உம்மோடு நெருங்கி வர எங்களுக்கு ஆலோசனைகளை தந்த கிருபைக்காக ஸ்தோத்திரம். உம் அன்பில் தொடர்ந்து நிலை நிற்க உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் எங்கள் ஜெபம் கேளும் பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *