0 1 min 3 mths

சவுலின் வாழ்க்கையில் கழுதை:

இஸ்ரவேலின் முதல் ராஜா என்ற சிறப்பை பெற்றவர் சவுல். 12 கோத்திரங்களில் கடைசியாக உள்ள பென்யமீனை சேர்ந்த இவர், கீஸ் என்பவரின் மகன். இஸ்ரவேலின் சாதாரண குடிமகனாக இருந்த சவுலின் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது ஒரு கழுதை என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தந்தை கீசுடைய காணாமல் போன கழுதையை தேடி, பல இடங்களில் அலைந்து திரிந்த சவுல் சோர்ந்து போகிறார். இதை 1சாமுவேல் 9.3-5 வரையுள்ள வசனங்களை படித்தால் காணலாம். இங்கே கழுதையை, நமது மனத்தோடு ஒப்பிட முடியும். நமது மனம் என்பது கழுதையை போல அலைந்து திரியக் கூடியது. ஒரு இடத்தில் நிரந்தரமாக இருக்காது.

பொதுவாக கழுதையை நாம் எவ்வளவு தான் செல்லமாக வளர்த்தாலும், தன் சொந்த இஷ்டத்திற்கு அலைந்து திரியும் பழக்கம் கொண்டது. இதேபோல நமது மனத்தை எவ்வளவு கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தாலும், சில நேரங்களில் நாம் வெறுக்கும் காரியங்களை கூட செய்ய தூண்டி விடுகிறது.

இதனால் தான் பவுல் ரோமருக்கு எழுதும் போது, “நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை, நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்” என்று ரோமர்:7.15ல் கூறுகிறார். இதற்கு நமக்குள் கழுதையாக இருக்கும் இந்த அடங்காத மனமே முக்கிய காரணமாகும்.

சவுல், தனது வேலைக்காரனின் துணையோடு காணாமல் போன கழுதையை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதேபோல சிலர் தியானம், யோகா, மன பயிற்சி என்று பல முறைகளில் தங்களின் மனதை அடக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அதில் யாருக்கும் நிரந்தரமான வெற்றி கிடைப்பதில்லை. ஏனெனில் அவர்கள் தங்களின் சொந்த முயற்சியில் இந்த கழுதையை (மனதை) கண்டுபிடிக்க (அடக்க) வழி தேடுகிறார்கள்.

சவுல் தன் சொந்த முயற்சியில் தோல்வி அடைந்த போது, வேலைக்காரனின் ஆலோசனைப்படி தேவனுடைய தீர்க்கத்தரிசியும், இஸ்ரவேலின் கடைசி நியாயதிபதியுமான சாமுவேலை சந்தித்து ஆலோசனை கேட்க முடிவு செய்கிறார்.
இதுபோல நமது மனதை அடக்க, தேவனிடம் வந்தால் மட்டுமே முடியும். வேறு எங்கு சென்றாலும், எந்த பயிற்சியை செய்தாலும், நமது மனதை அடக்க முடியாது.

சாமுவேலிடம் தேவ ஆலோசனை உண்டு. அதேபோல தேவ ஊழியர்களின் மூலமும், பரிசுத்த வேதாகமத்தில் உள்ள வசனங்களின் மூலமும், நம்மோடு தேவன் அனுதினமும் பேசுகிறார். தகுந்த ஆவிக்குரிய ஆலோசனைகளை வழங்குகிறார். இதன்மூலம் நமது ஆவிக்குரிய சோர்வை நீக்குகிறார்.

சவுலும், வேலைக்காரனும் சேர்ந்து காணாமல் போன கழுதையை எப்படியாவது கண்டுபிடுத்து விடலாம் என்ற எண்ணத்தோடு சாமுவேலை சந்தித்தனர். ஆனால் இந்த சந்திப்பிற்கு முன்னமே, தேவன் சவுலின் எதிர்காலத்தை குறித்தும், இஸ்ரவேலுக்கு ஒரு ராஜா தேவை என்பதை குறித்தும் சாமுவேலுக்கு வெளிப்படுத்தி இருந்தார். (1சாமுவேல்.9:16)

இதனால் சவுலின் வருகையை எதிர்நோக்கி சாமுவேல் காத்திருந்தார். இதையடுத்து தேவனுடைய ஆலோசனை பெற வந்த சவுலுக்கு, காணாமல் போன கழுதையை குறித்த தகவலை கூறிய சாமுவேல், தேவனுடைய திட்டத்தை நாளை கூறுவேன் என்கிறார். எனவே சவுல் ஒரு இரவு முழுவதும் சாமுவேலிடம் தங்கி காத்திருந்தான். அவன் காத்திருந்த போது, இஸ்ரவேலின் ராஜாவாக அடுத்த நாள் அபிஷேகம் செய்யப்பட்டான்.

சில காரியங்களை குறித்து நாம் திட்டமிடுவது ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே அமைந்து விடுகிறது. ஆனால் நம்மை குறித்த தேவனுடைய திட்டம் பெரியதாக இருக்கிறது. இதையே சவுலின் வாழ்க்கையிலும் நாம் காண முடிகிறது. சவுலை போல இன்று நாம் பல காரியங்களை தேவனிடம் கேட்கிறோம். அதற்கு பதிலையும் பெற்று கொள்கிறோம்.

ஆனால் அந்த தேவையை தேவன் நம் வாழ்க்கையில் அனுமதித்த நோக்கம், தேவ சித்தம் ஆகியவை இருப்பதை நாம் மறந்து விடுகிறோம். இதனால் பல மேலான ஆசீர்வாதங்களை நாம் இழக்க நேரிடுகிறது.

தேவனுடைய சந்நிதியில் காத்திருந்து ஜெபிக்கும் போது, நமக்காக தேவனால் ஆயத்தம் செய்யப்பட்ட ஆசீர்வாதங்களை முழுமையாக பெற்று கொள்ள முடிகிறது. காத்திருந்த சவுல், தான் எதிர்பார்க்காத இஸ்ரவேலின் ராஜாவாக உயர்த்தப்பட்டது போல, நாமும் காத்திருந்தால் மட்டுமே தேவனிடமிருந்து எதிர்பாராத மேன்மையான ஆசீர்வாதங்களை பெற்று கொள்ள முடியும்.

கழுதையை தேட சென்ற சவுலுக்கு, இஸ்ரவேலின் ராஜாவாக பொறுப்பேற்க தகுதிகள் இருந்தது (1சாமுவேல்.9:1-2). ஆனால் தனது தகுதிகளை அறியாத சவுல், தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை ஏற்க தயங்குகிறான் (1சாமுவேல்.9:21). ஆனால் அதை பொருட்படுத்தாத சாமுவேல், தேவ சித்தம் நிறைவேற சவுலை ராஜாவாக அபிஷேகம் செய்கிறார்.

அதேபோல நம் வாழ்க்கையில் தேவனால் அளிக்கப்படும் ஊழியங்களை செய்ய தயங்க கூடாது. ஒரு வேளை அவற்றை செய்ய நமக்கு தகுதியில்லாதது போல தோன்றலாம். ஆனால் நம்மை குறித்து நமக்கு தெரிந்திருப்பதை விட, படைத்த தேவனுக்கு நன்றாக தெரியும் என்பதை நாம் மறக்க கூடாது. எனவே நமக்கு அளிக்கப்படும் ஊழியங்களை செய்ய ஒப்புக் கொடுத்து, அதை உண்மையும் உத்தமுமாக செய்ய வேண்டும்.

சவுலின் வாழ்க்கையில் துவக்க நாட்களில் தன் மனதை தேவனுக்கு ஏற்ற வழிகளில் நடத்தி சென்றதால், தேவனின் ஆலோசனைகள் தொடர்ந்து கிடைத்தது. ஆனால் பின்னாட்களில் தேவனுக்கு கீழ்படியாமல், தன் சொந்த விருப்பங்களை செய்த போது, பரிசுத்தாவிக்கு பதிலாக பொல்லாத ஆவி அவனை பிடித்து அலைகழித்ததாக வேதம் கூறுகிறது.

எனவே தேவனால் உயர்வை பெற்று கொண்டாலும், நமக்குள் தாழ்மையும், கீழ்படிதலும் நிலை கொண்டிருக்க வேண்டும். இவற்றை இழக்கும் போது, நமது கழுதை (மனம்) வீட்டை விட்டு (பரலோக பாதை) தூரமாக போகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நமது மனம் எப்போதும் தேவன் நடத்தும் பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறதா என்பதை அவ்வப்போது சோதித்து பார்ப்பது நல்லது.

நம் மனம் என்னும் கழுதை பரலோக பாதையை விட்டு விலகி சென்றால், உடனே அதை தேடி சாமுவேலாகிய தேவனிடம் செல்ல வேண்டும். அப்போது அவர் நம் மனம் என்ற கழுதை எங்கே வழி தவறியது என்பதை வெளிப்படுத்துவதோடு, நாம் எதிர்பார்க்காத மேலாக ஆசீர்வாதங்களையும் நமக்கு தருவார். இதே போன்ற மற்றொரு கழுதையோடு உங்களை அடுத்த பாகத்தில் சந்திக்கிறேன்.

(பகுதி – 3 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *