
சீமேயி வாழ்க்கையில் கழுதை:
இஸ்ரவேலின் முதல் ராஜாவான சவுலின் வம்சத்தை சேர்ந்தவன் என்ற சிறப்பை பெற்றவன் சீமேயி. அவனது வாழ்க்கையிலும் ஒரு கழுதை நுழைவதை காணலாம்.
சீமேயிக்கு யாரிடம், எந்த நேரத்தில், எப்படி பேச வேண்டும் என்று தெரியாமல் பேசி, தனது பெயரை கெடுத்துக் கொள்வதாக, 2 சாமுவேல்:16.5-13 வசனங்களில் வாசித்தால் அறியலாம். தனது துன்ப நேரத்தில் இருந்த தாவீதை, சீமேயி தூஷித்தார். ஆனால் அதை தாவீது மன்னித்து விடுகிறார்.
சீமேயிக்கு தனது குடும்பத்தினரின் (சவுல் குடும்பம்) ராஜ பதவி போய்விட்டதே என்ற ஆத்திரம் மனதில் இருக்கலாம். ஆனால் அதை யாரிடம், எந்த நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்றோ, எதனால் ராஜ பதவி போனது என்றோ சீமேயி ஆராயவில்லை. தாவீதின் தோல்வியை கண்டவுடன், அவரது முடிவை இவரே தீர்மானித்து கொண்டு சபித்து விடுகிறான்.
சீமேயியை போல நமக்குள், சுயம் இருக்க கூடாது. நம் குடும்பம், எனது மொழி, இனம், சபை, ஜாதி, மதம் ஆகியவை நமக்குள் கிரியை செய்ய கூடாது. இவையெல்லாம் நமக்குள் இருந்தால், மற்றவர்களின் உயர்வை நம்மால் பொறுத்து கொள்ள முடியாது. மேலும் தேவையில்லாத சந்தர்ப்பங்களில் நம்மை அறியாமலேயே, சீமேயியை போல உளறி, சாபத்தை பெற்று கொள்ளவும் வாய்ப்பு உண்டு.
இன்றைய கிறிஸ்தவர்களிடையே சரியான ஐக்கியம் இல்லாமல் இருப்பதற்கு சீமேயிக்கு இருந்த, அதே சுயம் என்ற ஆவி கிரியை செய்வது கூட ஒரு முக்கிய காரணம் ஆகும். எனவே இது போன்ற சுயமாக சிந்திக்கும் தன்மையை நம்மிடம் இருந்து அகற்றி, தேவனுக்காகவும், தேவ பிள்ளைகளுக்காகவும் கிரியை செய்யும் பரந்த சிந்தனையை வளர்த்து கொள்ள வேண்டும்.
ஆதி கிறிஸ்துவ சபையில் இந்த அனுபவம் இருந்ததால், அவர்களில் தேவ ஆவியானவர் வல்லமையாய் கிரியை செய்தார். மேலும் யாருக்கும் எந்த மனவருத்தமும் ஏற்படவில்லை.
ஆனால் இன்று சிலர் சீமேயி போல, சுயமாக யோசித்து தான் இருந்ததால் எல்லாம் நடக்கிறது என்று செயல்படுவதால், அவர்களை சுற்றிலும் இருப்பவர்களுக்கு மனவருத்தமும் வெறுப்பும் மட்டுமே ஏற்படுகிறது. தேவ கிரியை நடக்க வாய்ப்பு இல்லாமல் போகிறது.
சீமேயி இந்த தவறை செய்த போதும், தாவீது திரும்ப இஸ்ரவேலின் மேல் ராஜாவாக பொறுப்பேற்று, நாடு திரும்பியதை அறிந்து, தனது தவறை அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்கிறான். இதனால் தாவீதிடம் அவனுக்கு இரக்கம் கிடைக்கிறது என்று 2 சாமுவேல்:19.16-23 வசனங்களில் காணலாம்.
இதை ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஒப்பிட்டால், ஒரு காலத்தில் நாமும் இந்த சீமேயியை போல தேவனுக்கு விரோதமாக தூஷித்து கொண்டு திரிந்தோம். ஆனால் அவரை அறிந்த போதோ, அவரிடம் மன்னிப்பு கேட்டு இரக்கம் பெற்றுக் கொண்டோம். தேவனிடம் வந்த போது, நமது குற்றங்கள் மன்னிக்கப்பட்டது.
சீமேயி மன்னிப்பு கேட்டதை ஏற்றுக் கொண்ட தாவீது, அவனை கொல்லவில்லை. ஆனால் தாவீதின் மரண நேரத்தில், சீமேயி செய்த குற்றத்தை சாலொமோனுக்கு அறிவிக்கிறார் (1 ராஜாக்கள்:2.8-9). தனது தந்தையின் கஷ்ட நேரத்தில் தூஷித்த சீமேயியை, சாலொமோன் உடனே கொலை செய்யவில்லை. அவனது குற்றத்தை நிவர்த்தி செய்ய ஒரு வாய்ப்பு அளிக்கிறார் சாலொமோன்.
ஆனால் தனது உயிருக்கே கெடு விதித்துள்ள நிலையில், தன்னிடமிருந்து ஓடி போன வேலைக்காரரை தேடி, கழுதையின் மேல் ஏறி வெளியூருக்கு செல்கிறான் சீமேயி. அதுவே அவனது முடிவுக்கு காரணமானது என்பதை 1 ராஜாக்கள்:2.35-46 வசனங்களில் வாசிக்கலாம்.
இதேபோல ஆவிக்குரிய வாழ்க்கையில் பலரும் செய்கிறார்கள். தேவனை தூஷித்த செயலுக்கு மன்னிப்பை பெற்ற பிறகு, இயேசு கிறிஸ்துவின் மூலம் இரட்சிப்பின் அனுபவம் நமக்கு அளிக்கப்படுகிறது. சீமேயியை எருசலேமை விட்டு வெளியே போக கூடாது என்று சாலொமோன் கூறியது போல, தேவன் அளித்த இரட்சிப்பை இழக்க கூடாது என்று இயேசுவினால் நமக்கு கட்டளை அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பலரும் துவக்கத்தில் சீமேயி கூறியது போல, இரட்சிக்கப்பட்ட நாட்களில் இது நல்ல வார்த்தை (1 ராஜாக்கள்:2.38) என்று வாழ்கிறார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, தேவனையும் அவர் அளித்த இரட்சிப்பையும் மறந்துவிட்டு, உலகின் வேலைகளிலும், ஆடம்பரங்களிலும் சந்தோஷிக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் அறியும் தேவன், ஒருநாள் நியாயம் தீர்க்கும் போது, நாம் என்ன சொல்ல முடியும்?
கீதரோன் என்ற ஆற்றை ஞானஸ்நானத்திற்கு ஒப்பிடலாம். ஞானஸ்நானம் பெறுவதற்கு முன், பலவிதமான பாவங்களில் வாழ்ந்தோம். அதை கடந்து இரட்சிப்பிற்குள் வந்துவிட்டு, நாம் அந்த அனுபவத்தை இழந்து பழைய மனிதனாக மாற கூடாது.
அதாவது பின்மாற்றத்திற்கு செல்ல நம் கழுதையின் மீது சேணம் வைத்து ஏற கூடாது.
அப்படி நம் கழுதையை (மனதை) கொண்டு, கீதரோன் ஆற்றை (பின்மாற்றத்திற்குள்) கடக்கும் போது, ராஜாவின் (இயேசு) கட்டளையை (இரட்சிப்பை) மீறியதாக குற்றச்சாட்டு எழுந்து, மரணத்தை (நித்திய ஆக்கினை) சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.
(பாகம் – 9 தொடரும்)