0 1 min 11 mths

நாமும் ஒரு கழுதை தான்

இதற்கு முந்தைய பாகத்தின் தொடர்ச்சியாக கூட இந்த பாகத்தை வைத்துக் கொள்ளலாம். இரண்டு சீஷர்களால் கட்டு அவிழ்க்கப்பட்ட கழுதைக் குட்டி இயேசுவிடம் கொண்டு வரப்பட்டு, அதன் மீது இயேசு ஏறி பயணித்ததாக வேதத்தில் வாசிக்கிறோம்.

ஏனெனில் நாமும் ஒரு காலத்தில் கழுதையை போல அங்குமிங்கும் அலைந்து திரிந்தோம். ஆனால் இயேசுவினால் அனுப்பப்பட்ட தேவ ஊழியர்கள் வந்து நமது பாவக் கட்டுகளை அவிழ்த்தனர். நம்மை சேர்ந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், தேவனுக்கு தேவை என்று அறிந்த போது விட்டுவிட்டனர்.

ஆனால் இன்று பலரும் தங்களின் மனதை, மனிதர்களிடம் பறிக்கொடுத்து விட்டு, அவர்களை தங்களின் மீது சுமந்து கொண்டு திரிகிறார்கள். இயேசுவை சுமந்த கழுதைக்கு, இயேசுவிற்கு அளிக்கப்பட்ட எல்லா மரியாதையும் கிடைத்தது.

சாதாரண மனிதர்களை சுமந்து திரியும் கழுதைக்கு அந்த மரியாதையை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் சுமந்து திரியும் மனிதர்களால் அளிக்கப்படும் அவமானம் மட்டுமே கிடைக்கும். மேலும் இயேசு அந்த கழுதையில் இருந்த இறங்கிய பிறகு, அது ஒரு சாதாரண கழுதையாக மாறிவிட்டது.

அதேபோல நாம் ஒரு காலத்தில் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டேன். இதனால் எனக்கு வாழ்க்கை முழுவதும் தேவனுடைய ஆசீர்வாதமும், பாதுகாப்பும் இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. இயேசுவை எப்போதும் நம் மனமாகிய கழுதையின் மீது சுமந்தால் மட்டுமே, அவருடைய நன்மையும் கிருபையும் நம்மை தொடரும்.

நாம் தேவனை விட்டு விலகினால், அவர் நம் மனமாகிய கழுதையில் இருந்து இறங்கி விடுவார். எனவே தேவன் எப்போதும் நம்மோடு இருக்கிறாரா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும், நாம் மற்றவர்களின் கழுதைகளையும் (மனதையும்) திருட கூடாது. இன்றைய உலகில் மிகவும் மேன்மையாக கூறப்படும் ஒரு காரியம் தான் காதல். ஆனால் தேவனுடைய வசனத்தின்படி நாம் நேசிக்கும் நபர் மீதான அன்பு, தேவன் மீதான அன்பை விட அதிகமாக இருக்க கூடாது. இது அவரது மனதை திருடுவதற்கு சமம்.

யாத்திராகமம்:22.4-ல் வாசிக்கும் போது, மற்றவர்களின் கழுதைகளை திருடினால், அதற்கு பதிலாக இரட்டிப்பாக அளிக்க வேண்டும் என்று காண்கிறோம். எனவே அந்த திருட்டில் சிக்கலில் மாட்டிக் கொண்டால், அதற்கு இரட்டிப்பான நஷ்டத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பது விளங்குகிறது.

தேவன் அளித்த 10 கட்டளைகளில் கூட கழுதையை காண முடிகிறது. உபாகமம்:5.21-ல் கூட பிறனுடைய கழுதையை மட்டுமல்ல, பிறனுடைய எந்த காரியத்தையும் இச்சிக்க கூடாது என்று காணலாம். எனவே நம் மனமாகிய கழுதையின் மீது இயேசுவிற்கு மட்டுமே இடம் கொடுப்போம்.

இரட்சிக்கப்பட்ட பிறகு, இயேசுவை சுமந்து திரியும் பாக்கியத்தை நாம் பெற்றுள்ளோம். இப்போது நமக்குள் பழைய சுற்றி திரியும் கழுதையின் பழக்கங்கள் இருக்க கூடாது. தேவனுடைய காரியங்களை நாம் உணர்ந்து நடக்காவிட்டால், யோபு: 11.12-ல் வாசிப்பது போல காட்டுக் கழுதையாக நாம் ஆகிவிடுவோம்.

மேலும் நான் என்ற பெருமை நமக்குள் ஏற்படும் போது, நேபுகாத்நேசரை போல மனிதனுடைய இயல்பை இழந்து, காட்டுக் கழுதைகளோடு சஞ்சரிப்போம் (தானியேல்:5.21).

நாம் காட்டுக் கழுதையாகவே தொடர்ந்து இருக்க வேண்டும் என்று தேவன் நம்மை அழைக்கவில்லை. இயேசுவை சுமந்து திரியும் போது, கழுதை குட்டியின் நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறி, இயேசுவை போல ஆட்டிக் குட்டியாக மாற வேண்டும். இயேசுவை போல மாறினால் மட்டுமே, அவருடைய பரலோக ராஜ்ஜியத்திற்குள் சென்று சேர முடியும்.

வேதத்தில் கழுதை என்ற வேதப்பாடத்தில் இதுவரை நாம் கண்டவை:

நமது காணாமல் போன கழுதையை (மனதை), சாமுவேலிடம் (தேவன்) சென்று கேட்டு கண்டுபிடிப்போம். அதை பிலியாமை போல தேவ சித்தமில்லாத காரியங்களுக்கு நேராக அழைத்து செல்லாமல், தேவ வார்த்தைகளுக்கு செவிக் கொடுத்து கீழ்படிவோம். ஆபிரகாமை போல, தேவ சமூகத்தை கெடுக்கும் எல்லா தேவையற்ற எண்ணங்களையும் நம் மனதை விட்டு விலகுவோம்.

சவுல் போன்ற பொல்லாத ஆவி பிடித்தவர்களை சந்திக்க செல்லும் போது, தாவீதை போல நம் கழுதையின் மீது தேவ வசனத்தையும், பரிசுத்தாவின் வல்லமையும், தாழ்மையும் ஏற்றி சென்று, பிசாசை எதிர்த்து நிற்போம். அபிகாயிலை போல தேசத்தில் வழி தவறி நடக்கும் கிறிஸ்தவர்களுக்காக ஜெபிப்போம். தேவனிடம் இருந்து வரும் வார்த்தைகளுக்கு கீழ்படிவோம்.

அகித்தோபோல், சீமேயி ஆகியோரை போல சுயத்தை வைத்து, மற்றவர்களுக்கு எதிராக பேசாமல், தேவன் தந்த இரட்சிப்பை காத்துக் கொள்வோம்.

கழுதையான நாம் தனியே உலா வராமல், இயேசுவை சுமந்து செல்வோம். இயேசுவை சுமந்து பயணித்து செல்லும் கழுதை குட்டியான நாம், அவரை போல ஆட்டுக்குட்டியாக மாறுவோம். ஆட்டிக்குட்டியானவரான இயேசுவின் வருகையில் எடுத்துக் கொள்ளப்பட தேவன் நமக்கு உதவி செய்வாராக.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *