0 1 min 2 mths

அபிகாயிலும் கழுதையும்:

தாவீதின் வாழ்க்கையில் வரும் முக்கியமான நபர்களில் ஒருவர் அபிகாயில். அவரது வாழ்க்கையில் இரு சந்தர்ப்பங்களில் கழுதை குறுக்கிடுகிறது.

காலேபின் வம்சத்தை சேர்ந்த நாபால் என்பவரின் மனைவியாக வேதத்தில் அறிமுகமாகிறார் அபிகாயில் (1சாமுவேல்:25.3). சவுலின் கொலை வெறிக்கு தப்பி கொள்ள, பாலைவனத்தில் அலைந்த தாவீதும், அவரோடு உள்ள மனிதர்களும் உணவுக்காக கஷ்டப்படுகிறார்கள்.

இதனால், கர்மேலில் இருந்த நாபாலிடம் உணவுக்காக ஆட்களை அனுப்புகிறார் தாவீது. ஆனால் அவர்களை கேவலப்படுத்தி அனுப்பும் நாபால், தாவீதின் கோபத்தை சம்பாதித்து கொள்கிறான்.

இன்றைய கிறிஸ்தவ உலகிலும் பல நாபால்களை காண முடிகிறது. தேவன் ஊழியத்திற்கு அழைத்த துவக்க நாட்களில் எல்லா மக்களையும் ஒரே போல பாவித்து பேசி பழகுவார்கள். ஆனால் ஊழியத்தில் உயர்வை பெற்று சில வெளிநாட்டு பயணங்களை செய்த பிறகோ, பெரிய ஊழியர்களையும், கனம் பொருந்தியவர்களையும் மட்டுமே அதிகம் நேசிப்பார்கள்.

இதனால் பலருக்கு இடறல் ஏற்பட்டால் கூட அவர்கள் கண்டு கொள்வதில்லை. இதனால் அவர்கள் செய்யும் ஊழியத்தின் மூலம் ஆசீர்வாதம் அல்ல, சாபத்தையே சம்பாதித்து கொள்கிறார்கள்.

தாவீதின் ஆட்கள் வந்து நாபால் பேசிய வார்த்தைகளை கூறிய போது, தாவீது கோபமடைந்து, நாபாலுக்கு உள்ள எல்லாவற்றையும் சங்காரம் செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் புறப்படுகிறார்.

ஏனெனில் தாவீதின் கூட்டத்தினர், நாபாலின் மந்தைகளை காக்க உதவியாகவும், பாதுகாப்பாகவும் இருந்ததாக, நாபாலின் வேலைக்காரனம் ஒருவன் வந்து அபிகாயிலிடம் கூறுவதை 1 சாமுவேல்:25.15-16 வசனங்களில் காணலாம்.

நம் வாழ்க்கையில் நன்மை செய்தவர்களையும், இரட்சிப்பில் நடத்தியவர்களையும் நாம் என்றும் மறக்கக் கூடாது. சிலர் நன்மை செய்தவர்களை மறப்பது மட்டுமின்றி, அவர்களை கேவலப்படுத்தவும் செய்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக, சிறிய சபைகள் அல்லது ஊழியர்களின் மூலம் இரட்சிக்கப்பட்டு, பிற்காலத்தில் பெரிய ஊழியங்களில் முக்கிய நபராக மாறி இருப்பார்கள். அல்லது பெரிய சபைகளில் ஐக்கியமாகி இருப்பார்கள். உடனே அந்த சிறிய ஊழியர்களையும், ஊழியங்களையும் குறித்து, தெரிந்ததும் தெரியாததுமான காரியங்களை கேவலமாக பேசுவார்கள். நான் அங்கு இருந்திருந்தால், இப்படி வளர்ந்திருக்க முடியாது. தேவன் என்னை பாதுகாத்தார் என்றெல்லாம் பேசுவார்கள்.

இது போன்ற ஒரு செயல்பாட்டை தான் நாபால் செய்கிறார். தனக்கு தேவைப்பட்ட போது, தாவீதின் உதவியை பெற்று கொண்டு, அவருக்கு தேவை என வந்த போது, அவரை கேவலமாக பேசி அனுப்பி விடுகிறார்.

ஆனால் நாபாலின் மனைவியாகிய அபிகாயில், தன் கணவனின் செயல்பாட்டை அறிந்து, விரைந்து செயல்படுகிறாள். நன்மைக்கு பதிலாக தீமை செய்த நாபாலை மொத்தமாக அழிக்க புறப்படும் தாவீதின் குழுவினரை தடுக்கிறது அபிகாயிலின் ஞானமான செயல்.

தாவீதிற்கு தேவையான உணவு வகைகளை கழுதையின் மீது வைத்து எடுத்து கொண்டு சென்று, கோபத்தோடு வந்த தாவீதின் இதயத்தையே சாந்தப்படுத்தி விடுகிறாள். இதனால் குடும்பத்தை அழிக்க, மரண தூதனாக வந்த தாவீது, அபிகாயிலையும் அவள் குடும்பத்தையும் ஆசீர்வதித்து செல்கிறார்.

நாபால் ஒரு முட்டாள் என தாவீதிடம் குறிப்பிடும் அபிகாயில், அவனை குறித்து குறை கூறி கொண்டு திரியவில்லை; தாவீதின் கோபத்தில் சாகட்டும் என்று காத்திருக்கவில்லை. அப்படி செய்திருந்தால், தாவீதின் ஆட்கள், அவளையும் சேர்த்து கொன்றிருப்பார்கள். அவன் செய்த குற்றத்தை, தனது குற்றமாக எண்ணி மன்னிக்குமாறு தாவீதிடம் கூறியதால், உயிர் தப்பினாள்.

இன்றும் நம்மிடையே உள்ள பல நாபால்களைப் பற்றி குறை கூற அநேகர் உண்டு. அவர்களின் ஊழியம் சரியில்லை. பாட்டு சரியில்லை. ஆராதனை சரியில்லை என்று கூறுகிறார்கள். சிலர் பிறரை குறை கூறுவதையே ஊழியமாக கூட செய்கிறார்கள்.

ஆனால் அவர்களை தேவன் திருத்த வேண்டும் என்று ஜெபிப்பவர்கள் இல்லை. தேவ கோபத்திற்கு ஆளாக கூடும் என்று நாம் கருதும் தேவ ஊழியர்களை பற்றி குறை கூறுவதை நிறுத்திவிட்டு, அவர்கள் திருந்துவதற்காக ஜெபிப்போம். இல்லையெனில் அவர்களுக்காக ஜெபிக்காமல் விட்டதால், நாமும் தேவ கோபத்திற்கு ஆளாக நேரிடலாம்.

குறிப்பிட்ட நபர் குற்றம் செய்கிறார் என்ற நம் மனதில் உள்ள எண்ணத்தை நீக்கி விட்டு, அவர்ளுக்காக தேவன் எவ்வளவாக துக்கப்படுவார் என்று யோசிக்க வேண்டும். நம் மனமாகிய கழுதையின் மீது ஸ்தோத்திரங்களையும் மன்றாட்டுகளையும் தேவனுக்கு எடுத்து செல்லும் போது, தேவனுடைய கோபம் தணிக்கிறது.

அதேபோல நம் வாழ்க்கையில் தேவன் செய்த நன்மைகளை நினைத்து அவ்வப்போது அவரை துதிக்கும் போது, தேவன் நம் மீதும் மனமிறங்குகிறார்.

குடிகார கணவன் நாபால் மரிந்த பிறகு தாவீதினால் அழைப்பிக்கப்பட்ட போது, அபிகாயில் கீழ்படிந்து கழுதையின் மேல் ஏறி தாவீதின் ஸ்தானாதிபதிகளை பின்பற்றி செல்கிறாள். (1 சாமுவேல்:25.42). இயேசுவின் மணவாட்டியாக அழைக்கப்பட்டுள்ள நாமும், அந்த அழைப்பிற்கு கீழ்படிந்து, அவரது ஸ்தானாதிபதிகளாகிய தேவ ஊழியர்களுக்கும், வேத வசனத்திற்கும் கீழ்படிந்து நடப்போம்.

நம் மனதை தேவ வசனத்திற்கு கீழ்படிய ஒப்புக் கொடுக்க வேண்டும். தாவீதின் அழைப்பிற்கு, அபிகாயில் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. எந்த நிபந்தனையையும் முன்வைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தாவீதின் ஆட்கள் அழைத்து சென்ற பாதையில் அமைதியாக பயணித்து, தாவீதின் மனைவியாக மாறுகிறார் அபிகாயில்.

நாமும் நம்முடைய முழு மனதையும் வேத வசனங்களை பின்பற்ற ஒப்புக் கொடுத்து, ஊழியர்களின் சொற்களுக்கு கர்த்தருக்குள் கீழ்படியும் போது, பரலோக ராஜாவாகிய நம் தேவனிடம் சென்று சேர முடியும்.

(பாகம் – 7 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *