
நான் என் நேசருடையவள். என் நேசர் என்னுடையவர். உன்னதப்பாட்டு: 6.3
பரிசுத்த வேதாகமத்தில் இடம் பெறாத எந்த காரியங்களும் இல்லை என்று வேதப் பண்டிதர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இன்றைய நவீன காலத்தில் உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் ஒன்றான காதல் உடன் தொடர்புடைய சம்பவங்கள் கூட வேதத்தில் இடம்பெற்று உள்ளதை காண முடிகிறது.
சமீபத்தில் வேதத்தில் உள்ள காதல் சம்பவங்களை குறித்த, ஒரு கலந்தாய்வு நடைபெற்றது. இதற்கு அடிப்படையாக காதல் திருமணத்தை வேதம் அங்கீகரிக்கிறதா? என்ற கருத்து அமைந்தது. ஏனெனில் கிறிஸ்தவ உலகில் அது அதிக சர்ச்சைக்குரிய விஷயமாக உள்ளது.
ஆவிக்குரிய உலகில் ஒரு சில போதகர்கள் காதல் திருமணத்திற்கு ஆதரவாக போதிக்கிறார்கள். ஒரு சிலர் காதல் திருமணம் என்பது விபசார பாவத்திற்கு சமம் என்று கூட போதிக்கிறார்கள். எனவே இது குறித்த ஒரு வேதப் பாடத்தை நமது இணையதளத்தில் வெளியிடுவது ஒரு சரியான தீர்வாக இருக்கும் என்று நினைக்கிறோம்.
வேதத்தில் பல இடங்களில் வரும் காதல் சம்பவங்களையும், அதன் பின்னணியையும் குறித்து ஆராய்வதன் மூலம் காதல் திருமணத்தை வேதம் அங்கீகரிக்கிறதா? இல்லையா? என்ற கேள்விக்கு எளிதாக விடை கண்டறிய முடியும்.
இந்த வேதப் பாடத்திற்கு அடிப்படையாக நாம் எடுத்துள்ள வசனம் அடங்கியுள்ள ஞானி சாலமோன் எழுதிய உன்னதப்பாட்டு புத்தகத்தை ஒரு முழுமையான காதல் புத்தகம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு காதலுக்கு வேதம் முக்கியத்துவம் அளித்துள்ளது கவனிக்கத்தக்கது.
– – – – – – – – – – –
1. ஆதாம் – ஏவாள்:
கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி உலகில் பொதுவாக குறிப்பிடப்படும் முதல் காதலர்களாக ஆதாம், ஏவாள் ஆகியோர் உள்ளனர். ஆனால் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை உள்ள 66 புத்தகங்களையும் வாசித்து பார்த்தாலும், ஆதி பெற்றோரான மேற்கண்ட இருவரும் காதலர்கள் என்பதற்கு எந்த சான்று கிடைப்பது இல்லை.
இந்நிலையில் இவர்களின் குடும்பம் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை ஆராய்ந்தால், நமது வேதப் பாடத்தின் முக்கிய கேள்விக்கான பதிலை நெருங்க எதுவாக அமையும். ஆதியாகமம் 2-ஆம் அதிகாரத்தை படித்தால், முதல் மனிதனான ஆதாமின் படைப்பையும், அவனது துணையான ஏவாளின் படைப்பையும் காண முடிகிறது.
மண்ணில் இருந்து படைக்கப்பட்ட ஆதாமிற்கு, ஏதேன் தோட்டத்தை பண்படுத்தி, காக்கும் பணி அளிக்கப்படுகிறது. அந்த தோட்டத்தில் அவன் தனியாக இருப்பது நல்லதல்ல என்று கண்ட தேவன், அவனது விலா எலும்பு மூலம் ஏவாளை படைக்கிறார். இருவரையும் தேவன் ஆசீர்வதித்து, பூமி எங்கும் பலுகி பெரும்படி கூறுகிறார் (ஆதியாகமம்:1.28).
ஆதாமிற்கு துணையாக ஏவாளை கொடுத்தது தேவன் என்பது தெள்ளத் தெளிவாக இங்கு விளங்குகிறது. ஏவாளை தேடி ஆதாம் போகவில்லை, ஆதாமிடத்திற்கு ஏவாளை தேவன் கொண்டு வருகிறார் (ஆதியாகமம்:2.22). மேலும் இவர்களின் திருமணத்தை தேவனே நடத்தி வைத்தார்.
ஏதேன் தோட்டத்தில் உள்ள மிருகங்களும், பறவைகளும், மற்ற பிராணிகளும், செடி, கொடிகளும் உலகின் முதல் திருமணத்திற்கு வந்திருக்கலாம். திருமணத்தை நடத்த தேவன் வந்திருப்பதால், அவருடன் பரலோகத்தில் உள்ள தூதர்களும் வந்திருக்க கூடும்.
இதில் இருந்து நாம் ஆராதிக்கும் ஜீவனுள்ள தேவன், நமது தேவைகளை அறிந்து கிரியை செய்பவர் என்பது தெரிகிறது. தனக்கு ஒரு துணைத் தேவை என்று ஆதாம் தேடி செல்லவும் இல்லை. மேலும் எல்லா உயிரினங்களும் ஜோடியாக உள்ள நிலையில், தனக்கும் ஒரு துணை தேவை என்று தேவனிடம் கேட்கவும் இல்லை.
ஆனால் இன்றைய கிறிஸ்தவர்கள் இடையே தங்களுக்கான வாழ்க்கை துணையை தாங்களே தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நிலவுகிறது. அதற்காக குடும்பம், சபை, ஊர் என்று எல்லாவற்றையும் இழக்க தயாராகி விடுகிறார்கள்.
ஆதாமின் துணையாக ஏவாள் அளிக்கப்பட்ட பிறகு, அவரது ஒரு முழுமையான மகிழ்ச்சி ஏற்பட்டதன் விளைவாக, இவள் என் எலும்பில் எலும்பும், என் மாமிசத்தின் மாமிசமுமாக இருக்கிறாள் என்று கூறுகிறார் (ஆதியாகமம்:2.23).
ஆனால் இன்று பலரும் தாங்களாகவே தேடி கொள்ளும் துணை உடன் வாழ துவங்கின சில நாட்களிலேயே வெறுப்பு ஏற்பட்டு, விவாகரத்து வரை செய்து கொள்கிறார்கள். சிலர் பல ஆண்டுகளாக ஒருவரை காதலித்து, அவரை தனது துணையாக மனதில் நினைத்து வாழ்ந்து விட்டு, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவரை கைவிட்டு வேறொருவரை திருமணம் செய்து கொள்கிறார்கள்.
தேவன் அளித்த துணையான ஏவாள் உடன் சேர்ந்து பாவம் செய்த பிறகு, ஆதாம் அவளை குற்றப்படுத்தினாலும், அவளை வேண்டாம் என்று தள்ளவில்லை. அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டு வாழ்ந்தான்.
ஆனால் இன்று பலருக்கும் தேவன் அளித்த மனைவியிடமோ, கணவனிடமோ காணப்படும் குறைகளை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அதே நேரத்தில் தங்களின் குறைகளை அவர்கள் புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.
உண்மையில் தேவனால் நமக்கு அளிக்கப்படும் துணை ஒரு சரியான தேர்வாக தான் இருக்கும். நம்மில் உள்ள குறைகளை நிறைவாக்கும்படியும், அவர்களில் உள்ள குறைகளை நாம் நிறைவாக்கும்படியும் அமைந்து இருக்கும் என்பதை நாம் புரிந்து கொண்டால், தேவ பிள்ளைகளின் குடும்பங்களில் கணவன் – மனைவி இடையே ஏற்படும் சண்டை, சச்சரவுகளை தவிர்க்க முடியும்.
சாதாரண குடும்ப சண்டையில் துணையை புரிந்து கொள்ள முடியாத தன்மையில் துவங்கும் கணவன் – மனைவி இடையிலான பிளவு, விவாகரத்து வரை கொண்டு சென்று விடுகிறது.
எனவே ஆதாமிற்கு ஏற்ற துணையை கொடுத்த தேவன், இன்றும் நமக்காக கிரியை செய்கிறார். நமக்கு ஏற்ற துணையை நாம் தேர்ந்தெடுப்பதை விட, அவர் அளிப்பது சரியான ஒன்றாக இருக்கும். நமக்கு துணையாக இருப்பவர், நாம் நினைப்பது போல இருக்க வேண்டும் என்று கருதுவது போலவே, நமது துணையின் ஆசைகளுக்கும் மதிப்பு அளிப்பது அவசியம்.
ஆதாம்-ஏவாள் இடையே வேறு யாரும் உள்ளே நுழைந்து அறிவுரை கூறவோ, அவர்களுக்கு ஆதரவாக நிற்கவோ இல்லை. ஆனாலும் அவர்களுக்கு எண்ணற்ற குழந்தைகள் பிறந்தார்கள் என்பதோடு, சபிக்கப்பட்ட பூமியில் எத்தனையோ கஷ்டங்கள் அனுபவித்த போதும், பிரிந்து போகவில்லை.
இன்றைய காலத்தில் கணவன்-மனைவி இடையிலான சண்டைகளை தீர்க்க, குடும்பம், உறவுகள், சபை ஊழியர்கள், விசுவாசிகள், நண்பர்கள் என்று ஒரு கூட்டமாக வந்தாலும், சரியான தீர்வை காண முடிவதில்லை. இரு சார்பாகவும் கருத்துகள் எழுந்து, சில சண்டைகள் இன்னும் மோசமாகி பிரிவில் மட்டுமே முடிகின்றன.
எனவே குடும்பத்தில் உள்ள தேவ சமாதானத்தை கெடுக்கும் சிறுசிறு சண்டைகள், கோபம் ஆகியவற்றை களைந்து தேவ அன்பில் இணைவோம். கணவன்-மனைவி இடையே தேவனை மட்டுமே வைத்து அவரிடம் ஜெபத்தில் ஆலோசன கேட்போம். அப்போது தேவன் அளிக்கும் ஒரு பூர்ண சமாதானமும் அன்பும் குடும்பத்தில் என்றும் நிலைத்து நிற்கும்.
(பாகம் – 2 தொடரும்)