0 1 min 5 mths

தாவீதின் வாழ்க்கையில் காதல்:

தேவனுடைய இதயத்திற்கு ஏற்ற மனிதன் என்ற சாட்சியைப் பெற்ற தாவீதின் வாழ்க்கையில் கூட ஒரு காதல் சம்பவத்தை காண முடிகிறது. 2 சாமுவேல்:11 ஆம் அதிகாரத்தில் பத்சேபாளின் அழகை கண்டு, அவளை அடைவதற்காக பல தந்திரங்களை செய்து, கடைசியில் ஒரு கொலை செய்கிறார் தாவீது.

மற்ற நாட்டு ராஜாக்கள் போருக்கு செல்லும் காலத்தில், தாவீது போருக்கு செல்லாமல் வீட்டில் ஓய்வெடுத்தது தான் இதற்கான முக்கிய காரணம் என்பது மேற்கண்ட அதிகாரத்தை கவனமாக வாசித்தால் தெரிந்து கொள்ளலாம். நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் அனுதினமும் நமக்கு யுத்தம் உண்டு.

இதில் வெற்றி பெற வேண்டுமானால் நாம் தொடர்ந்து போராடி கொண்டே இருக்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் தாவீதை போல, போருக்கு செல்ல வேண்டிய நேரத்தில், நாம் ஓய்வெடுத்து விடுகிறோம். இதனால் தேவையில்லாத பாவங்களில் சிக்கி கொள்கிறோம்.

நாம் செய்யும் ஜெபம் கூட ஒரு வகையில், சாத்தானுக்கு எதிராக நாம் செய்யும் போர் தான். இதில் தனி ஜெபம், குடும்ப ஜெபம், ஆலயத்தில் நடைபெறும் கூட்டங்கள் என்று எல்லாவற்றை கணக்கில் கொள்ளலாம். நவீன கால கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்தவர்களாக மாறியுள்ளார்.

இது குறித்து கேட்டால், பல காரணங்கள் கூறுகிறார்கள். ஆனால் எது எப்படியானாலும், தேவனுக்கு என நாம் ஒதுக்க வேண்டிய நேரத்தை ஒதுக்கி தான் ஆக வேண்டும். அதை தவறவிடும் பட்சத்தில், தாவீதை போல, பாவ இச்சைகளில் சிக்கி கொண்டு, பெரிய பாவத்தை செய்யவும் நமக்குள் தைரியம் ஏற்பட்டு விடுகிறது.

2 சாமுவேல்:11.2-3 வசனங்களை படிக்கும் போது, தான் பார்த்த பெண்ணை குறித்து தாவீது விசாரித்த போது, அவள் மற்றவனுடைய மனைவி என்று அறிந்து கொண்டதாக காண்கிறோம். ஆனாலும் அந்த தவறான சிந்தையில் இருந்து தன்னை மாற்றிக் கொள்ள தாவீது முயற்சி செய்யவில்லை.

அதாவது அவளின் மீதான மோகம் ஒரு பாவத்திற்கு தன்னை வழிநடத்துவதாக, அவன் எண்ணி பார்க்கவில்லை. இந்த பிரச்சனை இன்றைய கால கிறிஸ்தவர்களுக்கும் உண்டாகிறது. இது ஆண்களுக்கு மட்டுமின்று, பெண்களுக்கும் ஏற்படுகிறது.

நமக்கு துணையாக தேவனால் அளிக்கப்பட்ட ஆண் அல்லது பெண் மீது விருப்பம் கொள்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அதை குறித்து எந்த ஒரு நிச்சயமும் இல்லாத நிலையிலும், நமக்கு மனத்திற்கு பிடித்த ஒருவர் மீது மோகம் கொண்டு, அவரை அடைய அலைவது, ஒரு தவறான செயல் ஆகும்.

அதற்கு காதல் என்றெல்லா வேறெந்த பெயர் அளிக்கப்பட்டாலும், நம்மை அது ஒரு பாவத்திற்குள் கொண்டு செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குளித்து கொண்டிருந்த பத்சேபாளின் மீது தாவீதிற்கு மோகம் ஏற்பட்ட போது, இது குறித்து மனிதர்களிடம் விசாரித்த தாவீது, தேவனிடம் விசாரிக்கவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். அதாவது தேவனுக்கு அங்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

இது குறித்து தாவீது, தேவனிடம் விசாரித்து இருந்தால், அவளை அடைய ஒரு கொலை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. ஆனால் அவள் மீதான மோகத்தால் (காதல்) மிகுதியால், ஒரு உண்மையுள்ள சேவகனாக இருந்த உரியாவை திட்டமிட்டு கொலை செய்து, அவளை மனைவியாக்கி கொள்கிறார் தாவீது.

இதனால் தாவீதின் ஆசை நிறைவேறியது என்றாலும், 2சாமுவேல்:11.27-ல் இது கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பாய் இருந்தது என்று காண்கிறோம். இதேபோல இன்று தாங்கள் காதலிக்கும் நபரை அடைய வேண்டும் என்பதற்காக சிலர், தேவனையும் உதறி தள்ள தவறுவது இல்லை.

தங்களின் விலையேறப்பட்ட இரட்சிப்பையும் தியாகம் செய்து, அவர்களை அடைகிறார்கள். அவர்களின் ஆசை நடந்தேறிய உடன், இப்போது என்ன நடந்தது? என்று கேட்பவர்களும் உண்டு. ஆனால் அது தேவனுடைய பார்வையில் எப்படி இருந்தது என்பதை மேற்கண்டவர்கள் சிந்திப்பது இல்லை.

பல தேவ ஊழியர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு, தொடர்ந்து வெற்றிகரமாக தேவ ஊழியம் செய்து வருவதாக கூறுவதை கேட்டு இருக்கிறேன். ஆனால் பிற்காலத்தில் பெரிய குடும்ப சிக்கல்கள் ஏற்பட்டு, பிரிந்து செல்வதையும் பார்த்து இருக்கிறேன். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், அது தேவனுடைய பார்வையில் பொல்லாப்பாக மாறுவதே ஆகும்.

பத்சேபாளை காதலித்து, அதற்காக வஞ்சகமாக திட்டமிட்டு, அவளை மனைவியாக்கி கொண்ட தாவீது, பிற்காலத்தில் தேவ கோபத்தின் தண்டனையை பெற்றதாக காண்கிறோம். பத்சேபாளின் முதல் குழந்தையும், தேவன் அடித்ததால் சாக நேரிடுகிறது.

எனவே நமக்கு நியமிக்கப்பட்டுள்ள நேரத்தில், தேவனுக்கு என்று நாம் நேரத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. நமது பகைவனாகிய சாத்தானிடம் தினமும் ஜெபத்தில் போராடி, ஜெயிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் தவறாக எண்ணங்களும், சிந்தைகளும் நமக்குள் உதித்து, பிற்பாடு பெரியளவிலான பாவத்திற்கு நேராக நாம் வழிநடத்தப்பட நேரிடுகிறது.

நாம் செய்யும் காரியங்கள் தேவ சித்தத்திற்கு உகந்ததாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்கவும் மறக்கக் கூடாது. நமது ஒவ்வொரு செயல்களும் தேவன் சித்தத்திற்கு ஏற்றதாக அமையும் பட்சத்தில், தாவீது விழுந்தது போன்ற தேவையற்ற பாவ சோதனை என்ற கண்ணிகளில் விழுந்து, சிரமப்பட வேண்டிய தேவை ஏற்படாது.

(பாகம் – 5 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *