0 1 min 4 mths

தாவீதை காதலித்த மீகாள்:

கடந்த பாகத்தில் பத்சேபாளின் அழகை கண்டு மோகம் கொண்டு, தேவ சித்தமில்லாத காரியங்களில் ஈடுபட்ட தாவீது, தேவ கோபத்திற்கு உள்ளானது குறித்து கண்டோம். அதே தாவீதின் இளம் வயதில், அவரது வீரத்தை கண்டு மீகாள் என்ற ஒரு பெண் காதலித்தார்.

இஸ்ரவேலின் முதல் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்ட சவுலின் இரண்டாவது மகள் தான் இந்த மீகாள். ஒரு கட்டத்தில், இஸ்ரவேலின் முழு சேனையையும் திகிலடைய செய்த கோலியாத்தை தனி ஆளாக எதிர்கொண்ட தாவீது, அவனை கொன்று நாடு திரும்பினார். அதை கண்டு தாவீதின் மீது காதல் கொள்கிறார் மீகாள். இதை குறித்து 1 சாமுவேல்:18.20-ல் வாசிக்கிறோம்.

இதை அறிந்து தனது மகளை திருமணம் செய்து தருவதாக சவுல் கூறிய போதும், தனது ஏழ்மையான நிலையை தாவீது குறிப்பிட தவறவில்லை. தன்னை இதுவரை நடத்தி வந்த தேவனையும், அவர் மறக்கவில்லை (1 சாமுவேல்:18.18,23).

இதேபோல நாம் தேவனுக்காக செய்யும் வல்லமையான கிரியைகள், ஊழியங்கள் ஆகியவற்றை கண்டு, பலருக்கும் நம் மீது காதல் ஏற்படலாம். ஆனால் அது போன்ற சந்தர்ப்பங்களில், நாம் யார் என்பதை மறக்கக் கூடாது. எந்த நிலையில் இருந்து தேவன் நம்மை உயர்த்தினார் என்பதை நினைக்க வேண்டும்.

துவக்கத்தில் தேவனுக்காக பல வல்லமையான ஊழியங்களை செய்யும் பலரும், பிற்காலத்தில் பணம், சொத்து, ஆடம்பரம் ஆகியவற்றின் பின்னால் போவதற்கு, இது போன்ற காதல் வலைகளும் ஒரு காரணமாக அமைகின்றன. இது போன்ற காதல் வலைகளில் சிக்கினால், கட்டாயம் ஆவிக்குரிய வீழ்ச்சி அல்லது சரிவை சந்திக்க நேரிடும்.

அதே நேரத்தில், பெலிஸ்தரின் மீது கிடைத்த மிகப்பெரிய வெற்றியை விட, பெண்களால் தாவீது புகழப்பட்டதை கண்டு பொறாமை கொண்ட சவுலுக்கு, தாவீதை கொலை செய்ய மேற்கண்ட மீகாளின் காதலை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த விரும்பியதாக 1 சாமுவேல்:18.21-ல் வாசிக்கிறோம்.

அதாவது தனது மகளின் காதலை முன்நிறுத்தி, தனது பதவிக்கு தகுதியான ஒரு போட்டியாளரை வீழ்த்தும் ராஜ தந்திரத்தை சவுல் பயன்படுத்துகிறார். ஆனால் இதெல்லாம் அறியாத தாவீது, மீகாளை திருமணம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட போட்டியில் 200 சதவீதம் தேர்ச்சி பெறுகிறார். இதற்கு தாவீதுடன் கர்த்தர் இருந்ததே காரணம்.

இந்த திட்டத்தில் சவுல் தோல்வியை தழுவினாலும், பிற்காலத்தில் தாவீதின் வாழ்க்கையில் மீகாள் ஒரு கண்ணியாகவே அதாவது ஒரு முள்ளாகவே இருந்தாள் என்று வேதத்தில் காணலாம்.

2 சாமுவேல்:3.13-16 வசனங்களை வாசிக்கும் போது, தாவீதை திருமணம் செய்த பிறகு, பல்த்தியேல் என்ற ஒருவரை மீகாள் திருமணம் செய்ததாக வாசிக்க முடிகிறது. சவுலின் இறப்பிற்கு பிறகு தாவீது ராஜாவாகும் போது, மீகாளை திரும்ப தன்னிடமாக அழைத்து கொள்கிறார். இதிலிருந்து துவக்கத்தில் தாவீதின் மீது மீகாளுக்கு இருந்த காதல், பிற்காலத்தில் கசந்து போனது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

எனவே நாம் செய்யும் ஊழியங்களுக்கும், தெய்வீகப் பணிகளுக்கும் இடையே வரும் காதல் உறவுகள் நிலையானதாக இருக்கும் என்று கூற முடியாது. ஏனெனில் தேவனுக்காக நாம் எழும்பி பிரகாசிக்கும் போது, அதை கெடுத்து திசை திருப்ப இது போன்ற ஆயுதங்களை பிசாசு பயன்படுத்தலாம்.

இதை சரியாக புரிந்து கொள்ளாத பட்சத்தில், தாவீதின் பிற்கால வாழ்க்கையில் மீகாள் இடையூறாக இருந்தது போல, நம்மை குறுக்கிடும் காதலர்களும் அமையலாம்.

அதேபோல 2 சாமுவேல்:6.20-23 வசனங்களை வாசிக்கும் போது, தாவீதுடன் வாழ்ந்த பிறகும், மீகாளின் மனதில் எந்த மாற்றமும் உண்டாகவில்லை என்று அறியலாம். அதாவது சவுலை போல, மற்றவர்களுக்கு முன்னால் நாம் மேன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மீகாளுக்கும் இருந்தது.

இதனால் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக மகிழ்ச்சியோடு ஆடிப் பாடிய தாவீதை மீகாள் நிந்திக்கிறாள். ஆனால் அதை தாவீது பொருட்படுத்தாமல் விட்டு விடுகிறார். இதனால் மீகாள் மரிக்கும் வரை குழந்தை அற்றவளாகவே இருந்தாள் என்று அறிய முடிகிறது.

எனவே தேவனிடத்தில் இருந்து நம்மை பிரிக்கக் கூடிய ஆற்றல் கொண்ட மீகாள் போன்ற காதல் சோதனைகளில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. இதை ஏற்பது, நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் அபாயகரமான ஒன்றாக அமையலாம்.

ஏனெனில் தாவீதை போல நாமும், மேற்கண்ட சோதனையில் தேவனுக்காக திடமான நிற்க முடியுமா? என்பது சந்தேகமே. எனவே நமக்கு வாழ்க்கை துணையாக வரும் நபர், தேவனால் நிர்ணயிக்கப்பட்டவராக இருப்பது நல்லது.

தேவ சித்தம் அறிந்து வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்தால், மீகாள் போன்ற பெண்கள் நம் வாழ்க்கையில் குறுக்கிடமாட்டார்கள். அப்படியே குறுக்கிட்டாலும், அவர்களை விட்டு விலகி செல்ல, தேவன் நமக்கு உதவி செய்வார்.

(பாகம் – 6 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *