இயேசுவிற்கு பதிலாக மாற்று நபர்:

இயேசுவின் மரணத்திற்கு பிறகு, மேற்கொண்டு இனி என்ன செய்வது என்ற எண்ணம் எல்லா சீஷர்களின் இருதயத்திலும் இருந்துள்ளது. இதனால் இயேசுவின் மீதான நம்பிக்கை இழந்தவர்களாக, எதிர்காலத்தில் யார் தங்களை இனி வழி நடத்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது.

இதன் விளைவாக தங்களோடு பேசிய அடையாளம் தெரியாத நபர் (இயேசு), வேத வசனங்களை கொண்டு அவர்களுக்கு விளக்கிய போது, அவரை பிரிய விரும்பாத இரண்டு சீஷர்களும், அவரை தங்களுடன் இருக்குமாறு வேண்டிக் கொண்டதாக, லூக்கா:24.29-ல் வாசிக்கிறோம்.

ஆனால் அவர் அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து கொடுக்கும் வரை, இயேசுவை அவர்களால் அடையாளம் காண முடியவில்லை. எனவே அதுவரை அவர்களின் மனதில், இவ்வளவு காரியங்களை நமக்கு விளக்கி கூறும் இவர் யார்? என்ற கேள்வி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்திருக்க கூடும்.

இயேசுவை போலவே அப்பத்தை எடுத்து ஆசீர்வதிக்கும் காட்சி அவர்களுக்கு இந்த நேரத்தில் ஞாபகம் வர வேண்டுமானால், அந்த சிந்தனை இருந்திருந்தால் மட்டுமே ஏற்படும். ஏனெனில் பெரும் துக்கத்தில் இருக்கும் அவர்களுக்கு இயேசுவை நேரடியாக பார்த்தே கண்டறிய முடியவில்லை என்றால், அவரது பழைய செய்கைகள் மட்டும் எப்படி நினைவுக்கு வரும்?

மேற்கண்ட இந்த இரண்டு சீஷர்களும் எருசலேமில் இருந்து எம்மாவு என்ற ஊருக்கு சென்றதாக நாம் வாசிக்கிறோம். எருசலேம் என்ற வார்த்தைக்கு பல ஆவிக்குரிய அர்த்தங்கள் இருந்தாலும், அதில் ஒன்று தேவனோடு நெருங்கி வாழ்கிற ஒரு அனுபவம் என்பதாகும். அதே நேரத்தில் எம்மாவு என்ற வார்த்தைக்கு, ஒரு உண்மையான தவிப்பு அல்லது காத்திருப்பு என்ற பொருளை அளிக்கிறது.

இதில் இருந்து எருசலேமில் தேவனோடு நெருங்கி வாழ வேண்டிய 2 சீஷர்களும், தவிக்கும் நிலையில் உள்ள எம்மாவுக்கு பயணித்தது தெரிய வருகிறது. சுருக்கத்தில் கூறினால், அந்த இரு சீஷர்களுக்கும், இயேசுவின் இடத்தில் வேறொரு மாற்று மனிதர் தேவைப்பட்டார் என்பதை அறியலாம்.

இதே போன்ற சந்தர்ப்பங்கள் நம் அனுதின வாழ்க்கையிலும் நடைபெறுவதை காண முடிகிறது. நம் வாழ்க்கையில் வரும் சோதனை மிகுந்த கட்டங்களில், தேவனை நோக்கி காத்திருந்து அவருடன் கிட்டச் சேரும் போது, அவர் நமக்காக கிரியை செய்து நம்மை விடுவிக்கிறார்.

ஆனால் இன்றைய வேகமான உலகில், நம்மில் பலருக்கும் அவ்வளவு பொறுமை இல்லாத காரணத்தால், நாம் நினைக்கும் காரியங்களை செய்து தரக் கூடிய மனிதர்களை நாடி செல்கிறோம். அதாவது, இயேசுவை நாம் விட்டு ஓடுவதோடு மட்டுமல்லாமல், அவருக்கு பதிலாக அவரது இடத்தில் வேறொரு நபரை நாம் வைத்து பார்க்கிறோம்.

எடுத்துக்காட்டாக, நமக்கு திடீர் தேவையாக ஒரு லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. ஆனால் நம்மிடமோ அவ்வளவு பணம் இல்லை என்று வைத்து கொள்ளுங்கள். இந்நிலையில் நமக்கு உடனடியாக, தேவனை நோக்கி ஜெபிக்கும் எண்ணம் ஏற்படுவதை விட, யாரிடம் பணம் கேட்டால் கிடைக்கும் என்ற எண்ணம் தான் முதலில் வருகிறது.

ஏனெனில் இந்த காரியத்திற்காக ஜெபித்துக் கொண்டிருந்தால், தேவன் உடனே கிரியை செய்யமாட்டார் என்று நாம் மறைமுகமாக நம்புகிறோம், எண்ணுகிறோம். இரண்டாவது தேவனை விட, நமக்கு உதவ கூடிய மனிதர்களிடம் நமது பிரச்சனையை கூறி எளிதில் பணத்தை திரட்டி விடலாம் என்று நம்புகிறோம்.

இதனால் தேவன் மீதான விசுவாசத்தை இழப்பதோடு, அவர் நம் வாழ்க்கையில் கிரியை செய்ய முடியாதவாறு தடுக்கிறோம் என்பதை நாம் மறக்க கூடாது. நம் வாழ்க்கையின் எந்த பிரச்சனைகளுக்கும் தீர்வை கொண்டவராக இயேசு, நம்மோடு இருக்கிறார். நம்முடன் நடக்கிறார். ஆனால் அவரை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.

இதே தவறை தான் எம்மாவுக்கு போன சீஷர்களும் செய்தார்கள். அவர்களுக்கு எருசலேமில் உள்ள மற்ற சீஷர்களை போல, தாங்கள் கேள்விப்பட்ட உயிர்த்தெழுந்த இயேசுவின் காரியங்களை நம்பிக் கொண்டு இருக்க முடியவில்லை. மேலும் இந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்து கொள்ள, இயேசுவை போன்ற ஒரு மாற்று நபரை எதிர்பார்த்தனர்.

ஆனால் இயேசுவுக்கு மாற்று நபராக வேறு யாராலும் செயல்பட முடியாது என்பதை நிரூபித்து கொண்டு, அவர்களுக்கு சத்தியத்தை விளக்கி காட்டி, தன்னையும் வெளிப்படுத்துகிறார் இயேசு.

இதனால் பாதை மாறி சென்ற அந்த 2 சீஷர்களும், திரும்ப எருசலேமிற்கே வந்ததாக வேதத்தில் (லூக்கா:24.33) வாசிக்கிறோம். எனவே நம் வாழ்க்கையிலும் தேவன் மீதான அவிசுவாசமான நிலையில் இருந்து இந்த திரும்பி வரும் நிலையை தான் தேவன் எதிர்பார்க்கிறார். எனவே நம் வாழ்க்கையில் வரும் சோதனைகள், தேவைகள், கலக்கங்கள் ஆகியவற்றை நீக்குவதற்கு இயேசுவினால் மட்டுமே முடியும்.

அவருக்கு பதிலாக, அந்த பணியை செய்ய வேறு எந்த மாற்று நபராலும் முடியாது என்பதை புரிந்து கொள்வோம். தேவ சமூகத்தில் இருந்து விலகி செல்லாமல், அவரது வார்த்தைகளை விசுவாசித்து, அவருக்குள் உறுதியாக இருப்போம். அப்போது தேவ நாமத்தை மகிமைப்படுத்தும் அற்புத சாட்சிகளாக நம்மால் நிலைநிற்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.

(பாகம் – 5 தொடரும்)

By admin