ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது” லூக்கா:24.16

உலகின் பாவங்களை சுமந்து தீர்க்கும்படி மண்ணுலகிற்கு வந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நோயாளிகளை குணமாக்கினார். ஏழைகள் மீது மனம் இரங்கினார். அதிகார ஆணவம் கொண்டவர்களை சாடினார். அநியாயம் செய்கிறவர்களை தட்டிக் கேட்டார். எனவே இயேசுவின் மீது மக்களின் பற்றுதல் அதிகரித்தது.

இந்த வகையில் இயேசுவை பின்பற்றியவர்களில் பல தரப்பினர் இருந்தனர். இயேசு கண்ட சிலருக்கு அவர் வியாதிகளை நீக்குகிறவராகவும், சிலருக்கு நாட்டை அடிமைத்தனத்தில் இருந்து மீட்கிறவராகவும், சிலருக்கு தீர்க்கத்தரிசியாகவும், வேறு சிலருக்கு பசி அறிந்து உணவு அளிக்கிறவராகவும் என்று ஒவ்வொரு தரப்பினருக்கும், அவர் ஒவ்வொரு விதமாக தெரிந்தார்.

இந்நிலையில் அவர் திடீரென ஆட்சியாளர்கள் மற்றும் மதக் குருமார்களால் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டது, எல்லா தரப்பினர் இடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் இயேசுவை இஸ்ரவேலின் ராஜாவாக கண்ட அவரது சீஷர்களும் உட்படுவர்.

நம்மை இரட்சிப்பவர் என்று அவர்கள் முழுமையாக நம்பிய இயேசுவே, சிலுவையில் அறையப்பட்டு மரித்து அடக்கம் செய்யப்பட்ட நிலையில், தங்களுக்கு என்ன கதி நேருமோ என்ற பயம் அவர்களை தோற்றிக் கொண்டது. இந்நிலையில் தான் இயேசுவின் சீஷர்களில் இருவர், எருசலேமில் இருந்து ஏழு அல்லது எட்டு மைல் தொலைவில் உள்ள எம்மாவு என்ற ஊருக்கு நடந்து சென்றனர்.

இந்த பயணத்திலும் அவர்களால், இயேசுவிற்கு நேர்ந்த கோர மரணத்தை மறக்க முடியவில்லை. அதை குறித்து இருவரும் பேசிக் கொண்டு சென்ற போது, அவர்களுடன் ஒரு புதிய நபராக நடந்து வந்த இயேசுவை, அவர்களால் அடையாளம் காண முடியவில்லை. இதற்கான பல காரணங்களை நாம் வேதத்தில் காணலாம். அவற்றை இந்த வேதப் பாடத்தில் ஒவ்வொன்றாக காண்போம்.

1. தெளிவு இல்லாத மனம்:

இந்த உலகில் இயேசு வாழ்ந்த போதே, தமது மரணத்தை குறித்து பல சந்தர்ப்பங்களில் தெரிவித்து வந்தார். இயேசுவின் உவமைகளிலும் அவற்றை குறிப்பிடுவது அவரது வழக்கமாக இருந்தது. பொதுமக்கள் இடையே உவமைகளின் மூலம் பேசிய இயேசு, தனியே இருந்த போது, அவற்றின் பொருளை சீஷர்கள் கேட்டு அறிந்து கொண்டார்கள் என்று நாம் சுவிஷேசங்களில் வாசிக்க முடிகிறது.

இவ்வளவு தெளிவாக இயேசுவின் காரியங்களை அறிந்தும், சீஷர்களுக்கு ஒரு தெளிவாக மனம் இருக்கவில்லை. இதை லூக்கா:24.17-ல், இயேசு கேட்கும் கேள்விக்கு, அதன் அடுத்த வசனத்தில் சீஷன் ஒருவர் கூறும் பதிலின் மூலம் தெரிகிறது.

தங்களின் குருவாக இருந்த இயேசுவின் மரணம் மட்டுமே அவர்களுக்கு பெரிய இழப்பாக இருக்கிறதே தவிர, அவர் கூறிய வார்த்தைகள், அவரது கிரியைகள், அற்புதங்கள் ஆகியவை பெரிதாக தெரியவில்லை. இதனால் கேட்பது இயேசு என்பது கூட தெரியாமல், இது குறித்து உமக்கு தெரியவில்லையா? என்று அந்த சீஷன் கேட்கிறார்.

நம் வாழ்க்கையில் கூட இது போன்ற சந்தர்ப்பங்கள் அவ்வப்போது வருகின்றன. நம்மில் பெரும்பாலானோர் நாமாக சென்று யாரிடமும், இயேசுவை குறித்து கூறுவது இல்லை. ஆனால் மற்றவர்கள் எதார்த்தமாக பைபிளை குறித்தோ, இயேசுவை குறித்தோ நம்மிடம் வந்து கேட்டால் கூட, அதை விளக்கி கூற நாம் தயாராக இல்லை.

எடுத்துக்காட்டாக, பிற மதத்தை சேர்ந்த ஒருவர் அல்லது இயேசுவை அறியாத ஒருவர், நம்மிடம் ஞானஸ்நானத்தை குறித்து கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன்மூலம் இயேசுவின் மரணம், உயிர்தெழுதல், இரட்சிப்பு என்று ஒரு பெரிய பிரசங்கமே செய்யலாம்.

ஆனால் பிறர் முன் அதை கூறுவதற்கு பயந்து அல்லது வெட்கப்பட்டு கொண்டு, அதெல்லாம் உங்களுக்கு கூறினாலும் புரியாது என்று சிலர் ஒரு வரியில் பதிலை முடித்து கொள்வார்கள். இதன்மூலம் ஒரு ஆத்துமாவை இரட்சிப்பிற்குள் நடத்தும் வாய்ப்பை நம்மில் பலரும் இழக்கிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இயேசுவை குறித்தோ, அவர் அளிக்கும் இரட்சிப்பை குறித்தோ கூறுவதற்கு நமக்குள் ஏன் பயம் ஏற்படுகிறது என்று சிந்தித்தால், மேற்கண்ட 2 சீஷர்களை போல நமக்குள் தெளிவு இல்லாத மனம் இருக்கிறது. எப்படியென்றால், நமக்கு அளிக்கப்பட்டுள்ள இரட்சிப்பின் அனுபவத்திலேயே தெளிவு இல்லாத காரணத்தால், மேற்கொண்டு அதை பற்றி அடுத்தவர்களுக்கு கூற பயப்படுகிறோம். இதனால் நாம் பெற்றுக் கொண்ட இரட்சிப்போடு நிறுத்திக் கொள்கிறோம்.

எனவே தேவனால் நமக்கு அளிக்கப்பட்டுள்ள விலையேறப் பெற்ற இரட்சிப்பை குறித்து தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அந்த காலத்தில் இயேசுவின் சீஷர்கள், இயேசுவின் வார்த்தைகளை நேரடியாக கேட்டும், அவை அவர்களின் இருதயத்தில் கிரியை செய்யவில்லை. இதனால் இயேசுவின் மரணத்தை, அவர்களால் தீர்க்கத்தரிசனங்களின் நிறைவேறுதல் என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை.

இதேபோல இன்று பல கிறிஸ்தவ கூட்டங்களில் பங்கேற்கும் நாம், தேவனை குறித்தும், வேதத்தை குறித்தும் எவ்வளவோ செய்திகளை கேட்கிறோம். ஆனால் அதன்மூலம் நம்மில் எந்த அளவிற்கு ஆவிக்குரிய மாற்றங்கள் நிகழ்கின்றன? ஏனெனில் ஆவிக்குரிய மாற்றங்கள் தான், சரீர மாற்றங்களுக்கு துவக்கத்தை விதைக்கின்றன.

கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு விறுவிறுப்பாக சென்று வருவதால், நாம் தேவ சித்தமுள்ள வாழ்க்கை வாழ்கிறோம் என்று எண்ணக் கூடாது. நாம் கேட்கும் வசனங்களுக்கு ஏற்ப நம் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ வேண்டும். உண்மையை கூறினால், இயேசுவோடு இருந்த சீஷர்களின் வாழ்க்கையில், அவர் உலகில் இருந்த வரை எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை.

அவர் உயிர்த்தெழுந்த பிறகு, மீண்டும் அவர்களுக்கு காட்சி அளித்து தன்னை குறித்து விளக்கி காட்டிய பிறகே, தேவன் விரும்பிய ஆவிக்குரிய அனுபவங்களை அவர்களில் காண முடிந்தது. அதேபோல நாம் தேவனைக் குறித்தும், அவர் அளித்துள்ள இரட்சிப்பை குறித்தும் அறிந்து கொள்ள நம் கைகளில் பரிசுத்த வேதாகமம் அளிக்கப்பட்டுள்ளது. அதை தினந்தோறும் வாசித்து, தியானித்து, அந்த வசனங்களின்படி நமது நடக்கைகளை மாற்றி அமைக்கும் போது, நமது மனம் தெளிவு அடைகிறது.

அப்போது, எம்மாவுக்கு சென்ற சீஷர்களுக்கு, இயேசு தமது காரியங்களை தெளிவாக எடுத்துக் காட்டிய போது, அவர்களின் இருதயம் எப்படி கொழுந்துவிட்டு எரிந்ததோ அதேபோல நம் இருதயங்களும் தேவனுக்காக எரிய ஆரம்பிக்கும்.

(பாகம் -2 தொடரும்)

By admin