2. தவறான கண்ணோட்டம்:

இயேசுவின் சீஷர்களுக்கு அவரையே அடையாளம் காண முடியாமல் போனதற்கான மற்றொரு முக்கிய காரணம், இயேசுவை குறித்து அவர்கள் கொண்டிருந்த தவறான கண்ணோட்டம் ஆகும்.

இயேசுவின் ஊழியத்தில் இணைவதற்காக அழைக்கப்பட்டது முதல் பல இடங்களில் அவருடன் சீஷர்கள் பயணித்தனர். அவரது வார்த்தைகளை அதிக அளவில் கேட்டார்கள். ஆனால் அந்த வார்த்தைகளை அவர்கள் மனதில் வைத்து நிதானிக்கவில்லை. இல்லாவிட்டால் அதை குறித்து ஆராய்ந்து பார்க்கவில்லை. மாறாக தங்களுக்கு அவரை யார் என்று தோன்றுகிறதோ, அது தான் சரி என்ற முடிவில் அவருடன் சுற்றி திரிந்து உள்ளனர்.

சீஷர்களை பொறுத்த வரை, இயேசு ஒரு அற்புதங்களை செய்கிறவர் என்றும், எந்த மாதிரியான கேள்விகளுக்கும் பதிலளித்து, மற்றவர்களுக்கு போதிக்கிற ஒரு தேவனுடைய தீர்க்கத்தரிசி என்றும் எண்ணினார்கள். இதனால் இயேசுவை தேவ குமாரன் என்றும், அவர் பாவிகளை இரட்சிக்க உலகத்திற்கு வந்தவர் என்றும் அவர்கள் உணரவில்லை. இதை லூக்கா:24.19-யை வாசிக்கும் போது அறிய முடிகிறது.

எனவே அவரது மரணத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களால், அவர் உயிர்த்தெழுந்தார் என்று மற்றவர்கள் கூறுவதை நம்ப முடியவில்லை. இந்த மனநிலையில் மேற்கண்ட எம்மாவுக்கு போன 2 சீஷர்கள் மட்டுமின்றி, மற்ற எல்லா சீஷர்களும் இருந்துள்ளனர் என்பதை லூக்கா: 24.11-யை வாசிக்கும் போது அறியலாம்.

இன்றைய கிறிஸ்தவர்கள் இடையேயும் இதே நிலையை காண முடிகிறது. மற்றவர்களுக்கு நாம் இயேசுவை அறிமுகம் செய்யும் போது, அவரை நோய்களை குணமாக்குகிறவர், கஷ்டங்களை நீக்குகிறவர், பண தேவைகளை சந்திக்கிறவர் என்று போதிக்கிறோம். ஆனால் அவர் மேற்கண்ட காரியங்களை செய்வதன் பின்னணியில் நம்மை பாவத்தில் இருந்து மீட்டு, பரிசுத்தப்படுத்தி, பரலோக ராஜ்ஜியத்திற்கு கொண்டு செல்கிறார் என்பதை பெரும்பாலானோர் அறிவிப்பது இல்லை.

இதனால் நீங்கள் எப்படி இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டீர்கள் என்று கிறிஸ்தவர்களிடம் கேட்டால், உலக காரியங்களில் தேவன் செய்த கிரியைகளை தான் கூற முடிகிறதே தவிர, எனது கொடும் பாவங்களில் இருந்து என்னை மீட்டார் என்று கூற முடிவதில்லை.

இரட்சிக்கப்பட்ட துவக்கத்தில் இந்த நிலையில் இருப்பதில் தவறில்லை. ஆனால் இரட்சிக்கப்பட்டு பல ஆண்டுகளை கடந்த பிறகும், அதே நிலையில் தொடர்வது தேவ சித்தமுள்ள காரியமாக இருப்பதில்லை. ஏனெனில் நாம் இந்த உலகத்திற்குரிய காரியங்களில் மட்டும் ஆசீர்வாதமாக இருப்பதற்காக அழைக்கப்பட்டவர்கள் அல்ல. மேன்மையான பரலோக ராஜ்ஜியத்தின் வாசிகளாக மாறுவதற்காகவே அழைக்கப்பட்டவர்கள் என்பதை நாம் மறந்து போகக் கூடாது.

இன்று நடத்தப்படும் பல கிறிஸ்துவக் கூட்டங்களில் கூட இயேசு உங்களை ஆசீர்வதிக்கிறார், உயர்த்துகிறார், குணமாக்குகிறார் என்று பிரசங்கிக்கப்படுகிறது. இதில் தவறு எதுவும் இல்லை. இயேசு உண்மையிலே ஆசீர்வதிக்கிறவர், உயர்த்துகிறவர் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் அது போன்ற காரியங்களை மட்டுமே முன்னிறுத்தி பேசுவது தவறு. ஏனெனில் இயேசு கிறிஸ்து அவற்றை மட்டுமே செய்கிறவர் அல்ல. அவர் பாவிகளை இரட்சிக்க உலகத்திற்கு வந்தவர் என்பது தான் அவரது முதன்மையான பணியாக இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆனால் உன்னை பாவத்தில் இருந்து மீட்டு பரலோக ராஜ்ஜியத்திற்கு ஏற்றவனாக இயேசு மாற்றுகிறார் என்று அரிதாகவே பேசப்படுகிறது. இதை மற்றவர்களை குற்றப்படுத்துவதற்காக நாங்கள் கூறவில்லை. இதனால் இயேசுவை குறித்த ஒரு தவறான கண்ணோட்டம், இரட்சிக்கப்படும் மக்கள் இடையே பதிந்து விடுகிறது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

மேலும் உலக காரியங்களுக்காக மட்டும் அவரை ஏற்றுக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. இதனால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகலாமே தவிர, தேவன் விரும்புகிற உண்மையான கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

எம்மாவுக்கு சென்ற சீஷர்களின் மனதில், இயேசு ஒரு தீர்க்கத்தரிசி என்ற எண்ணம் இருந்தது. அதை நீக்கும் வகையில், இயேசு தம்மை குறித்த வேத வார்த்தைகளின் நிறைவேறுதல்களை விளக்கி காட்டினார். அப்போது அவர்களிடம் இருந்த இயேசுவை குறித்த தவறான கண்ணோட்டங்கள் நீங்கி, அவரை சரியான முறையில் அறிந்து கொண்டனர்.

அதுபோல நாமும் தினமும் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து இயேசுவை சரியான முறையில் அறிந்து கொள்வோம். நாம் எதற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்வோம். மற்றவர்களுக்கு இயேசுவை சரியான முறையில் அறிவிப்போம். அப்போது தேவன் விரும்பும் உண்மையுள்ள ஊழியக்காரனாக, நல்ல கிறிஸ்தவனாக நாம் மாற முடியும்.

(பாகம் – 3 தொடரும்)

By admin