3. விசுவாசத்தில் தள்ளாடும் அனுபவம்:

இயேசுவோடு பல காலமாக நடந்து திரிந்த சீஷர்களால், தங்களின் குருவையே அடையாளம் காண முடியாமல் போனதற்கான அடுத்த காரணம் அவர்கள் விசுவாசத்தில் உறுதி இல்லாத நிலை ஆகும்.

லூக்கா: 24 அதிகாரத்தின் துவக்கத்தில் கல்லறைக்கு சென்ற பெண்கள், இயேசு உயிர்ந்தெழுந்த சம்பவத்தை அறிந்ததாக வாசிக்கிறோம். ஆனால் அதை மற்ற சீஷர்களுக்கு கூறிய போது, அது ஒரு வீண் பேச்சாக அவர்களுக்கு தெரிந்ததாக (லூக்கா: 24.11) வாசிக்க முடிகிறது.

மேலும் அடுத்து வரும் வசனங்களில், இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று அறிக்கையிட்ட சீமோன் பேதுரு கூட விசுவாசம் இல்லாதவனாக, கல்லறைக்கு சென்று பார்த்தார் என்று காண்கிறோம். இதில் இருந்து இயேசு உயிர்ந்தெழுந்த சம்பவத்தை குறித்து அடுத்தவர்கள் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட போதும், அதை மற்றவர்களால் நம்புவதற்கு கடினமாக இருந்து உள்ளது என்பது தெரிகிறது.

இதன் மூலம் இயேசு உயிரோடு இருந்த காலத்தில் தனது சீஷர்களுக்கு கூறிய காரியங்களின் மீது அவர்களுக்கு மிகக் குறைந்த அளவிலான விசுவாசம் மட்டுமே காணப்பட்டது என்பதையும் அறியலாம். மேலும் இயேசுவை சரீர அளவில் மட்டுமே ஏற்றுக் கொண்டார்களே ஒழிய, மனதளவில் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை.

இது போன்ற விசுவாசத்தில் தள்ளாடும் சூழ்நிலைகள் நமது அன்றாடம் வாழ்க்கையிலும் நடைபெறுகின்றன. எடுத்துக்காட்டாக, இயேசு வியாதிகளை குணமாக்குகிறார் என்று மற்றவர்களுக்கு கூறுகிறோம். ஆனால் நம் வாழ்க்கையில் வரும் வியாதி நேரங்களில், தேவனை கேள்விக் கேட்கிறோம். மேலும் அந்த நேரத்தில் வேறு யாராவது மூலம் தேவனின் குணமாக்கும் வல்லமைகளைக் குறித்த சாட்சிகளைக் கேட்டால் கூட, அதன் மீது விசுவாசம் வைக்க நம்மால் முடிவதில்லை.

இதிலும் சிலர் வியாதி நேரங்களில், தேவனால் சுகத்தை பெற்றுக் கொண்ட சாட்சிகளை பகிர்ந்து கொண்டால், உங்களுக்கு இது போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் தான் தெரியும் என்று கோபம் அடைந்து விடுகிறார்கள். இதன் பின்னணியில் தேவன் மீதான விசுவாசம் நமக்கு எந்த அளவிற்கு ஆழமாக உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

அதேபோல வேதத்தில் உள்ள பல வாக்குத்தத்தங்களை வாசிக்கிறோம். அதற்கு ஏற்ப வரும் இக்கட்டான சூழ்நிலைகளில், அந்த வாக்குத்தத்தங்களை கூறி ஜெயம் பெற முடிவதில்லை. எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட பாவத்தை நம்மால் விட முடியவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கும் என்று வாசிக்கிறோம்.

அப்படியென்றால், அந்த குறிப்பிட்ட பாவம் செய்ய நம் மனத்திற்கு உந்துதல் வரும் போது, இயேசு இரத்தத்திற்குள் நம்மையே ஒப்புக் கொடுத்து ஜெபிக்க வேண்டும். அப்படி ஜெபிக்கும் போது, தேவனுடைய அற்புத கரம் நம்மை பாதுகாக்கிறது.

இதன்மூலம் எந்த மாதிரியான கொடூர பாவத்தில் இருந்தும் தேவனுடைய விடுதலையை பெற்ற கொள்ள முடிகிறது. முடிவாக அந்த பாவங்களை அறிக்கையிட்டு, விட்டு விட வேண்டும் என்கிறது வேதம்.

இதை செய்யாமல், எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். நானும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன் என்றெல்லாம் கூறுவதால், அந்த பாவத்தில் இருந்து விடுதலை பெற முடியாது. அந்த வேத வசனத்தின் மீது விசுவாசம் வைத்து, அதற்காக நம்மை தேவனிடம் ஒப்புக் கொடுக்கும் போது, தேவனுடைய கிரியை வெளிப்படுகிறது.

மேற்கூறிய இயேசுவின் சீஷர்களை போல விசுவாசத்தில் தள்ளாடும் கிறிஸ்தவர்களால், தேவனுடைய அற்புதங்களையும், அதிசயங்களையும், தங்களின் வாழ்க்கையில் காண முடியாது என்பது கண்கூடு.

இயேசுவின் வார்த்தைகளின் மீது முழுமையான விசுவாசம் வைக்காமல், அவரை சரீரத்தில் மட்டும் பின்பற்றி வந்த சீஷர்களால், அவரது உயிர்ந்தெழுந்த வல்லமையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதேபோல இயேசுவே தங்களுடன் நடந்து வந்தும் கூட, அவரை கண்டறிய முடியவில்லை. இதே போன்ற நிலை நமக்கு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், நாம் வேத வசனங்களை வாசிப்பதிலும், இயேசுவின் மீதான விசுவாசத்திலும் அனுதினமும் வளர வேண்டும்.

மேலும் நாம் விசுவாசத்தில் சோர்ந்து போகும் நேரத்தில் நம்மை உயிர்ப்பிக்க கூடிய சாட்சிகளையும், அனுபவங்களையும் கேட்கும் போது, அதன் மீது நம்பிக்கை வைத்து, தேவனுக்குள் உறுதியான விசுவாசத்தை புதுப்பித்து கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே, தேவனுடைய அற்புதங்களையும், அதிசயமான வழிநடத்துதலையும் நம் வாழ்க்கையில் உணர முடியும்.

(பாகம் – 4 தொடரும்)

By admin