…போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும்; நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி,” 1இராஜாக்கள்.19:4

பரிசுத்த வேதாகமத்தில் தேவனுக்காக வைராக்கியமாக வாழ்ந்து, தான் சொல்லும் வரை தேசத்தில் மழையோ, பனியோ பெய்யாமல் நிறுத்திய ஒரே தீர்க்கத்தரிசி எலியா. பரிசுத்த தேவனை விட்டு விலகி சிலைகளை வணங்க சென்ற இஸ்ரவேல் மக்களை, திரும்பிக் கொண்டு வர வானத்திலிருந்து அக்னி இறங்க செய்தவரும் இவரே.

இந்நிலையில் எலியாவின் வாழ்க்கையில் ஆவிக்குரிய சோர்வு ஏற்பட்ட போது, அவர் செய்த ஜெபத்தின் வார்த்தைகளை தான் இன்றைய தியானத்திற்காக எடுத்துள்ளோம். எலியாவிற்கு வந்த கொலை மிரட்டலில், அவரது தைரியத்தையும் விசுவாசத்தையும் இழந்தார்.

நமது வாழ்க்கையிலும் தேவனுக்காக எவ்வளவோ காரியங்களை செய்து கொண்டிருக்கிறோம். பலருக்காக, பல காரியங்களுக்காக ஜெபிக்கிறோம். அதில் பதில் கிடைத்தே ஆக வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் சில நேரங்களில் நம் ஜெபத்திற்கு பதில் கிடைப்பதில்லை.

இதிலும் மற்றவர்களுக்காக ஜெபித்து தோல்வி அடையும் போது, அது மிகவும் நம்மை சோர்வடைய செய்து விடுகிறது. இதில் தேவனையே கேள்வி கேட்கும் நிலைக்கும் சென்று விடுகிறோம். இதேபோல தான் எலியாவும் சோதனை நேரத்தில் மரிப்பதற்காக ஜெபித்தார். ஆனால் ஜெபத்தை கேட்காமல் விட்ட தேவன், இன்று வரை அவரை சாகவிடவில்லை.

இப்படி சம்பவிப்பது ஏன்? ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட நிலையை கடந்துவிட்டால், நாம் சொல்வதையெல்லாம் (ஜெபம் என்ற பெயரில்) தேவன் கேட்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் எழுந்து விடுகிறது. இதனால் தேவனுடைய சித்தத்தை தேடுவதற்கு மறந்து விடுகிறோம்.

ஆனால் எல்லாவற்றையும் நேர்த்தியாகவும், நன்மைக்காகவும் செய்யும் தேவன், நம் விருப்பத்தை ஏற்று பதில் அளிப்பதில்லை. இதை அறியாத நாம் சோர்ந்து போகிறோம். இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கும் பிசாசு உள்ளே புகுந்து, தேவனிடமிருந்து நாம் விலகி செல்ல ஆலோசனைகளை அளிக்கிறான். சோர்ந்து போன நேரத்தில் பகுத்தறியும் மனநிலையை கொண்டிருப்பவர்கள் மிகவும் குறைவு என்பதால், தேவனை விட்டு விலகி செல்கிறோம். ஆனால் இதையெல்லாம் தேவன் விரும்புவதில்லை.

சாக ஆசைப்பட்டு ஜெபித்த எலியாவை தேவன் கைவிடவில்லை. அவரை தேற்றி, மீண்டும் ஊழியத்தை செய்ய செய்தார். அவருக்கு இருந்த ஊழியத்தை இரு மடங்கு வல்லமையுடன் செய்யும் வகையில், அவரது சீஷன் எலிசாவை நியமிக்க பண்ணினார். இதேபோல நம் வாழ்க்கையிலும் தேவன் செய்ய நினைக்கிறார்.

நம் ஜெபங்கள் கேட்கவில்லை என்றால், சோர்ந்து போக கூடாது. தேவ சித்தம் வேறு எதுவோ உள்ளது என்று எடுத்து கொள்ள வேண்டும். அதேபோல நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் எவ்வளவு தான் முன்னேற்றம் அடைந்தாலும், தேவ சித்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்து போக கூடாது. அழைத்த தேவனுடைய சித்தத்தை செய்வதே எப்போதும் நமக்கு நன்மையாக முடியும்.

ஜெபம்:

எங்களை நேசிக்கும் அன்புள்ள தேவனே, இன்று எங்களுடன் பேசின வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். எங்களின் ஜெபங்களுக்கு பதில் கிடைக்காத சந்தர்ப்பங்களில், எலியாவை போல சோர்ந்து போன அனுபவங்கள் உண்டு. இருப்பினும் அதே நிலையில் இருக்க நீர் விரும்புவதில்லை என்று அறிந்தோம். நாங்கள் எப்போது உம் சித்தம் செய்யும் பிள்ளைகளாக இருக்க எங்களுக்கு உதவி செய்யும். அதற்காக எங்களை தாழ்த்தி ஒப்புக் கொடுக்கிறோம். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *