0 1 min 1 yr

சவுலும் இஸ்ரவேலர் அனைவரும் அந்தப் பெலிஸ்தனுடைய வார்த்தைகளைக் கேட்டு, கலங்கி மிகவும் பயப்பட்டார்கள்.  1 சாமுவேல்: 17.11

இஸ்ரவேலின் முதல் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்ட சவுல், மற்ற எல்லா மக்களை விட அதிக உயரம் மிகுந்தவனாகவும், சிறந்த உடல்வாகு கொண்டவனாகவும் இருந்தான் என்று வேதம் கூறுகிறது. இதனால் சவுலுக்கு எதிராக யுத்தம் செய்ய பெலிஸ்தர் வந்த போது, அவனுக்கு நிகரான உடல்வாகு கொண்ட கோலியாத் என்ற வீரனை உடன் அழைத்து வருகின்றனர்.

கோலியாத்தின் வெளி உருவ அமைப்பைக் கண்டு, மனதளவில் தைரியத்தை இழந்த சவுலும், இஸ்ரவேல் படையும் மிகவும் பயந்தார்கள். இந்நிலையில் அவன், இஸ்ரவேல் சேனையை கேலி, கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டான். இது மேலும் பயத்தை உண்டாக்குகிறது.

அதாவது சர்வ வல்லமையுள்ள தேவனுடைய சேனையான நம்மை, இவன் எதுவும் செய்ய முடியாது என்ற விசுவாசத்தை இழந்தனர். இதனால் தங்களையும் தேவனுடைய நாமத்தையும் கிண்டல் செய்த போதும், அவர்கள் எதுவும் பதிலளிக்கவில்லை.

தேவனால் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்ட போது, சவுலின் மீது பரிசுத்தாவியின் வல்லமை இருந்தது. ஆனால் அவனது கீழ்படியாமையின் நிமித்தம், அதை இழந்து, நாட்டை ஆளுவதற்கு தேவையான தேவனுடைய ஆதரவை இழந்தான்.

இன்றுள்ள பல கிறிஸ்தவர்களுக்கும் இது போன்ற நிலை ஏற்படுகிறது. இரட்சிக்கப்பட்ட துவக்கத்தில், தேவனுக்காக அதிகமாக பாடுபடும் பலரும், நாட்கள் செல்லச் செல்ல தேவனிடம் இருந்து விலகி, சொந்த விருப்பத்திற்கு வாழ துவங்குகிறார்கள்.

இது குறித்து கேட்டால், தாங்கள் கடந்து வந்த ஆவிக்குரிய அனுபவங்களைக் குறித்து விளக்கம் அளித்து, தற்போதைய சூழ்நிலையை நியாயப்படுத்துகிறார்கள். இதனால் அவர்களுக்கு எதிராக வரும் சிறிய போராட்டங்களைக் கூட கண்டு பயப்படுகிறார்கள்.

கோலியாத்தைக் கண்டு சவுல் மட்டுமின்றி, அவனோடு இருந்த மக்களும் பயப்பட்டார்கள் என்று வேதம் கூறுகிறது. நாம் சவுலைப் போல தேவ சித்தம் செய்ய மறுக்கும் போது, விசுவாசம் இல்லாத அல்லது விசுவாசத்தை தளர்த்தும் மக்களுடன் நமக்கு ஐக்கியம் ஏற்படுகிறது.

இதனால் ஒரு கட்டத்தில் நமக்குள் இருக்கும் விசுவாசத்தை வளர்க்க நினைத்தாலும், நம்மை சுற்றிலும் உள்ளவர்களின் நடவடிக்கைகள், ஆலோசனைகள் மூலம் அதில் தோல்வியை தழுவுகிறோம்.

இன்னும் சிலருக்குள், தேவனின் மீதான நம்பிக்கையை விட, பிசாசின் மீதான பயம் தான் அதிகமாக காணப்படுகிறது. தேவனுக்காக கிரியை செய்தால், நாம் பிசாசின் போராட்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அஞ்சுகிறார்கள். இதன் விளைவாக தங்கள் வாழ்க்கையின் தேவைகளுக்கு மட்டும் தேவனை தேடுகிறார்கள்.

விரும்பிய ஆசீர்வாதங்களைப் பெற்ற பிறகு, தங்களின் பழைய பாவ வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். மேற்கண்ட பயந்தவர்களின் வாழ்க்கையில் தேவனுடைய திட்டங்கள் முழுமையடையாமல், அவர்களுக்கு அளிக்கப்பட்ட இரட்சிப்பு வீணாகிறது.

எனவே இரட்சிக்கப்பட்ட காலத்தில் நமக்கு இருந்த ஆதிகால தேவ அன்பிற்கு திரும்புவோம். எந்தொரு போராட்டத்தையும், பிசாசையும் கண்டு பயப்படுவதை தவிர்த்து, சர்வ வல்லமையுள்ள தேவனிடம் விசுவாசத்தை வைப்போம். நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவர் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம்.

சவுலைப் போல சொந்த இஷ்டப்படி வாழாமல், தேவ சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்து, அவரது பரிசுத்தாவியின் ஆலோசனைகளைத் தினமும் பெறுவோம். அப்போது ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த தாவீதைப் பயன்படுத்தி, அசுரன் கோலியாத்தை வீழ்த்தியது போல, நம்மையும் தேவன் பயன்படுத்துவார். இன்று நமக்குள் சவுலின் பயம் இருக்கிறதா? அல்லது தேவனுக்காக வைராக்கியமாக நிற்கும் தாவீதின் விசுவாசம் இருக்கிறதா? என்று நம்மையே ஆராய்ந்து பார்ப்போம்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்பான தெய்வமே, எங்களோடு பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். எங்கள் வாழ்க்கையில் வந்த பல சோதனைகளிலும் போராட்டங்களிலும் நாங்கள் தேவன் மீதான விசுவாசத்தை இழந்து, பிசாசிற்கு பயப்பட்ட சந்தர்ப்பங்களை மன்னியும். இனி வரும் நாட்களில் தாவீதைப் போல உம்மை மட்டுமே சார்ந்து வாழ கிருபைத் தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *