
ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன். ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம் பண்ணேன். 1 கொரிந்தியர்:9.26
கிராமப்புறங்களில் சிலம்பம் மிகவும் பிரபலமானது. சிலம்பம் முறையாக கற்று தேர்ந்த ஒருவரை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் அவருக்கு கிடைக்கும் எதை வேண்டுமானாலும் ஆயுதமாக பயன்படுத்தி, எதிரிகளிடம் இருந்து தப்பி விடுவார்.
இந்நிலையில் ஆவிக்குரிய வாழ்க்கையைப் பற்றி கூறி வரும் பவுலடியார், சிலம்பத்தை குறித்து இங்கே குறிப்பிடுகிறார். தியான வசனத்தின் முதல் வரியில், ஆவிக்குரிய வாழ்க்கையின் இலக்கு குறித்து, தனக்கு நிச்சயம் இருப்பதாகவும், இரண்டாவது வரியில் ஆகாயத்தில் சிலம்பம் அடிப்பதைக் குறித்தும் பவுல் கூறுகிறார்.
பவுல் காலத்தில் ஏதேன்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியைக் கண்டவாறு சென்ற போது, இந்த காரியத்தை எடுத்துக்காட்டாக கூறியதாக சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அங்கே நடந்த ஓட்டப்பந்தய களத்தில் ஓடிக் கொண்டிருந்த சிலரின் உடல்வாகு, வேகம், இலக்கை நோக்கி செல்லும் ஆவேசம் ஆகியவை பவுலை அதிகளவில் கவர்ந்ததாக தெரிகிறது.
ஓட்டப்பந்தத்தில் பங்கேற்கும் எல்லாருக்கும் முன்பாக, முதல் பரிசாக வழங்கப்படும் கோப்பை வைக்கப்படுகிறது. இதனால் பந்தயத்தில் பங்கேற்கும் எல்லாருடைய மனதிலும் அதை பெற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு, அதற்காக கடுமையாக முயற்சி செய்கிறார்கள்.
இதேபோல நாமும் ஆவிக்குரிய வாழ்க்கையில் பயணிக்கும் போது, இயேசுவைப் போல மாறி, அவர் இருக்கும் இடத்தில் பங்கடைய வேண்டும் என்ற இலக்கு, நமக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது. அதை நோக்கி நாம் ஓட வேண்டும். நமது ஓட்டத்தின் இடையே பல தடைகள் உள்ளன. அவற்றை பிசாசு கொண்டு வந்து, நமது இலக்கை நோக்கி உள்ள கவனத்தைத் திருப்ப முயற்சி செய்கிறான்.
மேலும் நாம் ஓடுவதோடு, சில நேரங்களில் பரிசுத்த ஜீவியத்திற்காக போராடவும் வேண்டியுள்ளது. இது ஒரு சிலம்பம் செய்வது போன்ற போராட்டம் ஆகும். சிலம்பம் செய்பவருக்கு எதிராக சுற்றிலும் 8 பேர் நின்று, கற்களை எரிந்தாலும், அவற்றை அந்த வீரர் எளிதாக தடுத்து விடுவர். இன்னும் தெளிவாக கூறினால், தனக்கு எதிராக எறியப்பட்ட கற்களை, எறிந்தவர் மேலேயே திருப்பி அனுப்பவும் முடியும்.
இதுபோல ஆவிக்குரிய வாழ்க்கையில் போராடும் வகையில், நமக்கு ஆவிக்குரிய ஆயுதங்கள் நமக்கு அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை சரியான முறையில் பயன்படுத்தினால், சத்துருவை எளிதாக மேற்கொள்ள முடியும்.
ஆனால் பலரும் இதை சரியான முறையில் பயன்படுத்தாமல், மேலே நோக்கி நம் ஆயுதங்களை பிரயோகிக்கிறோம். நமக்கு முன்பாக எதிரி இருக்க, நாம் எதுவும் இல்லாத ஆகாயத்தை நோக்கி சிலம்பம் செய்வதால் ஏதாவது பயன் உண்டா? இந்த தருணத்தை பயன்படுத்தி கொண்டு, நம்மை தாக்கும் சத்துரு எளிதாக வீழ்த்தி விடுகிறான்.
இதனால் தான் பவுல் ஆகாயத்தை அடிக்கிறவனாக சிலம்பம் பண்ணேன் என்று கூறுகிறார். சுருக்கமாக கூறினால், எந்த பயனும் இல்லாத இந்த உலக காரியங்களுக்காக எனது ஆவிக்குரிய பரிசுத்தத்தையும், வாழ்க்கையையும் நான் தியாகம் செய்யமாட்டேன் என்று கூறுகிறார். ஆவிக்குரிய வாழ்க்கையில் நம்மில் பலரும் வீழ்ந்து போவதற்கு, இது ஒரு முக்கிய காரணமாக திகழ்கிறது.
எந்த சூழ்நிலையிலாவது தேவனுக்கு அளிக்க வேண்டிய நேரத்தையும், பொருளையும், பணத்தையும் எடுத்து சென்று, அழியும் தன்மை கொண்ட உலக காரியங்களுக்காக பயன்படுத்தி உள்ளோமா? அப்படியிருந்தால், இன்றே அந்த பழக்கத்தை விட்டு விடுவோம். இது ஆகாயத்தை சிலம்பம் செய்வதை போன்றதாகும்.
பவுலைப் போல, கிறிஸ்துவிற்காக தெளிந்த புத்தியுள்ளவர்களாக போராடுவோம். நமது போராட்டங்கள் வீணாகி போகாமல் இருக்க, அதை கவனமாக செயல்படுத்துவோம். அப்போது இந்த உலகில் வாழ்ந்து ஜெயம் கொண்டவராக பரமேறி சென்ற இயேசுவை போல, நாமும் ஜெயம் பெற்று, அவர் இருக்கும் பரலோகத்திற்கு சென்ற சேர முடியும்.
ஜெபம்:
எங்களை நேசிக்கிற அன்பான தெய்வமே, எங்களுக்கு முன்பாக நீர் வைத்திருக்கிற இலக்கை நோக்கி, ஒவ்வொரு நாளும் முன்னேற உதவி செய்யும். அந்த இலக்கில் இருந்து எங்கள் கவனத்தை சிதற செய்யும் போராட்டங்களை எதிர்கொண்டு, ஜெயம் பெற கிருபைத் தாரும். உமது ராஜ்ஜியத்தில் வந்து சேர, அனுகரகம் செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.