0 1 min 8 mths

…அப்பொழுது தாவீது: அதற்கு நிகரில்லை; அதை எனக்குத் தாரும் என்றான். 1 சாமுவேல்:21.9

இஸ்ரவேலின் முதல் ராஜாவும், தனது மாமனாருமான சவுலின் பார்வையில் இருந்து, ராஜா ஆக அபிஷேகம் பெற்ற தாவீது தப்பியோடும் ஒரு சந்தர்ப்பத்தில், ஆசாரியனிடம் கூறிய மேற்கூறிய வார்த்தைகளையே தியானத்திற்காக எடுத்துள்ளோம்.

இதற்கு முந்தைய வசனங்களை வாசிக்கும் போது, ஆசாரியனை பசியோடு சந்திக்க நேரிடும் தாவீதின் கையில் எந்த ஆயுதமும் இருக்கவில்லை என்பதை அறியலாம். இதனால் ஆசாரியனிடம் ஆயுதம் கேட்கும் போது, கோலியாத்தை கொன்ற பழைய பட்டயத்தை குறித்து ஆசாரியன் கூறுகிறான். அதை கேட்ட தாவீது, அதற்கு நிகரில்லை; அதை எனக்குத் தாரும் என்று வாங்கி செல்கிறார்.

நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் நமக்கு அனுதினமும் யுத்தங்கள் உண்டு. யாரோடு நாம் யுத்தம் செய்ய வேண்டும் என்பதை எபேசியர்:6.12-ல் காண்கிறோம். அந்த யுத்தங்களை செய்ய தேவையான மற்றும் தகுதியான பாதுகாப்பு சாதனங்களின் பட்டியலை குறித்து எபேசியர்:6.14-17 வசனங்களில் வாசிக்கிறோம்.

சவுலுக்கு தப்பியோடும் தாவீதிற்கு எப்போது வேண்டுமானாலும் சத்துருக்களிடம் இருந்து ஆபத்து வரலாம் என்பதால், தனது பழைய சத்துருவாகிய கோலியாத்தின் மீதான வெற்றியை தாவீது நினைவுக் கூறுவதை இங்கு அறியலாம்.

ஒரு காலத்தில் தேவனுக்காக வைராக்கியமாக நின்று, கோலியாத்திற்கு எதிராக சவால் விட்டு, அவனை வீழ்த்த உதவியது அந்த பட்டயம் தான். இந்த பட்டயம் சத்துருவாகிய கோலியாத்திற்கு சொந்தமானது என்றாலும், தனக்கும் தனது மக்களுக்கும் ஒரு காலத்தில் ஜெயத்தை தந்தது. எனவே அந்த பட்டயமே, தற்போது தாவீதிற்கு ஏற்றதாக உள்ளது. இதனால் தான் தாவீது அதற்கு நிகரில்லை என்கிறார்.

இதுபோல நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் அவ்வப்போது சத்துருவிற்கு முன்பாக நாம் ஓடி போக வேண்டிய சந்தர்ப்பங்கள் வரலாம். அப்போது நம்மிடம் ஆயுதம் இல்லாமல் இருக்கக் கூடாது.

அப்படி ஆயுதம் இல்லாத பட்சத்தில், உடனே நமது பிரதான ஆசாரியனாகிய இயேசுவையோ, ஆசாரியர்களாகிய தேவ ஊழியர்களையோ சந்தித்து, நமக்கு முன் காலத்தில் ஜெயம் தந்த பழைய பட்டயத்தை குறித்து கேட்டு அறிந்து, அதை நம் வாழ்க்கையில் பெற்று கொள்வோம். அந்த பட்டயம், பரிசுத்த வேதாகமத்தின் வசனங்களே ஆகும்.

சில குறிப்பிட்ட பாவ பழக்கங்கள், இச்சைகள், ஆசைகள், எண்ணங்கள் ஆகியவற்றை ஜெயிக்க, சில நேரங்களில் நமக்கு உதவிய தேவனுடைய வசனங்களை நாம் எப்போதும் மனதில் வைத்து கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. ஏனெனில் நாம் உலகில் உள்ள வரை பாவங்களும், பாவ எண்ணங்களும் நம்மை பின்தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

இந்நிலையில் பழைய பாவ காரியங்கள் நம்மை மீண்டும் தாக்க வரும் சூழ்நிலைகளில், அதை ஜெயமெடுக்க வேத வசனங்களே உதவும். அதிலும் சில குறிப்பிட்ட வேத வசனங்கள் நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பெரும் பாதுகாப்பை அளிப்பதாக அமையும்.

கோலியாத்தின் பட்டயத்தை துணியில் சுற்றிய நிலையில், ஆசாரியன் வைத்திருந்தது போல, எப்போதோ எங்கேயோ படித்த அல்லது கேட்ட வேத வசனங்களை தேவன் உணர்த்தும் போது, அதை உறுதியாக பிடித்து கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் எதிர்கொள்ளும் போராட்டத்தில் ஜெயிக்க, அதற்கு நிகர் வேறெதுவும் இல்லை.

குறிப்பிட்ட நேரத்தில் நமக்கு ஜெயம் அளித்த வேத வசனங்கள், நம் நினைவிற்கு தேவன் தரும் போது, அதை ஏற்க மறுத்தால், சத்துருவின் முன் நாம் ஆயுதம் இல்லாத நிலையை அடைந்து, அவன் முன் வீழ்வது எளிதாகிவிடும்.

எனவே வீட்டிலும், சபையிலும், தேவ வசனங்களை கருத்தாக வாசித்து, ஆவியில் பட்டயம் கொண்டவர்களாக இருப்போம். அப்போது சத்துருவின் போராட்டத்திற்கு நாம் தைரியமாக எதிர்த்து நின்று ஜெயத்தை பெற முடியும்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்புள்ள தேவனே, எங்களின் ஆவிக்குரிய வாழ்க்கையில் பல போராட்டங்களில் ஜெயத்தை அளித்த வேத வசனமாகிய பட்டயத்தை, தேவ சமூகத்தில் இருந்து பெற்று கொள்ள உதவி செய்யும். இதன்மூலம் சத்துருவையும், அவன் மீதான யுத்தங்களையும் செய்து, ஜெயம் பெற கிருபை தாரும். சகலத்தையும் ஜெயங்கொண்ட உம்மை போல நாங்களும் ஜெயம் கொண்டவர்களாக மாற உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *